‘அதிபர் ஒழிக!’ - அதீத கட்டுப்பாடு ஏற்படுத்திய மரணங்களால் ஆவேசப்படும் சீனர்கள்

‘அதிபர் ஒழிக!’ - அதீத கட்டுப்பாடு ஏற்படுத்திய மரணங்களால் ஆவேசப்படும் சீனர்கள்

கரோனா பரவல் கட்டுப்பாடு எனும் பெயரில் அதீத கட்டுப்பாடுகளால் ஏற்கெனவே ஆவேசத்தில் இருக்கும் சீனர்கள், சமீபத்தில் நடந்த தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, கடும் கட்டுப்பாட்டு விதிமுறைதான் காரணம் எனக் கொந்தளிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கூடவே, அதிபர் ஜி ஜின்பிங் ஒழிக எனும் முழக்கமும் பலமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது.

பெரும்பாலான நாடுகள், கரோனா வைரஸுடன் வாழப் பழகுவது என முடிவெடுத்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. எனினும், கரோனா வைரஸ் பரவல் தொடங்கியதாகக் கருதப்படும் சீனாவில், சமீபகாலமாகப் பெருந்தொற்றுப் பதற்றம் ரொம்பவே அதிகரித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக, தினமும் சராசரியாக 40,000 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அரசும் கரோனா பரவலைத் தடுக்க மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியிருக்கிறது.

இந்தச் சூழலில், ஜின்ஜியாங் பிராந்தியத்தின் தலைநகரான உரும்கி நகரில் உள்ள கட்டிடம் ஒன்றில், நவம்பர் 24-ல் நடந்த தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். அந்தக் கட்டிடம் கரோனா கட்டுப்பாடு எனும் பெயரால், மக்கள் வெளியேறிச் சென்றுவிடாத வகையில் பூட்டிவைக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே தீவிபத்திலிருந்து தப்பிக்க முடியாமல் உயிரிழப்புகள் நேர்ந்ததாகவும் சமூகவலைதளங்களில் சீனர்கள் பலர் விமர்சித்திருக்கின்றனர். எனினும், அரசுத் தரப்பு அதை மறுத்திருக்கிறது. இந்நிலையில், அதிபர் ஜி ஜின்பிங் அரசுக்கு எதிராக சீனாவின் பல பகுதிகளில் மக்கள் போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.

உரும்கி நகரில் நவம்பர் 25-ல் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று இரவு ஷாங்காய் நகரிலும் பெரிய அளவிலான போராட்டம் நடந்தது. இன்று காலையும் போராட்டம் தொடர்ந்தது. நாடு முழுவதும் ஊரடங்கை ரத்துசெய்யுமாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ‘சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒழிக, ஜி ஜின்பிங் ஒழிக’ என்று சிலர் முழக்கம் எழுப்பினர். பல இடங்களில் போலீஸாரின் தடைகளையும் எதிர்த்து மக்கள் ஆவேசமாகக் கோஷமிட்டனர்.

மெழுகுவர்த்தி ஏந்தி நடத்தப்படும் போராட்டங்கள் தலைநகர் பெய்ஜிங் உட்பட பல நகரங்களுக்குப் பரவி வருகின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in