இந்தியா வருகிறாரா சீன வெளியுறவுத் துறை அமைச்சர்?

இந்தியா வருகிறாரா சீன வெளியுறவுத் துறை அமைச்சர்?

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் எல்லை விவகாரம் தொடர்பாக நிலவிவரும் முரண்பட்ட உறவுச் சூழலுக்கு நடுவே, சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி இன்னும் சில நாட்களில் இந்தியாவுக்கு வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், இரு தரப்பிலிருந்தும் இதுதொடர்பாக அதிகாரபூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

2020 முதல், லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் ஊடுருவிய நிகழ்வைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்தது. குறிப்பாக 2020 ஜூன் 15-ல் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனத் தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவும் சீனாவும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யியும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் இரு முறை சந்தித்துப் பேசியிருக்கின்றனர். 2020 செப்டம்பரில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இருவரும் சந்தித்துப் பேசியிருந்த நிலையில், 2021 ஜூலையில் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் மீண்டும் இருவரும் சந்தித்தனர்.

பகையாளிகளாக அல்ல, பங்காளிகளாகவே இந்தியாவும் சீனாவும் இருக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார் வாங் யி. கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பு உறவில் சில பின்னடைவுகள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கும் அவர், எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் பேசிவருகிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றத்தைத் தூண்டுவதற்குச் சில சக்திகள் முயற்சிப்பதாக, அமெரிக்காவை மறைமுகமாகக் குற்றம்சாட்டிவரும் வாங் யி இந்தியாவுக்கு வருவது உறுதியானால், இரு தரப்பு உறவில் முக்கியமான நகர்வுகள் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.

குறிப்பாக, உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காமல் இந்தியாவும் சீனாவும் தவிர்த்திருக்கும் சூழலில், அவரது வருகை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in