பைடனின் மனைவி, மகள் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை!

மொத்தம் 25 அமெரிக்கர்களுக்குத் தடை போட்ட புதின்
மனைவி ஜில் பைடனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மனைவி ஜில் பைடனுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐநா, நேட்டோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் பொருளாதாரத் தடைகளை விதித்துவருகின்றன.

எனினும், உக்ரைன் நகரங்கள் மீதான தாக்குதலை ரஷ்யப் படைகள் இன்னும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. இந்தச் சூழலில், உலகின் வளமான ஏழு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகியவற்றின் அதிகாரபூர்வமற்ற கூட்டமைப்பான ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள ஸ்லோஸ் எல்மாவ் ஹோட்டலில் நடந்துவருகிறது.

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்ட தலைவர்களுடன், ஐநா, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விடுத்த அழைப்பின்பேரில் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றிருக்கிறார். இந்தக் கூட்டத்தில் காணொலி வழியே நேற்று உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, இந்தப் போரில் அடுத்த சில மாதங்களில் உக்ரைனின் கை ஓங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

ஜி7 தலைவர்கள்
ஜி7 தலைவர்கள்

இந்தச் சூழலில் உக்ரைனுக்குக் கூடுதல் ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது குறித்து பல்வேறு உறுதிமொழிகளை அளித்திருக்கும் ஜி7 நாடுகள், ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்துக்குக் கூடுதல் தடை, ரஷ்யாவில் உற்பத்தியாகும் தங்கத்தை இறக்குமதி செய்ய தடை என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கியிருக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், மகள் ஆஷ்லி ஆகியோர் ரஷ்யாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜில் பைடன், சமீபத்தில் உக்ரைனுக்குச் சென்று அதிபர் ஸெலன்ஸ்கியின் மனைவியான ஸெலன்ஸ்காவுடன் மேற்கு உக்ரைன் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றுக்குச் சென்றுவந்தது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியின் மனைவி ஸெலன்ஸ்காவுடன் ஜில் பைடன்...
உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியின் மனைவி ஸெலன்ஸ்காவுடன் ஜில் பைடன்...

மேலும், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், முன்னாள் உயரதிகாரிகள் ஆகியோருடன், சூஸன் காலின்ஸ், மிட்ச் மெக்கென்னல், சார்லஸ் கிரேஸ்லி, கிர்ஸ்டன் கில்லிப்ராண்ட் ஆகிய அமெரிக்க எம்.பி-க்கள் என மொத்தம் 25 பேருக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத் துறை தெரிவித்திருக்கிறது. ’தி எண்ட் ஆஃப் ஹிஸ்டரி அண்ட் தி லாஸ்ட் மேன்’ புத்தகத்தை எழுதிய ஃப்ரான்சிஸ் ஃபுகுயாமாவும் இந்தத் தடைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in