உக்ரைன் போர் முனையில் பின்னடைவு: புதினின் ஜி-20 புறப்பாடு என்னாகும்?

உக்ரைன் போர் முனையில் பின்னடைவு: புதினின் ஜி-20 புறப்பாடு என்னாகும்?

உக்ரைன் போர் முனையில் ரஷ்ய படைகளின் பின்னடைவு காரணமாக, இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதை தவிர்க்க முடிவு செய்துள்ளார் அதிபர் புதின்.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நவ.15 அன்று ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. பொருளாதாரத்தில் பலம் வாய்ந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 சந்திப்பு, உலகின் முக்கியத் தலைவர்கள் நேரில் கைகுலுக்கும் முக்கிய சந்திப்பாகும். இதில் பங்கேற்கும் ஏற்பாட்டில் இருந்த புதின் திடீரென பின்வாங்கியிருக்கிறார். இதற்கு உக்ரைன் போர் முனையில் ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்டிருக்கும் பின்னடைவு காரணமாக சொல்லப்படுகிறது. புதினின் இந்த புதிய முடிவு குறித்து ரஷ்ய செய்தி நிறுவனங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் அறிவித்துள்ளன.

பிப்.24 அன்று உக்ரைன் தேசத்தை நீர், நிலம், வான் என சகல உபாயங்களிலும் ஊடுறுவி ரஷ்யா தாக்கத்தொடங்கியது. சில தினங்கள் முதல் வாரங்களில் உக்ரைன் சரணடைந்து விடும் என்று ரஷ்யா மட்டுமன்றி உலக நாடுகள் பலவும் கணித்திருந்தன. ஆனால் உக்ரைனியர்கள் காட்டிய மனவுறுதியும், மேற்கு நாடுகள் ஆதரவுமாக அம்மண்ணில் ரஷ்ய படைகளை எதிர்த்து தீரமாக போரிட்டு வருகிறார்கள். போர் ஆரம்பித்து தற்போது ஒன்பது மாதமாகும் சூழலில் உக்ரைன் போரில் ரஷ்யா ஏராளமான பாடங்களை கற்றிருக்கிறது. முன்னதாக ரஷ்யா கணித்தது போல உக்ரைனை வெல்வதும், போரை முடிவுக்கு கொண்டு வருவதும் இப்போதைக்கு ஆகிற காரியமில்லை என்ற ஞானமும் புதினுக்குப் பிறந்திருக்கிறது.

உலக பொருளாதாரத்தில் சுணக்கம், எரிபொருள் விலையில் ஏற்றம், உணவுப் பொருள் தட்டுப்பாடு, ஐரோப்பிய நாடுகளை சீண்டும் நேரடி பாதிப்பு என ரஷ்ய - உக்ரைன் போரின் பக்க விளைவுகள் ஏராளமாக எழுந்துள்ளன. போரின் நேரடி பாதிப்பு உக்ரைன் என்ற போதும், உலக நாடுகள் மத்தியில் புதிய வில்லனாகிப் போனார் புதின். சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கு சமானமாய் ஆதிக்கம் பாய்ச்சத் துடித்த புதினின் கனவில் தற்போதைக்கு மண் விழுந்திருக்கிறது. இந்த சூழலில் உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பின்னரான முதல் உலகத் தலைவர்கள் சந்திப்பான ஜி-20 மாநாட்டை தவிர்த்திருக்கிறார் புதின்.

ஒருவேளை உக்ரைனில் ரஷ்யாவின் கை ஓங்கியிருப்பின், புதின் பெரும் உவகையோடு பாலிக்கு பறந்திருப்பார். ரஷ்யாவின் நோக்கம் நிறைவேறி வருவதையும், கண்டடைந்த புதிய பலத்தையும், அடுத்தக்கட்ட மிரட்டலையும் முரசறைந்திருப்பார். அதிலும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவின் ஜி-20 பங்கேற்புக்கு எதிராக முழங்கியபோது, அவற்றை மீறி அக்கூட்டத்தில் கலந்துகொள்ள புதின் ஆவலாக இருந்தார். ஆனால் ஜி-20 நாடுகளுக்கு உலகத் தலைவர்கள் ஆயத்தமான நாளில், உக்ரைனின் கெர்சோன் நகரிலிருந்து ரஷ்ய படைகள் பின்வாங்கும் முடிவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் அறிவிக்க வேண்டியதாயிற்று.

ஜி-20 நேரடி பங்கேற்பைத் தவிர்ப்பதிலும் புதினுக்கு சங்கடங்கள் உண்டு. உலகத் தலைவர்களுடனான சந்திப்பை தவிர்த்து பம்முவது ரஷ்யா தனது தோல்விமுகத்தை ஒப்புக்கொள்வதாகவும், தேசத்தின் வலிமையை தாமாக குறைத்து வெளிப்படுத்துவதாகவும் அமையக்கூடும் என க்ரெம்ளின் கருதுகிறது. இதன் பிறகு ரஷ்யாவுக்கு எதிரான மேற்கு நாடுகளின் ஒருங்கிணைப்பு மேலும் திடம் பெறவும், அவை உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவம் சார்ந்த புதிய உதவிகளை அறிவிக்கவும் வித்திடக்கூடும். எனவே ஜி-20 கூட்டத்தில் வீடியோ சந்திப்பில் புதின் உரையாற்றுவது தொடர்பாக க்ரெம்ளின் பரிசீலித்து வருகிறது.

சக்தி வாய்ந்த நாடுகளின் சந்திப்பில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து விவாதிக்கப்படுமா, சந்திப்பின் நிறைவாக ரஷ்யாவுக்கு எதிரான புதிய பொருளாதாரத் தடைகள் அறிவிப்பாகுமா என்பதான ஆருடங்களுக்கும் குறைவில்லை. எனவே உக்ரைன் முதல் இந்தோனேசியா வரையிலான மேற்படி சங்கடங்களை களைவது குறித்து தனது சகாக்களுடன் புதின் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். புதினுக்கான அடுத்த வியூகத்தை அடையாளம் காண்பதில் உலக நாடுகளும் தலைவர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்... புதின் உட்பட!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in