ஈரானின் பொருளாதாரச் சீர்திருத்தம்: என்ன காரணம், எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?

ஈரானின் பொருளாதாரச் சீர்திருத்தம்: என்ன காரணம், எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்?
ஈரான் அதிபர் இப்ரஹீம் ரைசி

அணுசக்திப் பயன்பாடு தொடர்பாக ஏற்பட்ட மோதலால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளுக்கு உள்ளான ஈரான், நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதிபர் இப்ரஹீம் ரைசி துணிச்சலான இந்த நடவடிக்கையை நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி வாயிலாக கடந்த திங்கள்கிழமை இரவு அறிவித்து, அவர்களுடைய ஒத்துழைப்பைக் கோரியிருக்கிறார். விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், ஈரானிய நாணயத்தின் மதிப்பை மீட்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

பொருளாதாரத் தடை நடவடிக்கைகளால் விலைவாசி அதிகரித்துவிடாமல் இருக்க, முந்தைய அதிபர் பல்வேறு பண்டங்களுக்கு மானியங்களை அறிவித்தார். ஆனால் அவையனைத்தும் அதிகாரிகளாலும் இடைத் தரகர்களாலும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படவில்லை. மாறாக ஈரானின் பொருளாதாரம் மேலும் சேதம் அடைந்து மக்கள் மீதே சுமை அதிகரித்தது.

புதிய சீர்திருத்தங்களை அறிவித்த ரைசி, உணவுப் பண்டங்கள், மருந்து-மாத்திரைகள், பெட்ரோல் ஆகியவற்றின் விலை உயராது, கட்டுக்குள் வைக்கப்படும் என்று உறுதிமொழி அளித்திருக்கிறார். மானியங்களை நிறுத்தினாலும் ஈரானின் ஏழைகள், நடுத்தர மக்களின் வங்கிக் கணக்குகளுக்கே நேரடியாகப் பணம் செலுத்த உத்தரவிட்டுள்ளார். இந்த த் தொகை இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து செலுத்தப்படும். நாட்டு மக்களில் எட்டரை கோடிப் பேருக்கு 1,080 கோடி டாலர்கள் மொத்தமாகக் கிடைக்கும்.

மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே இந்த நிதியுதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு மாதத்துக்கு 94 டாலர்கள் வழங்கப்படும். 60 சதவீதம் பேருக்கு மாதத்துக்கு 71 டாலர்கள் வழங்கப்படும். இது அவர்களுடையஅத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உதவும். இரண்டு மாதங்களுக்குப் பிறகு கூப்பன்களை அரசு வழங்கும். அவை ஸ்மார்ட் மின்னியல் அட்டைகளாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி உணவுப் பொருட்கள், மருந்து-மாத்திரைகள், பெட்ரோல் ஆகியவற்றை அரசு நிர்ணயிக்கும் குறைந்த விலையில் எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம். அதே சமயம் ஈரானியர்கள் தவிர மற்றவர்களுக்கு இது கிடைக்காது.

உக்ரைன் போர் காரணமாக கோதுமைக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டதால் உலகின் பெரும்பாலான நாடுகளில் கோதுமை, கோதுமை மாவு, ரவை, ரொட்டி ஆகியவற்றின் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. ஈரானும் விதிவிலக்கல்ல. இப்போதைக்கு கோதுமைப் பண்டங்களும் பிறகு கோழிக்கறி, சமையல் எண்ணெய் போன்றவையும் இந்த பட்டியலில் சேர்த்து குறைந்த விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹசன் ரூஹானியின் தவறு

இதற்கு முன்னர் அதிபராக இருந்த ஹசன் ரூஹானியும் மக்களுடைய நன்மையைக் கருதித்தான் மானியங்களை அறிவித்தார். ஆனால் அதை அமல்படுத்திய விதத்தால் அதிகாரிகளும் இடைத்தரகர்களும் கொள்ளையடித்தனர். அது மட்டுமல்லாமல் ஈரானைச் சுற்றியுள்ள ஆப்கானிஸ்தான், இராக், பாகிஸ்தான் உள்ளிட்ட பக்கத்து நாடுகளின் வியாபாரிகளும் மக்களும்கூட பலன் அடைந்தனர். இதனால் ஈரானிய அரசுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த ஒரு அமெரிக்க டாலருக்கு நிகராக 42,000 ரியால்கள் வழங்கப்படும் என்று ரூஹானி அறிவித்திருந்தார். இந்த செயற்கையான செலாவணி மாற்று மதிப்பு ஈரானியப் பொருளாதாரத்தை மிகவும் சேதப்படுத்திவிட்டது. இதைப் பயன்படுத்தி வெவ்வேறு துறையினர் வெவ்வேறு மதிப்புகளில் ரியால்களை டாலர்களுக்குப் பரிமாற்றம் செய்தனர். அது மட்டுமல்லாமல் வெளிச் சந்தையில் டாலருக்கு நிகரான ரியாலின் மதிப்பு வெகுவாக சரிந்த து. 2015-ல் ஈரானுடன் செய்துகொண்ட அணுசக்திப் பயன்பாட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததால், ஈரானியச் செலாவணியின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் சரிந்தது.

அதனால்தான் அதிபர் ரூஹானி அப்படியொரு எதிர் நடவடிக்கையை எடுத்தார். பொருளாதாரத் தடை நடவடிக்கையை அடுத்து ஏற்பட்ட கோவிட்-19 பெருந்தொற்றும் அதனால் உலகம் எங்கும் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கமும் ஈரானுக்குப் பெருத்த பின்னடைவை ஏற்படுத்தின. ரூஹானி அறிவித்ததைப் போல ஏழு மடங்குக்கு ரியால்களைக் கொடுத்து அமெரிக்க டாலர்களை வாங்க வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இதனால் பேராசை பிடித்த இடைத்தரகர்களும் வணிகர்களும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள், மக்களுடைய வாழ்க்கைத் தரம் வெகுவாகச் சரிந்தது.

ஹசன் ரூஹானியுடன் இப்ரஹீம் ரைசி
ஹசன் ரூஹானியுடன் இப்ரஹீம் ரைசி

இனி இந்த செயற்கை செலாவணி மதிப்பு வேண்டாம் என்று ரூஹானி முடிவு செய்தார். அவரது முடிவை ஏற்ற நாடாளுமன்றம் அதை எப்படி அமல் செய்வது என்பதில் முரண்பட்டது. இதனால் தவறைச் சரி செய்யும் நடவடிக்கை தாமதப்பட்டுக்கொண்டே வந்தது. இதனால் பொருளாதாரம் மேலும் சீரழிந்தது. புதிய அதிபர் ரைசி துணிந்து இப்போது சீர்திருத்தம் செய்ய முடிவெடுத்திருக்கிறார். இதனால் நாட்டு மக்களுக்குக் குறுகிய காலத்துக்கு இடையூறுகள் ஏற்படும் என்றாலும் எதிர்காலத்தில் ஈரானின் பொருளாதாரம் நிலைப்படவும் வலுப்படவும் நிச்சயம் உதவும். மானியங்கள் நல்ல நோக்கத்துக்காக அளிக்கப்பட்டாலும் அது வீணாவதும் மடைமாறுவதும் இயல்பு.

ஈரானின் ஆண்டுப் பணவீக்க விகிதம் 50 சதவீதமாக கூரையை முட்டியது. கடந்த ஏப்ரலில் நிலைமை சற்றே தணிந்து 39.2 சதவீதமாகக் கட்டுக்குள் வந்திருக்கிறது. ரூஹானி அளித்த மானியங்களில் 70 சதவீதம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் எல்லையை ஒட்டிய பகுதிகளில் வாழும் 1.5 கோடி வெளிநாட்டவர்கள் இந்த மானியங்களால் பலன் அடைந்தனர். அவர்கள் இராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரானின் வடக்கு எல்லைப் பகுதிகளில் வாழ்கின்றனர். கடத்தல் மூலம் அவர்களுக்குக் குறைந்த விலையில் கோதுமையும் மருந்து – மாத்திரைகளும் கிடைத்தன. இப்போது அந்த ஓட்டை அடைக்கப்பட்டுவிட்டது.

பொருளாதாரத் தடை நடவடிக்கைகளுக்கு முன்பிருந்தே ஈரானில் சகட்டு மேனிக்கு ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டனர். இதனால் பொருளாதாரமும் வளராது வேலைவாய்ப்புகளும் பெருகாது என்று பொருளியல் அறிஞர்கள் எச்சரித்தனர். ஆனால் அரசு கேட்கவில்லை. மக்களின் நன்மைக்காகத்தான் மானியம் என்றாலும் அது முறையாகச் செலவழிக்கப்படாவிட்டால் விலைவாசி உயர்வால் மீள முடியாமல் தவிக்கப் போவது அதே மக்கள்தான். அத்துடன் ஈரானின் வங்கித் துறை மிகச் சில வங்கி முதலாளிகளின் கட்டுக்குள் இருக்கிறது. அந்த வங்கிகள் அரசுடன் நெருங்கித்தான் செயல்படுகின்றன, ஆனால் லாப நோக்கம் கொண்டவை. எனவே பொது சமுதாய நலன் குறித்து அவை அக்கறை காட்டவில்லை.

எந்த ஒரு நாட்டிலும் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் தொடர்ந்தால் எந்த நல்ல நடவடிக்கையும் தோல்வியே அடையும். இப்போது துணிச்சலாக அதிபர் எடுத்துள்ள நடவடிக்கை பயன்தர வேண்டும் என்றால் அடுத்தடுத்தும் இதே போல பொறுப்புடனும் கண்டிப்புடனும் அரசு செயல்பட வேண்டும். ஈரானியர்களுக்கு கூப்பன் முறை புதிதல்ல. 1980-களில் இராக்குடனான எட்டாண்டுகள் போருக்குப் பிறகு இந்த முறைதான் நீண்ட காலம் அமலில் இருந்தது. இப்போது டிஜிட்டல் யுகமாகிவிட்டதால் பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே நேரடியாகப் பணம் செலுத்துவது எளிது.

ஈரானில் சமீபத்திய ஆண்டுகளில் அரசு எடுத்த இரு பெரும் நடவடிக்கைகள் மக்களிடையே பொருளாதார ஏற்றத்தாழ்வை வெகுவாகக் குறைத்திருக்கிறது. முதலாவது, வங்கிகள் மூலம் ஏழைகளுக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் முறை. அடுத்தது நலிவுற்ற பிரிவினருக்கும் இலவசக் கல்வி, மருத்துவ வசதிகளை அரசு அளித்தது. பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு முழு அளவுக்கு பெட்ரோலிய உற்பத்தியில் ஈரான் ஈடுபட்டால் வருவாய் பெருகுவது நிச்சயம். ஆனால் அடுத்த இரு மாதங்களுக்கு உணவுப் பண்டங்கள், காய்கறி, பால் பொருட்களின் விலை உயரத்தான் செய்யும். சீர்திருத்தங்கள் என்பதே கசப்பு மருந்துதான். பத்தியம் இருந்தால்தான் நோய் கட்டுக்குள் வரும்!

Related Stories

No stories found.