'கருக்கலைப்பு எங்கள் உரிமை!'

'கருக்கலைப்பு எங்கள் உரிமை!'

களத்தில் குதித்த அமெரிக்கப் பெண்கள்

கருக்கலைப்பு தொடர்பான தங்கள் உரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக, அமெரிக்கப் பெண்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இவ்விஷயத்தில், ஆணாதிக்கப் பார்வை கொண்டவர்களை உறுதியாக எதிர்த்து நிற்கும் ஆன்ம பலத்தையும் பெண்கள் வெளிப்படுத்தியிருப்பது பெண்ணியச் செயற்பாட்டாளர்களுக்கு உத்வேகம் தந்திருக்கிறது.

டெக்சாஸ் சட்டம்

‘ஆறு வாரகால வளர்ச்சிக்குப் பிறகு எந்தக் காரணத்தைக் கொண்டும் கருவைக் கலைக்கக் கூடாது’ என்று டெக்சாஸ் மாநில சட்டப்பேரவ, செப்டம்பர் 1-ல் சட்டம் இயற்றியிருக்கிறது. சிசுவுக்கு இதயத் துடிப்பு ஏற்படத் தொடங்கிவிட்டால், அக்கருவைக் கலைக்கக் கூடாது என்பது அந்தச் சட்டத்தின் அடிப்படை அம்சம். இந்நிலையில், இந்தச் சட்டத்தை எதிர்த்து வாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் எல்லா முக்கிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று (அக்.2) ஊர்வலமாகச் சென்று முழக்கமிட்டனர். ‘கருக்கலைப்பு தொடர்பாக முடிவெடுக்கும் உரிமை, கருவைச் சுமக்கும் பெண்களுக்குத் தரப்பட வேண்டும்; அதைச் சட்டபூர்வமாக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருக்கும் பெண்கள், ‘எனது உடல் என்னுடையது - அது தொடர்பான முடிவை நான்தான் எடுப்பேன்’ என்று முழக்கங்களை எழுப்பியிருக்கின்றனர்.

ஊர்வலம் தொடங்குவதற்கு முன்னால், ‘அப்பாவிக் குழந்தைகளின் ரத்தம் உங்களுடைய கரங்களில் படிந்திருக்கிறது’ என்று கூச்சலிட்ட 20-க்கும் மேற்பட்டோர், போராடும் பெண்களை அச்சுறுத்தும் வகையில் குவிந்தனர். போராட்டக்காரர்களை அச்சுறுத்தியவர்களில் பிற்போக்கு எண்ணம் கொண்ட பெண்கள் சிலரும் இருந்தனர். இதையடுத்து பதற்றமான சூழல் உருவானது. எனினும், கருக்கலைப்பை ஆதரிக்கும் பெண்கள் உடனே கைகளைத் தட்டியபடியே உரத்த குரலில் பாடி, எதிர்ப்பாளர்களின் முயற்சியைத் தடுத்துவிட்டனர். ‘கருவைக் கலைப்பதா, வளரவிடுவதா என்பது கருவைச் சுமக்கும் பெண்கள்தான் முடிவு செய்ய வேண்டும் மற்றவர்கள் அல்ல’ என்று அனைத்துப் பெண்களும் கூறினர். ‘இப்படியொரு நிலை எனக்கு வந்ததில்லை, என்றாலும் அப்படியொரு நிலையில் அது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கோ, இன்னொருவருக்கோ கூடாது, பெண்களின் உடல் மீது மறைமுகமாக ஆண்கள் செலுத்தும் அதிகாரமே இந்தத் தடை’ என்று பல பெண்கள் கண்டனம் தெரிவித்தனர்.ஆண்டுதோறும் பெண்களுடைய ஊர்வலத்தை நடத்தும் அமைப்பினர் இந்தக் கருக்கலைப்புத் தடைச் சட்ட எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் 2017-ல் பதவியேற்ற மறுநாள், இந்த அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு சாதனை படைத்தது நினைவுகூரத்தக்கது.

“கருக்கலைப்பு சட்டபூர்வமானது, மருத்துவமனைகளை அணுகி பாதுகாப்பாக அதைச் செய்துகொள்ளலாம் என்ற நிலைதான் நிலவியது. டெக்சாஸ் மாநில நீதிமன்றத் தீர்ப்பு அந்த மன நிம்மதியைக் குலைக்கிறது” என்று பல பெண்கள் வருத்தம் தெரிவித்தனர்.

நியூயார்க் மாநிலத்தின் கவர்னர் கேத்தி ஹோச்சுல், பெண்களின் இரண்டு ஊர்வலங்களில் பேசினார். கருக்கலைப்பு செய்து கொள்ளும் உரிமை பெண்களுக்கு வேண்டும் என்று இன்னும் எத்தனைக் காலம்தான் நாங்கள் வலியுறுத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். “இது ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டு சட்டபூர்வமாக தீர்மானிக்கப்பட்ட விஷயம், இதை மீண்டும் கிளறி, உரிமையைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம், இப்போது மட்டுமல்ல - எந்தக் காலத்திலும்” என்று அவர் ஆவேசத்துடன் கூறினார்.

ஆதரவும் எதிர்ப்பும்

‘கரு உருவாகி வளர்ந்து 6 வாரங்களுக்குப் பிறகு அதன் இதயத் துடிப்பு கேட்கத் தொடங்கும். எனவே, 6 வாரம் வளர்ந்த பிறகு கருவைக் கலைக்கும் மருத்துவர் மீது யார் வேண்டுமானாலும் வழக்குத் தொடர முடியும்’ என்கிறது டெக்சாஸின் புதிய சட்டம். இது, பிறக்காத குழந்தையைக் காப்பாற்றும் மனிதாபிமான முயற்சி என்று இச்சட்டத்தை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். குடியரசு கட்சி பெரும்பான்மையாக உள்ள வேறு சில மாநிலங்களிலும் இதைப் போன்ற சட்டத்தை இயற்ற அரசியல்வாதிகள் பரிசீலித்து வருகிறார்கள்.

டெக்சாஸ் மாநிலச் சட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் குழுவினர் அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வில், 5 பேர் சட்டம் சரியானதே என்றும், 4 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். எனவே டெக்சாஸ் சட்டம் செல்லுபடியாகும் என்றாகிவிட்டது.

இதற்கிடையே மிஸ்ஸிசிப்பி மாநிலம், 15 வாரம் ஆன கருவையே கலைக்கக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. வரும் டிசம்பர் 1-ல் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கப்போகிறது.

ஜேன் ரோ தொடுத்த வழக்கு

‘கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்; அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல’ என்று 1973-ல் அமெரிக்காவில் ‘ரோ எதிர் வேட்’ வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கரு வளர்ந்து 7 மாதங்களாகிவிட்டால் அதற்குப் பிறகு கருக்கலைப்பு செய்யக்கூடாது, அதற்கு முன்னதாக கருவைக் கலைப்பது தொடர்பான முடிவை, கருவைச் சுமக்கும் தாய் எடுக்கலாம் என்று அது அனுமதித்தது.

தாயின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலையைத் தவிர பிற காரணங்களுக்காக கருவைக் கலைப்பது குற்றம் என்று டெக்சாஸ் மாநிலத்தில் அப்போது சட்டமிருந்தது. நார்மா மெக்கார்வி என்ற 25 வயதுப் பெண், கருக்கலைப்புத் தடைச் சட்டத்தை எதிர்த்து வழக்காடினார். சொந்தப் பெயரில் வழக்காடாமல், ஜேன் ரோ என்ற பெயரில் வழக்கு தொடுத்தார். அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஹென்றி வேட் என்ற டெக்சாஸ் மாநில அரசு தலைமை வழக்கறிஞர் வாதாடினார். மெக்கார்வி முதலில் 1969-ல் வழக்கு தொடுத்தார். பாலியல் வல்லுறவு காரணமாக, 3-வது கருவைச் சுமப்பதாகவும் அதைக் கலைக்க விரும்புவதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அவருடைய மனு ஏற்கப்படவில்லை, அதனால் அவர் 3-வது குழந்தையைப் பெற்றெடுத்தார்.

1973-ல் அவரே உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். டல்லஸ் நகரைச் சேர்ந்த சாரா வெடிங்டன் என்ற வழக்கறிஞர் மெக்கார்விக்காக வாதாடினார். அதேநாளில் இதேபோன்ற மனுவைத் தாக்கல் செய்த ஜார்ஜியா மாநிலத்தின் சாண்ட்ரா பென்சிங் என்ற பெண்ணின் மனுவையும் உச்ச நீதிமனறம் விசாரித்தது. பெண்களுக்கென்று சில அந்தரங்க உரிமைகளை அமெரிக்க அரசியல் சட்டம் அளிக்கிறது. அந்த உரிமையைப் பறிக்கும் விதத்தில் இந்தக் கருக்கலைப்புச் சட்டம் டெக்சாஸ், ஜார்ஜியா மாநிலங்களில் செயல்படுகிறது என்று இரு பெண்கள் சார்பிலும் வாதிடப்பட்டது. இருவரும் வழக்கில் வெற்றி பெற்றனர்.

ஆதரவு தரும் ஆண்கள்

பெண்களின் கர்ப்பகாலம் 3 கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. முதல் 3 மாதங்களில் அதாவது 12 வாரங்களுக்குள் குழந்தை வேண்டாம் என்று பெண் நினைத்தால் கருவைக் கலைத்துக்கொள்ளலாம். மேலும்3 மாதங்களுக்கு கரு வளர்ந்துவிட்டால், அரசு இது தொடர்பாகக் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். மேலும் 3 மாதங்களாகிவிட்டால் கருப்பையிலிருந்துதான் உயிர் வாழ முடியும் என்ற நிலை போய்விடுவதால் கருக்கலைப்புக்கு அரசு மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம் அல்லது தடையே விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடைசி 3 மாத கர்ப்ப காலத்தில், தாயின் உயிரைக் காப்பாற்ற கருக்கலைப்பு அவசியம் என்று மருத்துவர்கள் சான்றளித்தால் அப்போதும் கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு.

20 ஆண்டுகளுக்குப் பிறகு 1995-ல் அதே மெக்கார்வி, கருக்கலைப்புச் சட்டத்துக்கு எதிராக மீண்டும் நீதிமன்றத்தை நாடியபோது நாடே அதிர்ச்சியடைந்தது. பெண்களின் உரிமை என்று கருக்கலைப்பை ஆதரித்த நீங்கள் ஏன் இப்படி மனம் மாறினீர்கள் என்று கேட்டபோது, யாரோ சிலர் பணம் கொடுத்து இப்படி வழக்குப் போடச் சொன்னார்கள் என்று பதில் அளித்தார் மெக்கார்வி.

ஆனால், மெர்க்கார்வி போல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு இன்றைய பெண்கள் இல்லை என்பதை அமெரிக்காவில் நடந்துவரும் காத்திரமான போராட்டங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. இந்தப் போராட்டத்தில் பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் பங்கேற்றிருப்பதும் கவனம் ஈர்த்திருக்கிறது!

Related Stories

No stories found.