தந்தையுடன் ஷானு
தந்தையுடன் ஷானு

கனடாவில் வசிக்கும் மகள்... விமானத்தில் தந்தையை அழைத்துச் சென்றபோது நடந்த விபரீதம்!

இந்தியாவில் வசிக்கும் தனது தந்தையை தன்னுடன் அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பிய மகள், தந்தையை விமானத்தில் அழைத்துச் சென்றபோது உயிரிழந்துள்ள  சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடா நாட்டில் ஒன்ராறியோவில் வாழ்ந்துவரும் இந்திய வம்சாவளிப் பெண்ணான ஷானு, இந்தியாவிலிருக்கும்  83 வயதான தனது தந்தை ஹரீஷை  தன்னுடன் வாழ்வதற்காக கனடாவுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தார். அதைத்தொடர்ந்து ஏர் கனடா விமானம் ஒன்றில் டெல்லியில் இருந்து  நேற்று முன்தினம் இருவரும் புறப்பட்டுள்ளார்கள்.

விமானம் புறப்பட்டு ஏழு மணி நேரம் கடந்த நிலையில், திடீரென ஹரீஷுக்கு நெஞ்சுவலி, முதுகு வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.  டெல்லியிலிருந்து, கனடாவிலுள்ள மொன்றியலுக்குச் செல்ல, 17 மணி நேரம் விமானத்தில் பயணிக்க வேண்டும். ஆகவே, கனடா செல்ல இன்னும் 10 மணி நேரம் உள்ளதால், உடனே, தன் தந்தையை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கவேண்டும் என்றும், அதனால் விமானத்தை இந்தியாவுக்குத் திருப்புமாறும் விமானப் பணியாளர்களிடம் கெஞ்சியுள்ளார் ஷானு.

ஆனால், அவர்கள் ஷானுவின் கோரிக்கையை ஏற்கவில்லை. விமானம் தொடர்ந்து ஒன்பது மணி நேரம் பறக்க, தன் கண் முன்னாலேயே கொஞ்சம் கொஞ்சமாக தன் தந்தையின் உயிர் பிரிந்துகொண்டே வந்ததாகக் கூறுகிறார் ஷானு. கனடாவில் விமானம் தரை இறங்கியதும், அங்கு தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் ஹரீஷுக்கு சிகிச்சையளிக்க முயன்றனர். ஆனால்  சிகிச்சையின்போதே அவரது உயிர் பிரிந்துள்ளது.

பல ஆண்டுகளாக தன் தந்தையை தன்னுடன் கனடாவுக்கு அழைத்துக்கொள்ள ஆசையுடன் காத்திருந்ததாக தெரிவிக்கும் ஷானு, விமானியும் ஏர் கனடா பணியாளர்களும் நினைத்திருந்தால் தன் தந்தையைக் காப்பாற்றியிருக்கக் கூடும். ஆனால், அவர்களோ, மனிதத்தன்மையில்லாமல், இரக்கமில்லாமல் நடந்துகொண்டதாகக் கூறுகிறார். 

ஹரீஷ்
ஹரீஷ்

ஆனால், ஹரீஷின் மரணத்துக்குத் தாங்கள் காரணம் என கூறப்படுவதை நிராகரித்துள்ள ஏர் கனடா நிறுவனமோ, தங்கள் பணியாளர்கள் விமானத்தில் முறைப்படி மேற்கொள்ளவேண்டிய நடைமுறைகளை சரியாக பின்பற்றியதாக தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in