இந்தியாவுக்கு எதிராக திரும்பியது அமெரிக்கா, பிரிட்டன்... கனடா விவகாரத்தால் பரபரப்பு!

மோடி பைடன் ரிஷி சுனக்
மோடி பைடன் ரிஷி சுனக்

41 தூதர்களை கனடா திரும்ப பெற்ற விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் எடுத்துள்ளது உலக அரங்கில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில், இந்தியா மீது கனடா பிரதமர் கூறிய குற்றச்சாட்டு, தொடர்ந்து இரு நாடுகளில் இருந்தும் பரஸ்பரம் தூதர்கள் வெளியேற்றம் மற்றும் தூதரக விசா நிறுத்தம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளால் பரபரப்பு ஏற்பட்டன.

கனடா - இந்தியா உறவில் விரிசல்
கனடா - இந்தியா உறவில் விரிசல்

இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தூதர்கள் இருப்பை குறைத்து கொள்ளும்படி இந்தியா வலியுறுத்தி இருந்தது. கனடாவில் இந்திய தூதர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. ஆனால், இந்தியாவில் கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கை 62 ஆக உள்ளது. எனவே 41 கனடா தூதர்களை திரும்ப பெறும்படியும், அதற்கு அக்டோபர் 20ம் தேதியை இந்தியா காலக்கெடுவாக நிர்ணயித்து இருந்தது.

இந்நிலையில், இந்தியாவின் இந்த வேண்டுகோளுக்கு ஏற்ப கனடா அரசும் தன்னுடைய தூதர்களில் 41 பேரை நேற்று திரும்ப பெற்றது. இதுபற்றி பேசிய அமெரிக்க வெளிவிவகார துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “இந்தியாவில் இருந்து கனடா நாட்டு தூதர்கள் வெளியேறிய விவகாரம் வருத்தம் அளிக்கிறது. விவகாரங்களை தீர்ப்பதற்கு தூதர்கள் இருக்க வேண்டியது தேவையாக உள்ளது. அதனால், கனடா தூதர்களை குறைக்கும்படி இந்திய அரசு வற்புறுத்த கூடாது என நாங்கள் வலியுறுத்தினோம். தூதரக உறவுகள் பற்றிய 1961-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா நடந்து கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார். மேலும், நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில், கனடாவின் குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தீவிர கவனத்தில் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக இந்தியாவுக்கு கண்டனம் தெரிவிக்க தயக்கம் காட்டுகிறபோதும், பிரிட்டனுடன் சேர்ந்து, கனடாவின் சீக்கியர் படுகொலை விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதேபோன்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் இருந்து எண்ணற்ற கனடா தூதர்களை வெளியேற்றுவது என்ற இந்திய அரசின் முடிவுடன் நாங்கள் ஒத்து போகவில்லை என்று தெரிவித்துள்ளது. ஆசியாவில் முக்கிய எதிரி நாடாக பார்க்கப்படும் சீனாவை எதிர்கொள்ளவேண்டும் வகையில், இந்தியா உடனான உறவு பாதிக்கப்பட, அமெரிக்காவோ மற்றும் பிரிட்டனோ விரும்புவதில்லை. எனினும், கனடா விவகாரத்தில் இரு நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக திரும்பியுள்ளதால் உலக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in