மீண்டும் சீரடையுமா இந்திய - நேபாள உறவு?

நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பா
நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பா

‘நேபாளத்துடனான இந்தியாவின் உறவு முறிய அனுமதிக்கப்போவதில்லை’ என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சீர்குலைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன. தலைவணங்க வேண்டிய அவசியமே ஏற்பட்டாலும்கூட, நமது அண்டைநாடான நேபாளத்துடனான உறவு சீர்கேடடைய அனுமதிக்க மாட்டோம்” என அவர் ஆவேசமாகக் குறிப்பிட்டிருக்கிறார். டிச.15-ல் உத்தராகண்டில் நடந்த தியாகிகள் நினைவுதின நிகழ்ச்சியில் பேசிய அவர், சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல் நிகழ்த்திய இந்த உரை, சீனாவின் வியூகங்களையும் தாண்டி நேபாளத்துடன் நெருங்கும் இந்தியாவின் முனைப்பைக் காட்டுகிறது. ஆனால், அது சாத்தியமா?

நீண்டகால உறவு

சிக்கிம், மேற்கு வங்கம், உத்தராகண்ட், உத்தர பிரதேசம், பிஹார் என 5 மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் நேபாள நிலப் பகுதிகள் அமைந்திருக்கின்றன. நில ரீதியாக மட்டுமல்ல இரு நாடுகளுக்கும் இடையில் மதம், கலாச்சார ரீதியிலான உறவு நெருக்கம் அதிகம். கல்வி, மருத்துவம் எனப் பல்வேறு தேவைகளின் அடிப்படையில், அந்நாட்டினரின் பயணம் இந்தியாவை நோக்கி நீளக்கூடியது. இரு நாட்டினரும் விசா இல்லாமல் பரஸ்பரம் இரு நாடுகளுக்கும் சென்றுவர முடியும்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

1990-களில்தான் ஜனநாயகப் பாதையில் நேபாளம் அடியெடுத்து வைத்தது. அந்த மாற்றத்துக்கு இந்தியாவும் தன்னளவில் உதவியது. அப்போது கையெழுத்தான பல்வேறு ஒப்பந்தங்கள் இருதரப்பு உறவில் கூடுதல் பசை சேர்த்தன. 1996-ல் மகாகாளி நதிநீர் ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. மோதி ஹாரி - அமலேக்கஞ்ச் பெட்ரோலிய பைப்லைன் திட்டத்தின் மூலம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் உற்பத்தி செய்யும் பெட்ரோலியம், பூமிக்கு அடியில் பதிக்கப்பட்ட குழாய் வழியே நேபாளத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. 1996-ல் முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்தை, 2019-ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். தெற்காசியாவில் இதுபோன்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை. இது இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.

ராணுவ ரீதியிலும் இரு நாடுகளுக்கும் இடையில் அதிகாரபூர்வமான தொடர்புகள் உண்டு. 1950 முதல் இரு நாடுகளின் ராணுவத் தளபதிகளை, கவுரவ ராணுவத் தளபதிகளாகப் பரஸ்பரம் இரு நாடுகளும் கவுரவித்து வருகின்றன. அந்நாட்டின் அரசியல் தலைவர்களின் ஆதர்சமாக இருந்தவர்கள் இந்தியத் தலைவர்கள்தான். கொல்கத்தாவில்தான் நேபாளி காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டது. அதேபோல், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யூஎம்எல்) இரண்டாக உடைந்ததன் பின்னணியில் இருந்தது, இந்தியாவுடனான மகாகாளி நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக எழுந்த கருத்து மோதல்கள்தான். இந்தியாவில் ஏற்படும் அரசியல் சிக்கல்களின்போது இங்குள்ள தலைவர்கள் அந்நாட்டில் தஞ்சமடைந்த வரலாறும் உண்டு.

அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையில் உரசல்கள் நிகழ்வதுமுண்டு. 1999-ல் டெல்லி - காட்மாண்டு இடையிலான இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்ட சம்பவத்தால், இரு நாடுகளுக்கும் இடையில் கசப்புணர்வு உருவானது. அதேபோல, 2000-ல், நேபாள மக்களைப் பிடிக்காது என நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கூறியதைத் தொடர்ந்து நேபாளத்தில் வசிக்கும் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மாதேசிகள் போராட்டம்
மாதேசிகள் போராட்டம்

மாதேசிகள் விவகாரம்

ஆனால், மாதேசிகள் போராட்டம் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே எழுந்த முரண் தான் பெரிய அளவில் பேசப்பட்டது. 2015-ல் நேபாளத்தில் கொண்டுவரப்பட்ட புதிய அரசமைப்புச் சட்டம் இரு நாடுகளுக்கும் இடையில் சிக்கலை ஏற்படுத்தியது. தராய் என்ற சமவெளிப்பகுதியில் வாழும் மாதேசிகளின் நலனையும் உள்ளடக்கியதாக அரசமைப்புச் சட்டம் இருக்க வேண்டும் என இந்தியா வற்புறுத்தியது. மாதேசிகளில் பெரும்பாலானோரின் பூர்விகம் இந்தியாதான். பல தருணங்களில் உதவிசெய்த நாடு என்றாலும், இந்தியாவின் இந்தத் தலையீட்டை நேபாளம் ரசிக்கவில்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான சரக்குப் போக்குவரத்தை இந்தியா முடக்குவதாகவும் நேபாளம் எதிர்ப்பு தெரிவித்தது.

எனினும், மாதேசிகளின் கோரிக்கைகளை ஏற்று அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்வதாக அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி உறுதியளித்தார். இதையடுத்து மாதேசிகள் ஒருவழியாகத் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான முரணும் முடிவுக்கு வந்தது. 2016-ல் இந்தியா வந்திருந்த அப்போதைய பிரதமர் கே.பி.சர்மா ஒலி, இரு தரப்புக்கும் இடையிலான உறவை மீண்டும் துளிர்க்கச் செய்தார். இரு தரப்புக்கும் இடையே இதுவரை பகை எனும் அளவுக்குச் சூழல் உருவாகிவிடவில்லை என்றாலும், இன்னமும் நிலைமை சிலாக்கியமாகிவிடவில்லை.

இதற்கிடையே, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி 2021 ஜனவரியில் இந்தியா வந்திருந்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவுமாறு அந்நாட்டின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அடுத்த வாரத்திலேயே 10 லட்சம் தடுப்பூசிகளை நேபாளத்துக்கு அனுப்பிவைத்தது இந்தியா. அடுத்த சில மாதங்களில் கரோனா பரிசோதனைக் கருவிகளும் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டன. இத்தனைக்கும் நேபாளத்தில் கரோனா பரவலுக்குக் காரணம் இந்தியாதான் என கே.பி.சர்மா ஒலி குற்றம்சாட்டியிருந்தார். இந்திய நிலப் பகுதிகள் அடங்கிய வரைபடத்தை நேபாளம் வெளியிட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்தியா, அவற்றை எல்லாம் பொருட்படுத்தவில்லை.

இந்தச் சூழலில், புஷ்ப கமல் தாஹால் (பிரசண்டா) தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, கே.பி.சர்மா ஒலியின் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதனால், அவரது ஆட்சி கவிழ்ந்தது. புதிய அரசு பொறுப்பேற்கும் வரை பிரதமர் பதவியில் நீடித்த கே.பி.சர்மா ஒலி, உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்துப் பதவி விலகினார். நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பா புதிய பிரதமரானார்.

கே.பி.சர்மா ஒலி
கே.பி.சர்மா ஒலி

கே.பி.சர்மா ஒலியின் அதிரடிப் போக்குகளால் கட்சிக்குள்ளும் அவரது செல்வாக்கு சரிந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (யூஎம்எல்) தலைவராக கே.பி.சர்மா ஒலி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சிக்குள் தனது செல்வாக்கைத் தூக்கி நிறுத்தும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார் ஒலி . நேபாளத்தில் அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமராகும் கனவும் அவருக்கு உண்டு.

சீனாவின் ஆதிக்கம்

என்ன தேவை என்றாலும் அண்டை நாடான இந்தியாவைத்தான் நேபாளம் முதலில் அணுக வேண்டியிருக்கும். மறுபுறம், மற்றொரு அண்டை நாடான சீனாவையும் நேபாளத்தால் தவிர்த்துவிட முடியாது. அந்நாடுகள் இரண்டுக்கும் இடையிலும் நீண்டகால உறவு உண்டு. அதுமட்டுமல்ல, உட்கட்டமைப்புகளுக்கு உதவுவது, கடனுதவி வழங்குவது என நேபாளத்துக்கு மேலும் நெருக்கமாகிவிட்டது சீனா. கரோனா தடுப்பூசிகளையும் வழங்கிவருகிறது. 2016-ல் முதன்முறையாக இரண்டு நாடுகளும் கூட்டு ராணுவப் பயிற்சியில் இறங்கியபோதே இந்தியாவில் அதிர்வுகள் கிளம்பின.

மாதேசி பிரச்சினையைக் கைவிட்டு, இரு நாட்டு உறவை நேர்க்கோட்டில் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இந்தியா இறங்கியற்குக் காரணம், நேபாளத்தில் சீனாவின் ஆதிக்கம் படரத் தொடங்கியதுதான். அதுவரை சீனாவுடன் நட்புறவையும் இந்தியாவுடன் மோதல் போக்கையும் கடைப்பிடித்த கே.பி.சர்மா ஒலி, இந்தியாவுடன் நல்லுறவைப் பேணத் தொடங்கியதன் பின்னணியிலும் ராஜதந்திர ரீதியிலான காரணிகள் இருந்தன. ஆனால், இப்போது நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது. நேபாளத்தின் இடதுசாரிக் கட்சிகள் சீனாவுக்கு ஆதரவளிக்கின்றன. அடுத்த தேர்தலில் இடதுசாரிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நெருக்கம் இன்னும் கூடுதலாகும்.

இந்திய அரசு இன்னமும் அணுக்கமாக நேபாளத்தைக் கையாண்டிருக்க வேண்டும் என்றே சர்வதேசப் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். வீராவேசமான உரைகளை நிகழ்த்துவதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. அதற்கு ராஜதந்திர ரீதியிலான அணுமுறை அவசியம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in