ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை, அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி புதிய அரசு அமைத்தனர். இதையடுத்து இசை கேட்பதற்கு தடை உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் மக்களுக்கு விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் மற்றும் அவர்கள் கல்வி கற்கவும் தடை விதித்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான் அரசாங்கத்தின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அப்துல் ஹக்கீம் ஷரீ கூறுகையில், ‘‘ஷரியாத் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அரசியல் கட்சிகள் செயல்பட ஷரியத்தில் அடிப்படை இல்லை. அவர்கள் தேசிய நலனுக்கு சேவை செய்வதில்லை’’ என்றார்.