ஜிம், பூங்கா செல்ல பெண்களுக்குத் தடை: ஆப்கனில் தொடரும் அடக்குமுறை

ஜிம், பூங்கா செல்ல பெண்களுக்குத் தடை: ஆப்கனில் தொடரும் அடக்குமுறை

ஆப்கானிஸ்தானில் பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்களுக்கு செல்ல பெண்களுக்குத் தடை விதித்து தாலிபன் ஆட்சியாளர்கள் புது உத்தரவிட்டுள்ளனர்.

பொருளாதார சரிவு, உணவு பஞ்சம், எரிபொருள் தட்டுப்பாடு, வேலையின்மை, சுகாதார சிக்கல்கள் என ஆப்கானிஸ்தானை பல்வேறு பிரச்சினைகள் அழுத்திக்கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு முக்கியத்துவம் வழங்காது தங்களது அடிப்படைவாத இலக்குகளை அடைவதிலேயே தாலிபன் ஆட்சியாளர்கள் மும்முரமாக உள்ளனர். ஷரியா எனப்படும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்தும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை பெண்களுக்கு குறிவைத்து தாலிபன்கள் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் பெண்கள் ஹிஜாப், புர்கா உள்ளிட்டவற்றை அணிந்தே வெளியில் நடமாடுவதை உறுதிசெய்து வருகிறார்கள். நாட்டின் நல்லொழுக்கத் துறை அமைச்சகம் இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

ஆப்கனின் பூங்கா, ஜிம் போன்ற இடங்களில் பெண்கள் புழங்க தனி வசதி, ஹிஜாப் அணிவதை உறுதிபடுத்துவது ஆகியவற்றில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுவதாக தாலிபன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பெண்களுக்கான உரிய வசதிகளை தயார் செய்யுமாறு இவற்றின் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டும், அவகாசம் அளிக்கப்பட்டும் அவை முறையாக செய்யப்படவில்லை என்றும் அமைச்சகம் குறைபடுகிறது. ’அளிக்கப்பட்ட 15 மாத அவகாசம் முடிவடைந்ததால், ஜிம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் பெண்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது’ என தாலிபன்கள் தற்போது அறிவித்துள்ளார்கள். குடும்ப ஆண் துணையின்றி வீட்டைவிட்டு பெண்கள் தனியாக வெளியே நடமாடவும் தாலிபன்கள் ஏற்கனவே தடை விதித்திருந்தனர்.

ஈரானில் தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பல்வேறு நாடுகளிலும் முழுமூச்சாக பரவி வருகையில், ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன்கள் பெண்களுக்கு எதிராக தீவிரம் காட்டுகிறார்கள். ஆப்கானிஸ்தானுக்கான அயலக நிதியுதவிகளை பணயமாக்கி, அந்நாட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை மேற்கு நாடுகள் வலியுறுத்தி வந்தபோதும், தாலிபன்களின் தடாலடி போக்கு அதற்கு இடம்கொடாது தொடர்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in