அசோக் எல்லுசாமியும், எலான் மஸ்க்கும்: கூகுளை குடையும் தமிழர்கள்

அசோக் எல்லுசாமியும், எலான் மஸ்க்கும்: கூகுளை குடையும் தமிழர்கள்
அசோக் எல்லுசாமி மற்றும் எலான் மஸ்க்

யாரிந்த அசோக் எல்லுசாமி?- இதுதான் கூகுளை தீவிரமாக குடைந்துவரும் தமிழர்களின் கேள்வியாக தொக்கி நிற்கிறது.

கமல்ஹாசன் போலவே எலான் மஸ்க்கின் ட்விட்டர் பதிவுகளும் அவ்வப்போது அமைந்துவிடும். அப்படி அண்மையில், தனது டெஸ்லா கார் நிறுவனத்தின் ஆட்டோ பைலட் அணியின் முதல் ஊழியர் இவர்தான் என அசோக் எல்லுசாமி என்பவர் பற்றி பதிவிட்டிருந்தார் எலான் மஸ்க். ஆட்டோ பைலட் அணியின் தலைவரான அசோக் எல்லுசாமிக்கு, அப்படி வித்தியாசமான அறிமுகம் தந்திருந்தார் எலான் மஸ்க்.

அசோக் எல்லுசாமி என்ற பெயரும், முகமும் தமிழ்ப் பின்னணியில் இருந்ததில், உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் கூகுளைக் குடைய ஆரம்பித்தனர். கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலை பொறியியல் பட்டம் முடித்து, கார்னகி பல்கலைக்கழகத்தில் ரோபாடிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்கிறார் அசோக் எல்லுசாமி. முன்னதாக ஃபோக்ஸ்வேகன் உட்பட ஒருசில வாகன நிறுவனங்களின் மென்பொருள் துறையிலும் பணியாற்றி இருக்கிறார்.

கடந்த பல ஆண்டுகளாக டெஸ்லாவில் பணியாற்றி வந்தபோதும் வெளியுலகில் அதிகம் அறியப்படாதவர் இந்த அசோக் எல்லுசாமி. டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் கனவுகளை இவர் தலைமையிலான அணியே சாத்தியமாக்கி இருக்கிறது. பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் காராக அறிமுகமான டெஸ்லா, அதன் ஆட்டோ பைலட் வசதிக்காக பெரும் வரவேற்பை பெற்றது. விமானம் ஓட்டுவதுபோல, காரை ஆட்டோ பைலட் மோடில் வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கலாம். அவ்வப்போது தனது இருப்பை வாகனத்துக்கு அறிவிக்கும்படியாய் வாகன ஓட்டுநர் சிலதை செய்தால் போதும். கார் ஆட்டோமேடிக்காக தன் பாதையில் சென்றுகொண்டிருக்கும்.

எலான்மஸ்கின் கனவான இந்த ஆட்டோ பைலட் சாத்தியத்தை உருவாக்கிய அசோக் எல்லுசாமி குறித்து, பாட் காஸ்ட் பேட்டி ஒன்றில் எலான் புகழ்மாலை சூட்டியிருந்தார். ”நிறுவனரான எனக்கும், ஆட்டோபைலட் அணியின் இயக்குநரான இன்னொருவருக்குமே பெயர் சேர்ந்து வருகிறது. ஆனால் இதன் பின்னணி ஏராளமானோர் இருக்கின்றனர்” என்ற எலான் மஸ்க் அந்த வகையில் அசோக் எல்லுசாமி குறித்தும் அறிமுகம் தந்திருந்தார்.

இந்த அசோக் எல்லுசாமி இறுதியில் தமிழராகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறார். இணையத்தில் அவர் பதிந்திருக்கும் சுய விபரப் பட்டியலில், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளை குறிப்பிட்டிருந்தபோதும், அவற்றில் தமிழுக்கே முக்கியத்துவம் தந்திருந்தார். இதர விபரங்களை இனி அசோக் எல்லுசாமியே சொன்னால்தான் ஆச்சு!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in