`மதவெறியர்களை ஊக்குவிக்க வேண்டாம்' - இந்தியாவுக்கு தாலிபான்கள் அறிவுரை

`மதவெறியர்களை ஊக்குவிக்க வேண்டாம்' - இந்தியாவுக்கு தாலிபான்கள் அறிவுரை

நபிகள் நாயகத்திற்கு எதிராக பாஜக முன்னாள் நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கு உலகின் பல நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், 'மத உணர்வுகளை புண்படுத்தும் மதவெறியர்களை ஊக்குவிக்க வேண்டாம்' என இந்திய அரசுக்கு தாலிபான்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

பாஜக முன்னாள் நிர்வாகிகள் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் பற்றி கூறிய கருத்துக்களுக்கு ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், ஜோர்டான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேஷியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளன.

பாஜக முன்னாள் நிர்வாகிகளின் இந்த கருத்துக்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ள தாலிபான் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத், "புனித இஸ்லாம் மதத்தை அவமதிக்கும், இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் இதுபோன்ற வெறியர்களை அனுமதிக்கவோ, ஊக்குவிக்கவோ வேண்டாம் என்று இந்திய அரசை கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு நிர்வாகி நபிகளுக்கு எதிராக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட் அரசு வன்மையாகக் கண்டிக்கிறது" என்று கூறினார்.

modi
modi

நபிகளுக்கு எதிரான கருத்துக்களுக்கு பல இஸ்லாமிய நாடுகளிலும் எதிர்ப்பு அதிகரித்ததால் ஞாயிற்றுக்கிழமையன்று நுபுர் சர்மாவை இடைநீக்கம் செய்தும், நவீன் ஜிண்டாலை கட்சியிலிருந்து நீக்கியும் பாஜக நடவடிக்கை எடுத்தது. இதனைத் தொடர்ந்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், "எந்தவொரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்திற்கும் பாஜக எதிரானது. அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ எங்கள் கட்சி ஊக்குவிக்காது" என்று கூறியிருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in