
நபிகள் நாயகத்தை அவமதித்ததற்குப் பழிவாங்கும் வகையில் இந்திய நகரங்களில் தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என இந்தியாவுக்கு அல் கொய்தா அமைப்பு கடிதம் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூன் 6 தேதியிட்ட இந்த மிரட்டல் கடிதத்தில், டெல்லி, மும்பை நகரங்களிலும், உத்தர பிரதேசம், குஜராத் மாநிலங்களிலும் தற்கொலைப் படைத் தாக்குதல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாநிலங்களுக்கும் உளவுத் துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உஷார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியத் துணைக்கண்டத்தின் அல் கொய்தா (ஏக்யூஐஎஸ்) என்று அழைக்கப்படும் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், ‘சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் உள்ள இந்துத்துவாவின் பிரச்சாரகர்கள் இஸ்லாம் மதம் மற்றும் அல்லாஹ்வின் ஷரியாவுக்கு விரோதமான வகையில், நமது தத்துவம், முகமது நபிகள் மற்றும் அவரது மனைவி குறித்து மோசமான முறையில் இந்தியத் தொலைக்காட்சி சேனலில் பேசியுள்ளனர். இந்த அவமானத்திற்குப் பதிலளிக்கும் விதமாக உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களின் இதயங்கள் பழிவாங்கும் உணர்வுகளால் நிரம்பியுள்ளன. இந்தியரை ஆக்கிரமித்துள்ள இந்துத்துவா பயங்கரவாதிகள் மற்றும் உலகின் ஒவ்வொரு துடுக்குத்தனமான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களைக் கூறும் வாய்களை நாங்கள் எச்சரிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘நம் நபிகளின் கண்ணியத்திற்காக நாம் போராட வேண்டும். நம் நபிகளின் கண்ணியத்திற்காகப் போராடி இறக்குமாறு மற்றவர்களையும் வலியுறுத்த வேண்டும். நமது நபிகளை அவமதிப்பவர்களைக் கொன்றுவிடுங்கள், நமது நபிகளை அவமதிக்கத் துணிபவர்களைத் தகர்க்க நமது உடலிலும், நம் குழந்தைகளின் உடலிலும் வெடிபொருட்களைக் கட்ட வேண்டும். காவி பயங்கரவாதிகள் இப்போது டெல்லி, மும்பை, உ.பி மற்றும் குஜராத்தில் தங்கள் முடிவுக்குக் காத்திருக்க வேண்டும். அவர்கள் தங்களுடைய வீடுகளிலோ அல்லது ராணுவத்தின் பாதுகாப்பு மண்டலங்களிலோ தஞ்சம் அடையக் கூடாது’ என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக முன்னாள் நிர்வாகிகள் நுபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜிந்தல் ஆகியோர் நபிகள் நாயகம் பற்றி கூறிய கருத்துகளுக்கு முஸ்லிம் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. ஈரான், ஈராக், குவைத், கத்தார், சவூதி அரேபியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்,, ஈரான், ஜோர்டான், ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், மாலத்தீவு, லிபியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு எதிராக அதிகாரபூர்வமாகக் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.