ரணில் விக்ரமசிங்கே
ரணில் விக்ரமசிங்கே

ரணகளமான ராவணத் தீவு: ரணிலால் மீளுமா இலங்கை?

மோசமான பொருளாதார நெருக்கடி, கழுத்தை நெரிக்கும் கடன் சுமை, பற்றியெரியும் வன்முறை, கனன்றுகொண்டிருக்கும் கோபத்துடன் காத்திருக்கும் மக்கள் என ஒரு களேபரமான காலகட்டத்தில் இலங்கையின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கிறார் ரணில் விக்ரமசிங்கே. 2015-ல் பிரதமரானபோதும் ராஜபக்ச ஏற்படுத்திச் சென்ற ரணகளத்தைச் சீர்செய்யும் பொறுப்பும் ரணில் மீதுதான் விழுந்தது. இந்த முறை நிலைமை முன்பைவிட பல மடங்கு சிக்கலானது என்பதுதான் கவனிக்கத்தக்க விஷயம்.

இத்தனைக்கும், சமீபத்தில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒற்றுமை அரசை உருவாக்கலாம் என முன்வைக்கப்பட்ட யோசனைகளை ரணில் ஏற்கவில்லை. பிரச்சினை உச்சமடைந்திருக்கும் நிலையில் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

முள்கிரீடம்

அதிபர் கோத்தபய ராஜபக்சவின் எதேச்சதிகார நடவடிக்கைகள், பிரதமர் மற்றும் அமைச்சர் பதவிகளில் இருந்த ராஜபக்ச சகோதரர்கள் நிகழ்த்திய அட்டூழியங்கள், கரோனா பெருந்தொற்றால் சரிந்துவிழுந்த சுற்றுலாத் துறை என ஏகப்பட்ட பிரச்சினைகளின் மொத்த விளைவையும் இலங்கை மக்கள் எதிர்கொண்டிருப்பதும், அரசை எதிர்த்து அவர்கள் நடத்திவந்த போராட்டங்களும் உலகறிந்தவை. அதன் உச்சமாக, மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கைவைத்ததால் வெடித்த வன்முறை இலங்கையைப் பற்றியெரியச் செய்துவருகிறது.

இதையடுத்து மகிந்த பதவி விலகினார். மக்களுக்குப் பயந்து ஓடி ஒளிந்தார். பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கோத்தபய விடுத்த அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா முதலில் மறுத்துவிட்டார். அதன் பின்னர் அவர் அதற்குச் சம்மதித்தாலும் பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கேவுக்கு வழங்கியிருக்கிறார் கோத்தபய. ரணிலுக்கு அது முள்கிரீடம்தான்!

பொருளாதாரப் பார்வை

1993 மே 1-ல், முதன்முதலாகப் பிரதமராகப் பொறுப்பேற்ற ரணில், தன் வாழ்நாளில் பல சவால்களையும் வெற்றி தோல்விகளையும் கடந்துவந்தவர். முன்னாள் அதிபர் ஜெயவர்தனேயின் உறவினர். 1980-களின் இறுதியில் அதிபர் ரணசிங்கே பிரேமதாசாவின் அமைச்சரவையில் கல்வித் துறை மற்றும் தொழில் துறை அமைச்சராகப் பதவிவகித்த ரணில், இலங்கை பங்குச் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தவர். கூடவே, வெளிநாட்டு முதலீடுகளையும் இலங்கைக்குப் பெற்றுத் தந்தவர். பியாகாமா சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக வழிவகுத்தவர். பொருளாதாரம் குறித்த அவரது பார்வை இலங்கைக்குப் பல்வேறு தருணங்களில் உதவியிருக்கிறது.

மைத்திரிபால சிறிசேனா
மைத்திரிபால சிறிசேனா

2015-ல் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்எல்எஃப்பி) அவரது அரசியல் எதிரியான ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசியக் கட்சியும் (யூஎன்பி) இணைந்து இலங்கையின் முதல் தேசியக் கூட்டணி அரசை ஏற்படுத்தின. அப்போதும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட கடும் கடன் சுமையை ஏற்க வேண்டிய சூழல்தான் இருந்தது. கூடவே, 2009 உள்நாட்டுப் போரில் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச அரசால் சர்வதேச அளவில் உருவாகியிருந்த அவப்பெயரையும் சுமக்க நேர்ந்தது. எனினும், மிகுந்த நம்பிக்கையுடன் அரசு நிர்வாகத்தை மேற்கொண்டார் ரணில்.

பேரியல் பொருளாதாரத்தை உறுதிப்படுத்துவது, வரி வருவாயை அதிகரிப்பது, பொது நிதியைச் சிறப்பாக நிர்வகிப்பது, பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பது என அவரது நடவடிக்கைகள் நம்பிக்கையளித்தன. எரிசக்தி, அடித்தளக் கட்டமைப்பு, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்பட பல்வேறு துறைகளில் நீண்டகால ஒத்துழைப்புக்குக் களம் அமைக்கப்பட்டது.

1954-க்குப் பிறகு முதன்முறையாக இலங்கை அரசின் செலவைவிட வரவு உபரியாக இருந்தது ரணிலின் கடந்த ஆட்சியின்போதுதான். அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது வரிவிதிப்பு முறையில் அவரது பிரத்யேக அணுகுமுறை. உதாரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக வரி விதித்த அவரது அரசு, குறைந்த வருவாய் கொண்டவர்களுக்கான வரிவிதிப்பில் கரிசனத்துடன் நடந்துகொண்டது. வெளியுறவு விவகாரங்களில் ஓரளவு நற்பெயரைப் பெற்றவர் ரணில். இந்தியா மட்டுமல்லாமல் மேற்கத்திய நாடுகளுடனும் தனிப்பட்ட முறையில் நல்லுறவைப் பேணுபவர். சர்வதேச ஜனநாயக சங்கம் (ஐடியூ) எனும் அமைப்பின் நிரந்தர உறுப்பினர்.

ஆட்சிமாற்றமும் அவலமும்

ரணிலால் இலங்கை மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரன், கருவூலப் பத்திர மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகார் ரணிலுக்கும் அதிபர் சிறிசேனாவுக்கும் இடையிலான முரண்களுக்கு முக்கிய முடிச்சாக அமைந்தது. அதன் பின்னர், 2019-ல் நடந்த ஈஸ்டர் குண்டுவெடிப்புகளை வைத்து ‘தேசப் பாதுகாப்பு’ குறித்த அச்சத்தைப் பரப்பியே வாக்காளர்களைத் தனது வசம் ஈர்த்த கோத்தபய, அதே ஆண்டில் நடந்த தேர்தலில் சிறிசேனாவை வென்று அதிபரானார். கையோடு தனது அண்ணனைப் பிரதமர் நாற்காலியில் அமரவைப்பதற்கான வேலைகளையும் தொடங்கினார். “அதிபரும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால்தான் நல்லது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விலக வேண்டும்” என்று மகிந்த வலியுறுத்தி வந்தார். அழுத்தம் அதிகரித்த நிலையில் ரணில் பதவி விலகினார்.

பின்னர் ராஜபக்ச சகோதரர்கள் வரிவிதிப்பில் மாற்றம் கொண்டுவந்தனர். கார்ப்பரேட் வரிகளை வெகுவாகக் குறைத்தது இலங்கையின் நிதிப் பற்றாக்குறைக்கு முக்கியக் காரணிகளில் ஒன்றாக அமைந்தது. கூடவே, தவறான பொருளாதாரக் கொள்கைகள், எல்லை மீறி வாங்கிய வெளிநாட்டுக் கடன்கள், இயற்கை விவசாயம் எனும் பெயரில் இலங்கையின் வேளாண்மையை நாசப்படுத்தியது என இலங்கையை ராஜபக்ச சகோதரர்கள் பல்வேறு விதங்களில் இம்சித்தது சமகால வரலாறு.

மக்களின் எதிர்பார்ப்பு

கொந்தளித்துக்கொண்டிருக்கும் மக்கள் புதிய பிரதமரின் வருகையால் சமாதானம் அடைந்துவிடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அவர்களுக்குத் தேவை ஆட்சி மாற்றம் மட்டுமல்ல. தங்களை வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடிக்கு நீண்டகாலத் தீர்வு வேண்டும் என அவர்கள் காத்திருக்கின்றனர். 1953-ல் இடதுசாரிக் கட்சிகள் ஒருங்கிணைத்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டம் இலங்கையை உலுக்கியது. அந்நாடு சுதந்திரமடைந்த பின்னர் முதன்முதலாக அரசுக்கு எதிராக மக்கள் நடத்திய மாபெரும் போராட்டம் அதுதான். ஏறத்தாழ அதேபோன்ற போராட்டம்தான் இப்போதும் நடந்துவருகிறது.

மகிந்தவுக்குப் பதிலாக ரணில் பிரதமராகிவிட்டாலும், கோத்தபய இன்னமும் அதிபர் பதவியில் நீடிப்பது மக்களை அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. தவிர, வன்முறையைக் கட்டுப்படுத்துவது எனும் பெயரில் ராணுவத்துக்கும் காவல் துறைக்கும் அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதும் மக்களை பீதியில் ஆழ்த்தியிருக்கிறது. தொடர்ந்து பரப்பப்படும் போலிச் செய்திகள், வதந்திகள் மக்களைப் பெருங்குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கின்றன.

சிறு வெளிச்சம்

பொருளாதாரப் பிரச்சினை இன்னமும் நீடிக்கிறது. ஜூலை மாதம் முதல் மாகாண அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட நிதியில்லாமல் தவிக்கும் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதை மறுத்திருக்கும் இலங்கை மத்திய வங்கி, அப்படியான சூழல் உருவானால் மேலும் புதிய கரன்ஸிகள் அச்சடிக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. ஏற்கெனவே, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க புதிய கரன்ஸிகளை அச்சடிப்பதை ஒரு தீர்வாக நினைத்திருக்கிறது இலங்கை நிதியமைச்சகம். ஏப்ரல் 8 முதல் மே 8 வரை 20.14 பில்லியன் இலங்கை ரூபாய் கரன்ஸி அச்சடிக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த முயற்சியால் பொருளாதார மீட்சிக்கு எந்தப் பலனும் ஏற்படாது என்கிறார்கள்.

மகிந்தவின் ஆதரவாளர்கள் தொடங்கிவைத்த வன்முறை, பெரும் கோபத் தீயாக மக்களிடமிருந்து வெடித்த நிலையில் ஒட்டுமொத்த இலங்கையும் பற்றியெரிவது போன்ற பதற்றச் சூழல் உருவானது. ஏற்கெனவே இலங்கை மீதான நம்பிக்கையை இழந்துவிட்ட சர்வதேச சமூகத்தின் பார்வையில் இது மேலும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்டது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்குத் தயாராகிவரும் பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிகள், இந்த வன்முறையால் தாமதமாகும் என்றும் பேசப்பட்டது.

இவற்றுக்கு இடையே, ரணில் பிரதமராகப் பதவியேற்ற பின்னர் ஒரு சில சாதகமான சமிக்ஞைகளும் தென்படுகின்றன. பெரும் வன்முறைக்கு நடுவே மகிந்த பதவிவிலகிய நிலையில், அடுத்த பிரதமர் யார் எனும் எதிர்பார்ப்பையெல்லாம் தாண்டி எப்போது கோத்தபய பதவிவிலகுவார் எனும் எண்ணம்தான் பலரிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் ரணில் நம்பிக்கை ஏற்படுத்தத்தான் செய்கிறார்.

டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்திருக்கிறது. அதேபோல் பங்குச் சந்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. நிதியுதவி வழங்க ஜப்பான் முன்வந்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் நிதியுதவி வழங்கும் எனத் தெரிகிறது.

இலங்கையின் மிகப்பெரிய அனல்மின் நிலையமான நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பழுதுபார்க்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் மின்வெட்டு நேர அளவு 3 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறது இலங்கை மின்சார வாரியம்.

பிரதமர் மோடியுடன் ரணில்...
பிரதமர் மோடியுடன் ரணில்...

இந்தியாவின் நிலைப்பாடு

இலங்கை பிரதமராக மே 12-ல் ரணில் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், மறுநாளே இலங்கைக்கான இந்தியத் தூதர் கோபால் பக்லே அவரைச் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. பிரதமர் ரணிலைச் சந்தித்த முதல் வெளிநாட்டுப் பிரதிநிதி அவர்தான்.

ஜனவரி முதல் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான கடனுதவி, நிவாரண உதவி உள்ளிட்டவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கியது. குறிப்பாக, டீசல் வாங்குவதற்காகவென்றே தனியாக 500 மில்லியன் டாலரை இந்தியா வழங்கியது.

தனது முந்தைய ஆட்சிக்காலங்களில் இந்தியாவுடன் நல்லுறவைப் பேணிய ரணில் இந்த முறையும் முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவுக்குத்தான் வரவிருக்கிறார்.

தொடரும் சவால்

எப்படிப் பார்த்தாலும் ராஜபக்ச குடும்பத்தினர் மூலம் ரணிலுக்குக் குடைச்சல்கள் தொடரவே செய்யும். அவர்கள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகள், கொலை வழக்குகள் போன்றவற்றை மென்மையாகக் கையாள்வதாக முந்தைய ஆட்சிக்காலத்தில் கடும் விமர்சனத்தைச் சந்தித்தவர் ரணில். இப்போது அதிபராக கோத்தபய கூடவே இருக்கிறார்.

போதாக்குறைக்கு எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவை அமரவைக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஆக, ரணிலின் நிலை - புலி வாலைப் பிடித்த கதைதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in