நானே வருவேன்: போட்டியிலிருந்து ரிஷி சுனக்கை விலகியிருக்கச் சொன்னாரா போரிஸ் ஜான்ஸன்?

ரிஷி சுனக்குடன் போரிஸ் ஜான்ஸன்
ரிஷி சுனக்குடன் போரிஸ் ஜான்ஸன்

பிரிட்டன் பிரதமர் பதவியை லிஸ் ட்ரஸ் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அடுத்த பிரதமர் யார் எனும் கேள்விக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை. குழப்பமான இந்தச் சூழலில், அடுத்த பிரதமராக வருவார் என எதிர்பார்க்கப்படும் ரிஷி சுனக்குக்கு, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தடையாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்ஸன், பல்வேறு பிரச்சினைகள், குற்றச்சாட்டுகள் காரணமாக செப்டம்பர் 6-ல் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இதையடுத்து, அக்கட்சி சார்பில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் லிஸ் ட்ரஸ், 81,326 வாக்குகளுடன் வெற்றி பெற்று பிரதமரானார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் 60,399 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

பிரதமர் லிஸ் ட்ரஸ் அமல்படுத்திய பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அவர் மீதும், நிதியமைச்சராக இருந்த குவாஸி க்வார்டெங் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, குவாஸி க்வார்டெங் பதவிநீக்கம் செய்யப்பட்டார். சில நாட்கள் கழித்து லிஸ் ட்ரஸ்ஸும் பதவிவிலகினார்.

இதைத் தொடர்ந்து அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வேலைகளில் கன்சர்வேட்டிவ் கட்சி இறங்கியிருக்கிறது. அடுத்த பிரதமருக்கான போட்டியில், ரிஷி சுனக், சூயெல்லா பிரேவர்மேன், பென்னி மோர்டான்ட், பென் வாலஸ் ஆகியோருடன் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்ஸனின் பெயரும் அடிபடுகிறது.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாகத் தானே பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என போரிஸ் ஜான்ஸன் விரும்புவதாகத் தெரிகிறது. இதற்கிடையே, ரிஷி சுனக், பிரதமர் ரேஸில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச ஆதரவைத் திரட்டியிருக்கிறார். கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த 90-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். உண்மையில், 100 எம்.பி-க்கள் ஆதரவு அவருக்குக் கிடைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த நிலையை எட்டிவிட்டால், கட்சித் தலைவர் பதவியும் பிரதமர் பதவியும் அவருக்கு இயல்பாகவே கிடைத்துவிடும் என்கிறார்கள்.

இப்படியான சூழலில், கரீபியன் தீவுகளில் உள்ள டொமினிக்கன் குடியரசு நாட்டில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த போரிஸ் ஜான்ஸன், பிரதமர் ரேஸில் பங்கேற்பதற்காக லண்டனுக்கு விமானம் ஏறிவிட்டார்.

கூடவே, பிரதமர் பதவியைத் தானே ஏற்க விரும்புவதால், போட்டியிலிருந்து விலகியிருக்குமாறு ரிஷி சுனக்கை அவர் வலியுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை போரிஸ் ஜான்ஸனுக்கு 44 எம்.பி-க்களின் ஆதரவுதான் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், ரிஷி சுனக்கைப் போட்டியிலிருந்து விலக்கிவைக்க அவர் முயற்சிப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போரிஸ் ஜான்ஸன் அமைச்சரவையில் ரிஷி சுனக் நிதியமைச்சராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in