
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமானசேவை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
விமான போக்குவரத்து துறையின் 1200 சர்வர்களிலும் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அமெரிக்காவில் அனைத்து விமான சேவைகளும் பாதிப்படைந்துள்ளன. இதன் காரணமாக அமெரிக்காவில் அனைத்து விமானங்களும் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டன. சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறை முழுவீச்சில் சரி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், " விமான நிலைய நிலவரம் குறித்து விமானிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகவல் அனுப்பும் அமைப்பில் (சர்வரில்) கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் இருந்து வெளிநாடு செல்லும், வெளிநாட்டிலிருந்து அமெரிக்கா வரும் 760 விமானங்கள் முடங்கியுள்ளது" என்றனர்.
அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். இந்த தொழில்நுட்பக் கோளாறு எப்போது சரியாகும் என்று தெரியாததால் பயணிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது.