ஹாங்காங்கில் ‘ஜாக் மா’ மீள் தரிசனம்

ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?
ஜாக் மா
ஜாக் மா

உலக கோடீஸ்வரர்களில் முக்கியமானவரும் சீனாவின் பிரபல மின்-வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் நிறுவனத் தலைவருமான ஜாக் மா இன்று (அக்.13) ஹாங்காங்கில் தரிசனம் தந்திருக்கிறார். கடந்த அக்டோபரில் சீன அரசுடனான உரசல் சம்பவம் ஒன்று நிகழ்ந்ததிலிருந்து பொது நிகழ்வுகளைத் தவிர்ந்துவந்த ஜாக் மா, தற்போதைய ஹாங்காங் பிரவேசம் மூலம் தனது ஓராண்டு தலைமறைவை முடிவுக்குக் கொண்டுவந்ததாகத் தெரிகிறது.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா
அலிபாபா நிறுவனர் ஜாக் மா

அலிபாபா நிறுவனத்தை உருவாக்கியதில் தனது உழைப்பாலும், வர்த்தக வியூகங்களாலும் சீனாவைத் தாண்டியும் பிரபலமானவர் ஜாக் மா. உடல் உழைப்பு என்பதில் அவரது நாவும் அடங்கும். அதாவது அறத்தோடும் சற்று ஆர்வத்தோடும் பேச ஆரம்பித்தார் எனில், வரம்பின்றி வைத்து செய்துவிடுவார். இப்படி சுய முன்னேற்றம், வர்த்தக மேம்பாடு, தார்மிக ரீதியிலான விமர்சனம் என ஜாக் மா ஆற்றிய உரைகளுக்கென தனி ரசிகர்கள் உண்டு.

ஜாக் மா
ஜாக் மா

அப்படி கடந்த அக்டோபரில் சீன வங்கியாளர்கள் கூட்டமொன்றில் கலந்துகொண்ட ஜாக் மா, தனது அனுபவத்தின் அடிப்படையில் சீன அரசின் நிதி ஒழுங்குமுறை அமைப்புகள் குறித்து சற்று கடுமையாக விமர்சித்தார். இது சீனாவில் புயலைக் கிளப்பியது. இதற்கு விளக்கம் தரும் முயற்சியில், மேலும் சில விமர்சனங்களை ஜாக் மா புதிதாக உதிர்க்க வேண்டியதாயிற்று. சீன அரசு தன் தனி பாணியில் அவருக்குப் பதிலடி தர ஆரம்பித்தது. அரசின் கட்டுப்பாடுகள், விசாரணைகளுக்கு அலிபாபா நிறுவனம் ஆளாகத் தொடங்கியது. வெகுகாலமாக சர்ச்சையிலிருந்து அலிபாபாவின் ஏகபோக வர்த்தகக் கொள்கையை முன்வைத்து அபராதங்கள், வரி விதிப்புகள் என கடும் நெருக்கடியில் அந்நிறுவனம் சிக்கியது.

உச்சமாக அவரது புதிய ‘ஆன்ட்’ (Ant) என்ற நிறுவனத்துக்கான பங்கு வெளியீட்டுக்கு, சீன அரசு ’செக்’ வைத்தது. உலகின் மிகப்பெரும் பங்கு வெளியீடுகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்பட்ட அந்த ஐபிஓ முயற்சிகள் முடங்கிப்போயின. இதையடுத்து அலிபாபா நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சி கண்டன. போட்டி நிறுவனங்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அலிபாபாவின் வர்த்தகப்போக்கை நசுக்க முயல, வியூக விற்பன்னரான ஜாக் மா அடக்கி வாசிக்க ஆரம்பித்தார்.

ஜாக் மா
ஜாக் மா

இச்சூழலில், திடீரென ஜாக் மா தலைமறைவானது பரபரப்பைக் கிளப்பியது. வர்த்தக நிமித்தமான அனைத்திலும் அவர் சார்பில் வேறு நபர்கள் பங்கேற்றனர். ஜாக் மா இருப்பு, உடல்நிலை குறித்த வதந்திகளுக்கும் பஞ்சமில்லை. நிறுவனத்தைப் பாதிக்கும் வகையிலான செய்திகள் வெளியாகும்போது மட்டும், ‘உள்ளேன் ஐயா’ பாணியில் அவரது இருப்பு புகைப்படங்கள் மூலமாக உறுதிசெய்யப்படும். அப்படி ஒருமுறை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிராமப்புற ஆசிரியர்களுடனான மெய் நிகர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு ஜாக் மா பேசினார். முன்னாள் ஆங்கில ஆசிரியரான ஜாக் மா கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும், ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் உரையாடுவதிலும் ஈடுபாடு உடையவர். அதன் பிறகும் பண்ணை வீட்டில், விவசாய நிலங்களைச் சுற்றிப் பார்ப்பது என ஓரிரு புகைப்படங்கள் வெளியாகின. மற்றபடி தனது இருப்பை அடக்கியே வாசித்தார் ஜாக் மா.

ஜாக் மா
ஜாக் மா

திரைமறைவில் சீன அரசுடன் சமாதானமாகப் போவதற்கான நடவடிக்கைகளிலும் ஜாக் மா முயல, அது பலிதமாகவும் செய்தது. கரோனா தடுப்பூசி உருவாக்கத்துக்குப் பெருந்தொகை, சீன அதிபரின் பெயரிலான தொலைநோக்குத் திட்டங்களுக்குப் பெருந்தொகைகள் என தனது நிறுவனத்தின் சார்பில் வாரி வழங்கினார். மறந்தும் வாய் திறவாதிருந்தார். ஒருவழியாக சர்ச்சைகளைத் தொடங்கிவைத்த கடந்த அக்டோபருக்குப் பின்னர், சுமார் ஒரு வருட இடைவெளியில் ஹாங்காங்கில் நடைபெற்ற வர்த்தகர்கள் சந்திப்பு ஒன்றில் ஜாக் மா பங்கேற்றிருக்கிறார். இதை சீன ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

ஜாக் மா-வின் வாழ்க்கையில் அலிபாபா நிறுவனத்தை அவர் கட்டியெழுப்பியது மட்டுமல்ல, அவசியமானபோது பேச்சில் சாடியதும், அது பிரச்சினை ஆனபோது வாயைக் கட்டி மவுனம் காத்ததும்கூட முன்னுதாரணமாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in