மெர்சல் காட்டிய மெஸ்ஸி: உலகமே கொண்டாடும் அர்ஜென்டினாவின் வெற்றி!

மெர்சல் காட்டிய மெஸ்ஸி: உலகமே கொண்டாடும் அர்ஜென்டினாவின் வெற்றி!

36 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜென்டினா அணி மீண்டும் கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனால் நட்சத்திர வீரர் மெஸ்ஸியின் கனவு கணவாகியது.

கத்தாரில் நேற்று நடைபெற்ற 22-வது உலகக்கோப்பை கால்பந்து தொடரின்

இறுதிப்போட்டியில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், ஹூகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் பரபரப்பாக விளையாடின. ஆட்டத்தின் 23 வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மெஸ்ஸி அசத்தலான கோலினை அடித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஏஞ்சல் டி மரியா மற்றொரு கோல் அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா 2 கோல்கள் விளாசியது.

பின்னர், ஆட்டத்தின் 2-வது பாதியில் பிரான்ஸ் வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் பிரான்சுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிலியன் எம்பாபோ கோல் அடித்தார். இதனையடுத்து 81-வது நிமிடத்தில் எம்பாபோ மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். எனவே முழுக்க முழுக்க அர்ஜென்டினாவின் கையில் இருந்த ஆட்டம், எம்பாபோ அடித்த இரண்டு கோல்களின் காரணமாக பரபரப்பான சூழலை எட்டியது.

வழக்கமான 90 நிமிடங்கள் முடிவில் ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனால், தலா 15 நிமிடங்கள் வீதம் மொத்தம் 30 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் 107-வது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் அடித்தார். அந்த கோல் மூலம் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலைக்கு வந்தது.

ஆனால், 118-வது நிமிடத்தில் கிடைத்த மற்றொரு பெனால்டி வாய்ப்பை பயன்படுத்திய பிரான்ஸ் வீரர் எம்பாபோ கோல் அடித்தார். இதனால், பிரான்ஸ் அணியின் கோல் எண்ணிக்கையும் 3 ஆக அதிகரித்தது.

இதனால் ஆட்டம் 3-3 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. எனவே, பெனால்டி ஷூட்-அவுட் முறை கொண்டுவரப்பட்டது.

இதன்படி இரு அணிகளுக்கும் வழங்கப்படும் தலா 5 வாய்ப்புகளில் யார் அதிக கோல் அடிக்கிறார்களோ அவர்கள் வெற்றிபெற்றவர்கள் என்று அறிவிக்கப்படுவர்.

இந்த முறையில் முதல் வாய்ப்பு பிரான்ஸுக்கு வழங்கப்பட்டது. அதில், பிரான்ஸ் வீரர் எம்பாபோ முதல் கோல் அடித்தார்.

அவருக்கு அடுத்து அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியும் அபாரமாக கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது பெனால்டி ஷுட் வாய்ப்புகளை பிரான்ஸ் தவற விட்டது, ஆனால் அர்ஜென்டினா அவற்றை கோலாக மாற்றியது.

இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் பெனால்டி ஷுட்டில் முன்னிலை பெற்ற அர்ஜென்டினா அபார வெற்றிபெற்று உலகக்கோப்பை கால்பந்து சம்பியனானது.

உலகக்கோப்பையை அர்ஜென்டினா கேப்டனும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.

அர்ஜென்டினா கால்பந்து உலகக்கோப்பையை வெல்வது இது 3-வது முறை ஆகும். இதற்கு முன்பு அந்த அணி 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அர்ஜென்டினாவுக்கு கோப்பையை பெற்றுத் தந்துள்ளார் மெஸ்ஸி. இந்த வெற்றியின் மூலம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற லியோனல் மெஸ்ஸியின் கனவு நனவானது. அர்ஜென்டினாவின் வெற்றியை உலகமே கொண்டாடி வருகிறது

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in