தாக்கப்படும் மாணவர்கள்... அனைத்து இந்தியர்களையும் மீட்குமா ‘ஆபரேஷன் கங்கா’?

தாக்கப்படும் மாணவர்கள்... அனைத்து இந்தியர்களையும் மீட்குமா ‘ஆபரேஷன் கங்கா’?

ரஷ்யாவின் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி சவாலானதாக மாறியிருக்கிறது. உக்ரைன் எல்லையைக் கடக்க முயலும் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன.

போர் தொடங்குவதற்கு முன்பாகவே, உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்புமாறு வெளியுறவுத் துறை அமைச்சகமும், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்தியத் தூதரகமும் அறிவுறுத்தியிருந்தன. இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, போர் தொடங்குவதற்கு முன்பு 4,000 பேர் நாடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ எனும் பெயரில் மீட்பு நடவடிக்கைகளை அரசு எடுத்துவருவதாக, வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா கூறியிருக்கிறார். அங்கு இன்னமும் 15,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியிருக்கும் நிலையில், நில எல்லை வழியே உக்ரைனிலிருந்து ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாகியா போன்ற நாடுகளுக்கு இந்தியர்களை வரச் செய்து அங்கிருந்து அவர்களை விமானம் மூலம் மீட்பது இந்நடவடிக்கையின் முக்கிய நோக்கம்.

இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா
இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா

ருமேனியா, ஹங்கேரி ஆகியவற்றின் வழியே ஆயிரக்கணக்கான இந்தியர்கள் விமானம் மூலம் வெளியேறியிருக்கிறார்கள் என ஹர்ஷவர்தன் சொல்கிறார். இதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்த வெளியுறவுத் துறை அமைச்சகம், ரஷ்ய மொழி பேசத் தெரிந்த அதிகாரிகள் அடங்கிய குழுவை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லாவின் கூற்றுப்படியே, ரஷ்யப் படைகளின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் கிழக்கு மற்றும் தென்கிழக்கு உக்ரைன் பகுதியில் தங்கியிருக்கும் இந்தியர்களை மீட்பது சிரமமான காரியமாகியிருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருப்பதாகவும், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கிவருவதாகவும் ஷ்ரிங்க்லா கூறியிருக்கிறார்.

இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க, கீவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டது. தூதரகத்தின் சார்பில் புகலிடம், உணவு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் எல்லையைக் கடப்பதுதான் இந்திய மாணவர்களுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கிறது.

உக்ரைனியர்களும், அங்கு வசித்துவந்த பிற நாட்டவர்களும் லட்சக்கணக்கில் அண்டை நாடுகளுக்குத் தப்பி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் உக்ரைனின் அண்டை நாடுகளில், குறிப்பாகப் போலந்தில் கடும் நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. இது பிரச்சினைக்குரிய விஷயம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்த நெரிசலுக்கு இடையில் இந்திய மாணவர்கள் தாக்கப்படும் அவலமும் நடக்கிறது.

போலந்து எல்லையைக் கடக்க விடாமல், இந்திய மாணவர்களை உக்ரைன் காவலர்கள் தடுப்பதாகவும், முகத்தில் குத்துவது, இரும்புத் தடி கொண்டு அடிப்பது, பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடிப்பது என மூர்க்கத்தனமாக நடந்துகொள்வதாகவும், தங்களை விலங்குகளைப் போல அங்கிருந்து சில மாணவிகள் இந்திய ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். சிலருக்குக் காயம், எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். சக்கரம் பொருத்தப்பட்ட சூட்கேஸை இழுத்துச் செல்லும் இந்திய மாணவர் ஒருவரை, சீருடை அணிந்த ஒரு காவலர் தாக்கும் காணொலி வெளியாகியிருக்கிறது.

எல்லையைக் கடந்து செல்ல உக்ரைனியர்களுக்கு அனுமதி வழங்கும் அந்நாட்டு அதிகாரிகள், இந்தியர்களுக்கு அனுமதி மறுப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால், பலர் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கே திரும்பிச் செல்கிறார்கள். இந்நிலையில், இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பது பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in