‘நீங்கள் பயங்கரவாதியா?' - விமான நிலையத்தின் விநோத வினா!

‘நீங்கள் பயங்கரவாதியா?' - விமான நிலையத்தின் விநோத வினா!

9/11 தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றன. விமானப் பயணிகளுக்கான சேவைகளுக்காக ‘கியாஸ்க்’ எனப்படும் தானியங்கி சாதனங்களும், கண்காணிப்புக்காக நவீன ரக கேமராக்களும் விமான நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கின்றன. கூடவே, முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்பம், பயணியின் பயோமெட்ரிக் தரவுகளைச் சேகரிக்கும் தொழில்நுட்பம் போன்றவையும் அமெரிக்க விமான நிலையங்களில் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்த வகையில், விமான நிலையத்துக்குள் நுழையும் பயணியிடம், அவரது சுயவிவரங்களைக் கேட்கும் தானியங்கி அமைப்பும் பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் ஒரு விமான நிலையத்தில் உள்ள ‘கியாஸ்க்’ சாதனத்தில், பயணிகளிடம் விவரம் கேட்கும் கேள்விகளில் ஒன்றாக, ‘நீங்கள் பயங்கரவாதியா?’ எனும் கேள்வியும் இடம்பெற்றிருக்கிறது. கூடவே, ‘ஆம்’, ’இல்லை’ எனும் தெரிவுகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து ட்வீட் செய்திருக்கும் அஸாத் சாம் ஹன்னா எனும் சுயாதீன பத்திரிகையாளர், ‘அமெரிக்க விமான நிலையத்தில் அடுத்தகட்ட பாதுகாப்பு’ என்று அதில் கிண்டலாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இதையடுத்து ட்விட்டர்வாசிகள் இது குறித்து விவாதத்தில் இறங்கியிருக்கின்றனர். ‘என்ன கேள்வி இது? ஒரு இயந்திரம் இப்படியெல்லாம் கேள்வி எழுப்பும்போது, மனிதர்கள் பொய் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்துவிட முடியாதா?’ எனச் சிலர் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

சிலரோ, ‘ஒருவேளை நீங்கள் பொய் சொல்லியிருந்தால், பிற்பாடு அதைக் கண்டுபிடிக்கும் அதிகாரிகள் உங்கள் மீது கூடுதல் புகார்களைப் பதிவுசெய்வார்கள்’ என்று கூறியிருக்கிறார்கள்.

என்னதான் நவீன தொழில்நுட்பம் என்றாலும், மனிதர்களுக்கு இடையிலான உரையாடலாக இருந்தால்தானே உண்மை நிலவரம் தெரியும் என்கிறார்கள் சிலர். சரிதானே!

Related Stories

No stories found.