உக்ரைன் எல்லைக்குச் செல்லும் அமெரிக்க அதிபர்!

போலந்தில் தஞ்சமடையும் அகதிகளின் நெருக்கடியை நேரில் பார்க்கிறார்
உக்ரைன் எல்லைக்குச் செல்லும் அமெரிக்க அதிபர்!

உக்ரைனில் போர் நிகழ்ந்துவரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று போலந்து நாட்டுக்குச் செல்கிறார். ரஷ்யப் படைகளின் தாக்குதலால், உக்ரனின் அண்டை நாடான போலந்தில் மட்டும் இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில், உக்ரைனிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிழக்குப் பகுதி நகரமான ஸெஸோவுக்குச் செல்லும் ஜோ பைடன், உக்ரைனிலிருந்து வரும் அகதிகளின் நிலையை நேரடியாக அறிந்துகொள்ளவிருக்கிறார். உக்ரைன் அகதிகள் குவிந்துவரும் நிலையில், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதில் போலந்து திணறிவருகிறது.

இந்தச் சூழலில், போலந்து அதிபர் ஆண்ட்ரே டுடாவைச் சந்தித்துப் பேசும் பைடன், உக்ரைன் அகதிகள் பிரச்சினை குறித்து விவாதிக்கவிருக்கிறார். உக்ரைன் விஷயத்தில் போலந்து மக்கள் செய்துவரும் உதவிகளுக்காக பைடன் நன்றி தெரிவிப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரின் ஜான் பியர் கூறியிருக்கிறார்.

முன்னதாக நேட்டோ தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துகொள்ள நேற்று முன்தினம் பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் சென்றடைந்தார் பைடன். உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது, ரஷ்யாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளை அணிதிரட்டுவது உள்ளிட்ட பணிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை ஐரோப்பிய கவுன்சில் தாமதமாக எடுத்திருப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், ஜோ பைடன் போலந்து செல்வது முக்கியமான தருணமாகப் பார்க்கப்படுகிறது.


Related Stories

No stories found.