ரஷ்ய அமைச்சரைச் சந்திக்கவிருந்த பெலாரஸ் அமைச்சர் திடீர் மரணம்

விளாதிமிர் மாகேய்
விளாதிமிர் மாகேய்

ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸின் வெளியுறவுத் துறை அமைச்சர் விளாதிமிர் மாகேய் திடீரென மரணமடைந்தார்.

2012 முதல் அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த மாகேய், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்குப் பெரிய அளவில் ஆதரவு தெரிவித்தவர். நீண்டகாலம் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவர் என்றாலும், தனது நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டவர் எனும் விமர்சனம் அவர் மீது உண்டு.

பெலாரஸில் 2020-ல் அதிபர் தேர்தல் நடந்தது. அந்தத் தேர்தலுக்கு முன்னதாக அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் ரஷ்யாவைக் கண்டித்ததுடன், மேற்கத்திய நாடுகளுடன் பெலாரஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அதன் பின்னணியில் இருந்தவர்களில் மாகேயும் ஒருவர் எனக் கருதப்பட்டது. ஆனால், அவர் திடீரெனத் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ரஷ்யாவை ஆதரித்தார். மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலால்தான் அந்தப் போராட்டம் நடந்ததாகவும் விளக்கமளித்தார்.

 அதேபோல், உக்ரைன் போருக்கும் மேற்கத்திய நாடுகள்தான் காரணம் எனக் கூறினார். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு பெலாரஸ் எந்த உதவியும் செய்யாது என ஆரம்பத்தில் கூறியிருந்தார். எனினும், பெலாரஸைத் தளமாகக் கொண்டு உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், நேற்று அவர் காலமானதாக பெலாரஸ் வெளியுறவுத் துறை அமைச்சகம் செய்திக் குறிப்பு வெளியிட்டிருக்கிறது. ஆனால், அவரது மரணத்துக்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இது குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களும் அவரது மரணத்துக்கான காரணம் என்ன எனக் குறிப்பிடவில்லை.

ரஷ்யாவின் நட்பு நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பின் கூட்டத்தில் கடந்த வாரம் மாகேய் கலந்துகொண்டார். நாளை (நவ.28) ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவைச் சந்தித்துப் பேசவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in