அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரமடைந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு நாளை விஜயம் மேற்கொள்கிறார். பைடன் பயணம் போரின் வேகத்தை தணிக்குமா, காசா மக்களின் உயிரச்சம் விலகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இஸ்ரேல் மீதான அக்.7 ஹமாஸ் கொடூரத் தாக்குதலை அடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடன் ஒரே வாரத்தில் 5 முறை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உடனும் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பினரின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை வழங்குவதோடு, இஸ்ரேல் - காசா இடையிலான பிரச்சினையில் தீர்வை எட்டவும் அமெரிக்கா முயன்று வருகிறது. இஸ்ரேலுக்கு தனது ஆதரவை உறுதி செய்திருப்பதோடு, காசா மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கும் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் நிர்மூலமாகும் காசா
இஸ்ரேல் தாக்குதலில் நிர்மூலமாகும் காசா

இஸ்ரேலுக்கு அமெரிக்கா தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவிக்கும் வகையில், முன்னதாக ஜெரால்ட் ஃபோர்ட் என்ற போர்க்கப்பலை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பியுள்ளது. மேலும் டிவைட் ஐசன்ஹோவர் என்ற இரண்டாவது போர்க் கப்பலும் அங்கு விரைய இருக்கிறது. இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்களின் நோக்கம், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமன்றி இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை தீவிரப்படுத்தும் வெளிசக்திகளை எச்சரிக்கும் நோக்குடன் மத்திய தரைக்கடலில் வலம் வரும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளை(அக்.18) இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொள்கிறார் ஜோ பைடன். ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் தொடர்பான பாதிப்புகளை பார்வையிடுவதோடு, பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோரை சந்தித்து அமெரிக்காவின் தார்மீக ஆதரவை உறுதி செய்கிறார். மேலும் பிராந்தியத்தில் போர் பதட்டத்தை குறைப்பது மற்றும் முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்துவார். ஜோ பைடனின் இந்த இஸ்ரேல் பயணத்தின் தொடர்ச்சியாக, ஜோர்டானுக்கும் அவர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in