தழைக்குமா தடையற்ற வர்த்தகம்?

உலக வர்த்தக அமைப்பின் மாநாடு: ஒரு பார்வை
உலக வர்த்தக தலைமை இயக்குநர் ஓகோஞ்சோ-ஐவீலாவுடன் பியூஷ் கோயல்
உலக வர்த்தக தலைமை இயக்குநர் ஓகோஞ்சோ-ஐவீலாவுடன் பியூஷ் கோயல்

“பிரதமர் மோடியின் தலைமையிலான இன்றைய இந்தியாவுக்கு யாராலும் அழுத்தம் கொடுக்க முடியாது. எந்தச் சவாலையும் இன்றைய இந்தியா எதிர்கொள்ளும். அந்த அளவுக்கு நாடு வலிமை பெற்றிருக்கிறது” - உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூ.டி.ஓ) உறுப்பு நாடுகளின் அமைச்சர்களுக்கு இடையிலான 12-வது மாநாட்டின்போது இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் பேசிய வார்த்தைகள் இவை.

உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்ட காலகட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட பியூஷ் கோயல், வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாயிகள் பலனடையும் வகையில் வளரும் நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் நெருக்கடி கொடுக்கும் ஒப்பந்தத்தை உருவாக்கியதாகக் குற்றம்சாட்டினார். இதனால், வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் தங்கள் விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

“உலக வர்த்தக அமைப்பில் நமது விவசாயிகள் மற்றும் வேளாண்மையின் உரிமைகளைக் காக்க இந்தியா தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. தேவைப்படும்போது உணவுப்பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும், இருப்பு வைப்பதற்கும், விநியோகிப்பதற்குமான சட்டவிதிகள் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குள் அடங்கும் வகையில் கொண்டுவரப்பட வேண்டும்” என வலியுறுத்திய கோயல், விவசாயிகளையும் ஏழை மக்களையும் பாதுகாப்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

எதிர்பார்ப்புகளும் நிதர்சனமும்

கோவிட் -19 பெருந்தொற்று, உக்ரைன் போர், உணவுப்பொருள் விலை அதிகரிப்பு எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் நடந்தேறிய மாநாடு இது. ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் தலைமையகத்தில் ஜூன் 12 முதல் 17 வரை நடைபெற்ற இந்த மாநாட்டில் 164 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 2017-க்குப் பிறகு நடக்கும் உலக வர்த்தக அமைப்பின் மாநாடு என்பதால் ஏக எதிர்பார்ப்புகள் நிலவின. குறிப்பாக, இந்தியாவின் தரப்பில் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன.

பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்

கரோனா தடுப்பூசிக்கான அறிவுசார் சொத்துரிமையில் விலக்கு, உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கும் இருப்பு வைப்பதற்கும் விநியோகிப்பதற்குமான கொள்கை (public food stock); அதன் உலகளாவிய வர்த்தகம், மீன்பிடித் தொழிலில் மானியம், மின்னணு தொழில்நுட்ப பரிமாற்றத்தில் சுங்கவரி விலக்கு ஆகியவை இந்த மாநாட்டின் பிரதான அம்சங்களாக முன்வைக்கப்பட்டன.

பியூஷ் கோயல் பெருமிதத்துடன் பேசினாலும், இந்த மாநாட்டின் மூலம் இந்த அம்சங்கள் எதிலும் சாதகமான விளைவுகள் ஏற்படவில்லை என்று சில பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசிக்கான அறிவுசார் சொத்துரிமையில் விலக்கு எனும் விஷயத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவோ சீனாவோ அசைந்து கொடுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட கோவிட் 19 தடுப்பூசிகள், கரோனா தொற்றைக் கண்டறியும் மருத்துவ வசதிகள், மருந்துகள் போன்றவற்றை இந்தியாவில் உற்பத்தி செய்து ஏழை நாடுகளுக்கு வழங்குவது தொடர்பாகத்தான் இந்த விலக்கை இந்தியா கோரியது. ஒருவகையில் அது ஏழை நாடுகளுக்கு உதவும் நோக்கம் கொண்டதாகச் சொல்லப்பட்டாலும் அதிலும் வணிக நோக்கம் இல்லாமல் இல்லை. இவ்விஷயத்தில் இந்தியாவின் கோரிக்கைக்கு நேர்மாறாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கருத்து அமைந்திருந்தது. கடைசியில், இவ்விஷயத்தில் உலக வர்த்தக அமைப்பு எடுத்திருக்கும் முடிவு ஏறத்தாழ ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வைத்த பரிந்துரையையே பிரதிபலிக்கிறது.

உணவுப் பொருட்களைக் கொள்முதல் மற்றும் விநியோகம் செய்யும் விஷயத்திலும், மீன்பிடித் தொழிலில் மானியம் வழங்குவதிலும் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை. உண்மையில், இந்தியாவைவிடவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத்தான் இந்த மாநாடு சாதகமான முடிவுகளைத் தந்திருக்கிறது என்கிறார்கள்.

உலக வர்த்தக அமைப்பின் உருவாக்கம்

பொருளாதாரப் பெருவீழ்ச்சி (The Great Depression) காலகட்டத்தில், 1929 முதல் 1932-ம் ஆண்டுவரை உலகத்தின் ஜிடிபி 15 சதவீதம் குறைந்தது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கிகள் மூடப்பட்டன. செல்வந்த நாடாக வளர்ந்திருந்த அமெரிக்கா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்குப் பின்னர் ப்ரொடக்‌ஷனிஸம் எனப்படும் சுதேசத் தொழில், வணிக, விவசாயப் பாதுகாப்புக் கொள்கையைக் கையில் எடுத்த அமெரிக்கா இறக்குமதிக்கு அதிக அளவில் வரி விதித்தது. ஸ்மூட் ஹாலி சட்டத்தின் மூலம் இதற்கான விதிமுறைகளையும் கொண்டுவந்தது. அமெரிக்காவைப் பின்பற்றி பிற நாடுகளும் அதே பாணியிலான நடவடிக்கைகளை எடுத்தன. இதனால் காப்பு வரி தொடர்பாகப் பல நாடுகளுக்கு இடையே முரண்கள் முளைத்தன. விளைவாக, உலக நாடுகளுக்கு இடையே ஏற்றுமதி / இறக்குமதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் நடந்த இரண்டாம் உலகப் போரில் பல நாடுகளுக்குக் கடும் பொருளாதார இழப்பு நேரிட்டாலும் அமெரிக்கா ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட காரணிகளால் உற்சாகமடைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளத் தொடங்கியது. வேலைவாய்ப்பின்மை விகிதத்தில் 10 சதவீதத்தைக் குறைத்தது. போரின் முடிவில், 1944-ல் அமெரிக்காவின் நியூ ஹாம்ப்ஷையர் மாநிலத்தின் ப்ரெட்டன் வுட்ஸ் நகரில் உள்ள மவுன்ட் வாஷிங்டன் ஹோட்டலில் நடந்த கூட்டத்தில் சர்வதேச நாடுகளின் நிதியை முறைப்படுத்தும் பணிகள் தொடங்கின. பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (ஐபிஆர்டி), பன்னாட்டு நாணய நிதியம் (ஐஎம்எஃப்) ஆகியவை தொடங்கப்பட்டன.

பொருளாதாரப் பெருவீழ்ச்சி காலகட்டத்தில்...
பொருளாதாரப் பெருவீழ்ச்சி காலகட்டத்தில்...

அதன் நீட்சியாக சர்வதேச வர்த்தக அமைப்பு (ஐடிஓ) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால், அதன் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையவில்லை. இதையடுத்து வர்த்தகம், காப்புவரி தொடர்பான பொது ஒப்பந்தம் (GATT) உருவாக்கப்பட்டது. 1947 அக்டோபர் 30-ல் ஜெனிவாவில் 23 நாடுகள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தம் 1948 ஜனவரி 1-ல் அமலுக்கு வந்தது. 1990-கள் வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருந்தது. 1994 ஏப்ரல் 14-ல் மொராக்கோ நாட்டின் மாரகேஷ் நகரில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் உலக வர்த்தக அமைப்பு 1995 ஜனவரி 1-ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தின் தலைநகரான ஜெனிவாவில் சென்டர் வில்லியம் ராப்பார்டு பகுதியில் அமைந்திருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தை முறைப்படுத்துவதுதான் இதன் முதன்மைப் பணி.

உலகமயமாக்கல் மூலம் பெரும் சுரண்டல் நடக்கும் என ஆரம்பம் முதல் ஏழை நாடுகள், வளரும் நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் குரல் எழுப்பின. உலக வர்த்தக அமைப்பு, 1990-களின் இறுதியில் அமெரிக்காவிலேயே எதிர்ப்பைச் சம்பாதித்தது. உலகமயமாக்கலின் விளைவாக அமெரிக்காவுக்குப் பெரும் இழப்புகள் ஏற்பட்டுவிட்டதாக 2017-ல் அதிபரான ட்ரம்ப் பேசிவந்தார். இதற்கிடையே 2001-ல் கத்தார் தலைநகரான தோஹாவில் நடந்த உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டின்போது, சீனா அந்த அமைப்பில் இணைந்தது. அந்த மாநாட்டின்போது வளரும் நாடுகள் தங்கள் சந்தையைப் பொதுவானதாகத் திறந்துவைக்க வேண்டும் என வளர்ந்த நாடுகள் அழுத்தம் கொடுத்தன. மறுபுறம், சர்வதேச நிதி அமைப்புகளின் சட்டதிட்டங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என வளரும் நாடுகள் வலியுறுத்தின.

சமீபத்திய மாநாட்டின்போது, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என 20 நாடுகள்தான் முக்கியப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டன. அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளுக்குச் சம்மதிக்கும் நிலையில்தான் ஏழை நாடுகள் இருந்தன.

உள் முரண்கள்

பல தரப்புகளுக்கும் பொருத்தமான விதிமுறைகளை உருவாக்குவது, அவை அமல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பது, உறுப்பு நாடுகளுக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகளைக் களைவது ஆகியவை உலக வர்த்தக அமைப்பின் பிரதான பணிகள். இதில் ஒரு நாடு ஆட்சேபம் தெரிவித்தாலும் பிற நாடுகள் முன்வைக்கும் பரிந்துரைகள், யோசனைகள் நிராகரிக்கப்படும் என்பதால் அனைத்து உறுப்பினர்களின் சம்மதமும் அவசியம்.

இப்படியான சூழலில், கருத்து வேறுபாடுகளுக்குத் தீர்வு காண்பதற்கான பிரிவில் (Appellate body) நீதிபதிகளை நியமிப்பதில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு போட்ட முட்டுக்கட்டைகளால், பல நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பது ஏறத்தாழ முடங்கிவிட்டது. போதாக்குறைக்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சீனாவும் இணைந்து இடைக்கால மேல்முறையீட்டு நடுவர் ஒப்பந்தம் (எம்பிஐஏ) எனும் அமைப்பை ஏற்படுத்திவிட்டன. உலக வர்த்தக அமைப்பின் Appellate body-யில் இருப்பதுபோன்ற விதிமுறைகள்தான் இதிலும் பின்பற்றப்படுகிறது. உலக வர்த்தக அமைப்பின் பல உறுப்பு நாடுகள் இந்த அமைப்பில் இணைந்துவிட்டன.

அதேபோல, பருவநிலை மாற்றத்துக்கு முகங்கொடுக்கும் வகையில் வர்த்தகச் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவருவதிலும் இந்த அமைப்பு தவறிவிட்டதாக விமர்சிக்கப்படுகிறது. இந்த முறை மீன்பிடித் தொழில் தொடர்பான ஒப்பந்தத்திலும் இதுகுறித்த அக்கறை வெளிப்படவில்லை. மீன்பிடித் தொழிலுக்கு அளித்துவரும் மானிய உதவிகளை நிறுத்துமாறு வலியுறுத்தியது இந்தியாவிடமிருந்து எதிர்ப்பை உருவாக்கியிருக்கிறது.

இனி என்ன?

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போர் காரணமாக ஏற்பட்ட சிக்கல்கள், ஆஸ்திரேலிய பொருட்கள் மீது சீனா விதித்த தடை எனத் தங்கள் சுய நன்மையைக் கருத்தில் கொண்டு பல நாடுகள் எடுத்த நிலைப்பாடுகள் இந்த அமைப்பின் அடிப்படை நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்திவிட்டன. ப்ரொடக்‌ஷனிஸத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியவாத பொருளாதாரக் கொள்கைகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இறங்கியதும் இந்த அமைப்பின் செயல்பாட்டில் சுணக்கத்தை ஏற்படுத்தியது. உண்மையில், கரோனா பெருந்தொற்று காலத்தில் உலகளாவிய வணிகத்தைவிடவும் உள்நாட்டு வணிகத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது. எனவே, இவ்விஷயத்தில் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் எடுத்த நிலைப்பாடு விவாதங்களுக்கு உரியது என்றாலும் விமர்சனத்துக்குரியதா என்பது முக்கியமான கேள்வி.

வெறுமனே தடையற்ற வர்த்தகம் என்பதைத் தாண்டி, நியாயமான வர்த்தகத்தை உறுதிசெய்ய வேண்டியது உலக வர்த்தக அமைப்பின் கடமை எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். நீண்ட காலமாக முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கை இதுவரை பூர்த்திசெய்யப்படவில்லை.

இந்த மாநாட்டின் சில முடிவுகள் இந்தியாவுக்குச் சாதகமாக இருப்பதாக பியூஷ் கோயல் போன்றோர் தெரிவித்தாலும், 2023 டிசம்பர் 31-க்கு முன்னதாக நடக்கவிருக்கும் அடுத்த மாநாட்டில்தான் இதுகுறித்த அசல் நிலவரம் வெளிப்படும். இவை அனைத்தையும் தாண்டி அமெரிக்காவுடனும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனுமான வர்த்தக உறவில் இனி இந்தியாவுக்குச் சாதகமான விளைவுகள் ஏற்படும் என்றே நம்பப்படுகிறது. பார்ப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in