‘பெருந்தொற்றைச் சிறப்பாகக் கையாண்டீர்கள்’ - குவாட் மாநாட்டில் கொண்டாடப்பட்ட மோடி!

‘பெருந்தொற்றைச் சிறப்பாகக் கையாண்டீர்கள்’ - குவாட் மாநாட்டில் கொண்டாடப்பட்ட மோடி!

கரோனா பெருந்தொற்றுச் சூழலை ஜனநாயக முறையில் வெற்றிகரமாகக் கையாண்டதாக, பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பாராட்டியிருக்கிறார். ஜப்பானில் இன்று தொடங்கியிருக்கும் குவாட் மாநாட்டின்போது நடந்த சந்திப்பின்போது இதை அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பான குவாட், ட்ரம்ப் ஆட்சிக்காலத்தின்போது ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் இதுவரை மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு மாநாடுகள் காணொலிச் சந்திப்பின் வழி நடத்தப்பட்டன. இந்நிலையில் குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு இன்று டோக்கியோவில் தொடங்கியிருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

ஜனநாயக முறையிலான நடவடிக்கைகளில் ஏற்படுவதைப் போன்ற தாமதங்கள் நேராமல், சீனா, ரஷ்யா போன்ற எதேச்சதிகார நாடுகளின் தலைவர்கள் முடிவுகளைத் துரிதமாக எடுத்து அவற்றை அமல்படுத்துவார்கள் எனும் கற்பிதத்தை உடைத்து ஜனநாயக நாடுகளாலும் சாதிக்க முடியும் என்று உலகுக்குப் பிரதமர் மோடி காட்டியிருப்பதாக ஜோ பைடன் பாராட்டினார்.

சீனா, இந்தியா ஆகிய இரண்டு நாடுகளும் ஏறத்தாழ ஒரே அளவு பரப்பளவைக் கொண்டிருக்கும் நிலையில், பெருந்தொற்றைக் கையாண்டதில் இந்தியா வெற்றியடைந்திருப்பதாகவும் சீனா தோல்வியுற்றிருப்பதாகவும் அதிபர் பைடன் கூறியிருக்கிறார். இந்தத் தகவலை வெளியிட்டிருக்கும் அதிகாரி ஒருவர், பிரதமர் மோடி குறித்த அதிபர் ஜோ பைடனின் புகழுரை திட்டமிடப்பட்டது அல்ல என்று கூறியிருக்கிறார்.

பிற தலைவர்களின் பாராட்டு

இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட தடுப்பூசிகள் பெருந்தொற்றுக் களச்சூழலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ் பாராட்டினார். தத்துவார்த்த விவாதங்களில் வெல்வதைக்காட்டிலும் இப்படியான வெற்றிகள் முக்கியமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவும் பெருந்தொற்று விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடுகளைப் பாராட்டினார். குவாட் தடுப்பூசி திட்டம் எனும் பெயரில் சமீபத்தில் தாய்லாந்து, கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை அனுப்பியதையும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, கம்போடியாவுக்கான தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்ச்சியில் அந்நாட்டின் பிரதமர் ஹுன் சென் நேரடியாகப் பங்கேற்றதையும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் நிகழ்ந்த க்ரோனா மரணங்களின் எண்ணிக்கை தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் சர்ச்சைக்குரிய தகவலை வெளியிட்டிருந்த நிலையில், உலகின் முக்கியத் தலைவர்கள் மோடியைப் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in