குழந்தை உணவுக்குத் தட்டுப்பாடு: அல்லலுறும் அமெரிக்க அன்னையர்!

குழந்தை உணவுக்குத் தட்டுப்பாடு: அல்லலுறும் அமெரிக்க அன்னையர்!

அமெரிக்காவில் ஒரு வயதுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகளுக்குத் தரப்படும் குழந்தை உணவுக்குத் திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தங்களிடம் பால் டின்கள் வைத்துள்ள இளம் தாய்மார்கள், தேவைப்படும் தங்களைப் போன்ற இளம் தாய்மார்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள். அதிகம் வாங்கி வைத்திருப்பவர்கள், அவசரத் தேவைக்குத் தங்களை அணுகுமாறு சமூகவலைதளங்களில் கோரிக்கை விடுக்கிறார்கள். இந்தக் குழந்தை உணவை ‘பேபி ஃபார்முலா’ என்று அழைக்கிறார்கள்.

இந்தத் திடீர் தட்டுப்பாட்டுக்குக் காரணம் உக்ரைன் – ரஷ்யா போரினாலும் பெருந்தொற்றினாலும் சரக்குகளை அனுப்புவதில் ஏற்பட்டுவரும் சிக்கல்கள்தான் என்கின்றனர். ஆனால் ‘அபாட் நியூட்ரிஷன்’ என்ற பாலுணவு நிறுவனம் மிச்சிகன் மாநிலத்தில் ஸ்டர்கிஸ் என்ற இடத்தில் உள்ள ஆலையில் தயாரித்த பால் டின் உணவு கெட்டுப்போயிருப்பதால் அவற்றைத் திரும்பப் பெறுமாறு அமெரிக்க உணவு-மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஆணையிட்டது. அதையடுத்தே தட்டுப்பாடு தொடங்கியது. வேறு சில பாலுணவு நிறுவனங்கள், தயாரித்து விற்கப்படாமல் கடைகளில் உள்ள உணவுகளைப் பாதுகாப்பு கருதி திரும்பப் பெற்றதாலும் கையிருப்பு வேகமாகக் குறைந்துவிட்டது.

பல ஊர்களில் சில்லறை விற்பனையாளர்கள் குழந்தைக்காரர்கள் வாங்கக்கூடிய – அதிகம் விற்பனையாகும் - ஓரிரு பிராண்டுகளை மட்டுமே வாங்கி வைக்கின்றனர். எனவே அவை விற்றுத் தீர்ந்துவிட்டால் மாற்று இல்லாமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ‘குழந்தை உணவு கிடைக்காவிட்டால் பதற்றம் வேண்டாம் எங்களை அணுகுங்கள்’ என்று குழந்தைகள் நல மருத்துவர்களும் மருத்துவத் துறை சார்ந்த சுகாதாரப் பணியாளர்களும் பொதுவான வேண்டுகோள்களை விடுத்துள்ளனர். இதனாலேயே இளம் தாய்மார்களிடையே பதற்றம் அதிகமாகிவிட்டது.

தாய்ப்பால்தான் சிசுக்களுக்கு நல்லது என்று பிரச்சாரம் செய்தாலும் கடைகளில் விற்கப்படும் குழந்தை உணவுகளையும் சேர்த்து வழங்கும் பழக்கம் உலகம் முழுவதும் பரவிவிட்டது. பல நிறுவனங்கள் குழந்தை உணவை சரிவிகித உணவாகவே தயாரித்து விளம்பரப்படுத்தி விற்கின்றன. சிறு குழந்தைக்கே போதிய அளவு சர்க்கரைச் சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், அயோடின், புரதம், கால்சியம் என்று அனைத்தையும் கலந்து தருகின்றன. இந்த உணவு சிசுக்களுக்குத் தாய்ப்பாலுடன் சேர்த்துத் தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. தாய்ப்பால் சுரக்காத தாய்மார்களின் கவலையைப் போக்கும் வகையில் இந்தக் குழந்தை உணவே தாய்ப்பாலுக்கு இணையான சுவையுடனும் தன்மையுடனும் தயாரிக்கப்படுகிறது. இந்த டின்களை வாங்கி பவுடரை வெந்நீரில் கரைத்தால் போதும் அருமையான பாலுணவு கிடைத்துவிடும்.

இதற்கிடையே இந்தப் பாலுணவை எப்படித் தயாரிக்கலாம் என்று கவலைப்படும் இளம் தாய்மார்கள் சமூக ஊடகங்களில் தேட ஆரம்பித்துவிட்டார்கள். இதை அறிந்துகொண்ட அமெரிக்க சுகாதாரத் துறை, ‘நீங்களாக எதையாவது தயாரித்து கொடுக்காதீர்கள், குழந்தைகளுக்கு ஒவ்வாமை இருந்தால் அது வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துவிடும் எனவே பொறுமையாக இருங்கள்’ என்று ஆலோசனைகளைக் கூறுகிறது. ஒரு சின்ன பிரச்சினை இப்போது பெரிய சிக்கலாகிவிட்டது.

பெண்கள், சிசுக்கள், குழந்தைகளுக்கான அமெரிக்க ஃபெடரல் அரசின் சிறப்பு கூடுதல் ஊட்டச்சத்து உணவுத் திட்டம், மிகப் பெரிய குழந்தை உணவு தயாரிப்பு நிறுவனம் ‘அபாட்’ என்பதன் தயாரிப்புகளையே வாங்கச் சொல்கிறது. வேலையில்லாமல் அரசின் மாதாந்திர உதவித் தொகை பெறும் ஏழைக் குடும்பங்கள் பெரும்பாலும் இதைத்தான் வாங்க முடியும் என்ற நிலையில் இருக்கின்றன. எனவே சந்தையில் வேறு பொருள் கிடைத்தாலும் அதன் விலை கருதியோ, அதன் சுவை வேறாக இருந்தால் குழந்தை சாப்பிடாவிட்டால் என்ன செய்வது என்று தயங்கியோ, புதிய பிராண்டால் ஒவ்வாமை ஏற்பட்டால் என்ன செய்வது என்று அஞ்சியோ தட்டுப்பாடு குறித்துப் பெரிதும் கவலைப்படுகிறார்கள். அதற்காக ஃபெடரல் அரசே இப்போது மாற்று நிறுவனங்களின் பிராண்டுகளையும் வாங்கிக்கொள்ள ஆலோசனைகளை வழங்குகிறது.

இதற்கிடையே இளம் தாய்மார்களிடையே புதிய சகோதரத்துவம் வலுப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒருவர் ஏதோ ஒரு கடையில் குழந்தை உணவு கிடைப்பதைப் பார்த்துவிட்டால் உடனே தன் போன்ற பிற இளம் தாய்மார்களுக்குத் தகவல் தந்து உடனே வாங்கிக்கொள்ளச் சொல்கிறார்கள் அல்லது தாங்களே வாங்கிப்போய் தருகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய பாட்டிமார்கள் தங்கள் காலத்திய குழந்தை உணவுகளை நினைவுபடுத்தி அவற்றைத் தயாரிக்கும் வழிமுறைகளையும் சொல்லி ஆற்றுப்படுத்துகிறார்கள். சிறு குழந்தைகள் உள்ள வீடுகளுக்கெல்லாம் பிற உறவினர்கள் போன் செய்து, ‘குழந்தைக்கு பால் டின் இருக்கிறதா?’, ‘நான் வாங்கி அனுப்பட்டுமா?’, ‘என்ன பிராண்டு பயன்படுத்துகிறாய்?’ என்றெல்லாம் பாசத்துடன் கேட்கிறார்கள். யார் எங்கு சந்தித்துக்கொண்டாலும் முதலில் இந்தக் குழந்தை உணவு தட்டுப்பாடு குறித்துத்தான் முதலில் பேசுகிறார்கள்.

தாய்ப்பாலுக்கு மிஞ்சி எதுவுமில்லை என்றாலும் தாய்க்குப் பால் சுரக்காவிட்டாலோ குழந்தை அருந்த மறுத்தாலோ பசுவின் பாலைக் கொடுப்பது நம் நாட்டு வழக்கம். அதனாலேயே பசுவை ‘கோ-மாதா’ என்று வணங்குகிறோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வயிற்று உபாதை, காய்ச்சல் என்று ஆங்கில முறை மருத்துவர்களிடம் சென்றால்கூட பெரியவர்களைக்கூட கஞ்சி அல்லது பசும்பால் மட்டுமே சாப்பிடச் சொல்வார்கள். உடல் நிலை சற்று தேறத் தொடங்கிய பிறகே ரொட்டி, இட்லி சாப்பிடச் சொல்வார்கள்.

பால் பவுடரை அமெரிக்காவிலிருந்து தருவித்து அப்படியே நீரில் கரைத்து குழந்தைகளுக்குப் புகட்டிய காலம் ஒன்று இருந்தது. இப்போது அறிவியல் வளர்ச்சி காரணமாக சிறிய தட்டுப்பாடுகூட பெரிய கவலைகளை ஏற்படுத்திவிடுகிறது. குழந்தை உணவு என்பது மிக மிக முக்கியமானது. பெருந்தொற்றுக் காலத்தில் ஏராளமான குழந்தைகள் தந்தைமார்களின் வேலையிழப்பு - வருமானக் குறைவால் ஊட்டச்சத்தை இழந்தனர். இப்போது உக்ரைன்-ரஷ்யா விவகாரத்தால் கோடிக்கணக்கான குழந்தைகள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள் பட்டினி கிடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது சமுதாயத்தின் கடமை. இனியும் பாராமுகமாக இல்லாமல் போர்களை நிறுத்துவதுடன் ஆப்கானிஸ்தான், உக்ரைன், மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் குழந்தைகளின் நலனில் அனைவரும் அக்கறை காட்ட வேண்டும்!

Related Stories

No stories found.