பாக். எல்லையில் திடீர் ஊடுருவல்கள்: ஒருவர் சுட்டுக்கொலை

பாக். எல்லையில் திடீர் ஊடுருவல்கள்: ஒருவர் சுட்டுக்கொலை

இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் தடுப்பை தாண்டி ஊடுருவ முயன்ற இருவேறு சம்பவங்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

எல்லை பாதுகாப்பு படையினர் இன்று காலை எதிர்கொண்ட இந்த நடவடிக்கைகளை அடுத்து எல்லை நெடுக கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இன்று(நவ.22) காலை எல்லை பாதுகாப்பு படையினர் வழக்கமான கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர். அப்போது ஆர்னியா செக்டர் பகுதியில் சர்வதேச எல்லையை கடந்து ஒரு நபர் இந்திய வேலியை தாண்ட முயன்றார். முதல்கட்டமாக அந்த மர்ம நபருக்கு பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்தனர். அதனை அந்த நபர் அலட்சியபடுத்தவே துப்பாக்கிச் சூடு நடத்தி அவரை வீழ்த்தினர்.

அதே போல ராம்கர் செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற நபரை எல்லை பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்தனர். பின்னர் அவரது உடைமைகளை பரிசோதித்தனர். எல்லை தாண்டிய இரு நபர்களும் பாகிஸ்தானியர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொள்ளப்படும் சர்வதேச எல்லை நெடுக பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அண்மை காலமாக மனித ஊடுருவலை குறைத்துக்கொண்டு ட்ரோன் வாயிலான உளவு மற்றும் ஆயுதக் கடத்தல்கள் பாகிஸ்தான் எல்லையில் அதிகரித்திருந்தன. தற்போது மீண்டும் மனித ஊடுருவல் அடையாளம் காணப்பட்டிருப்பதால் பாதுகாப்பு படைகள் கூடுதல் எச்சரிக்கை பெற்றுள்ளன. பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற சூழல் நிலவும்போதெல்லாம், அவற்றை திசை திருப்ப இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத செயல்களை பாக். உளவு அமைப்புகளின் உதவியோடு அரங்கேற்றுவது வழக்கம். இந்த வகையில் ஐயத்துக்குரிய ஊடுருவல்காரர்கள் அடுத்தடுத்து அடையாளம் காணப்பட்டிருப்பது சர்வதேச எல்லையில் பதட்டம் கூட்டியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in