ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கே மிகப்பெரிய ஆபத்து - ரிஷி சுனக் எச்சரிக்கை!

ஏஐ தொழில்நுட்பத்தால் மனித குலத்திற்கே மிகப்பெரிய ஆபத்து - ரிஷி சுனக் எச்சரிக்கை!

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு குறித்து உலகெங்கும் விவாதம் நடந்து வரும் நிலையில், இது குறித்து பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கும் வகையிலான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது படுவேகமாக வளர்ந்து வருகிறது. அதிலும் சாட்ஜிபிடி வருகை என்பது ஏஐ துறையை முற்றிலுமாக புரட்டிப் போட்டது. நாம் இதுவரை பார்த்ததிலேயே மிகவும் வலிமையான ஏஐ கருவியாக சாட்ஜிபிடி இருந்தது. அதன் வெற்றிக்கு பிறகே பலரும் ஏஐ சார்ந்த ஆய்வுகளில் தீவிரம் காட்டினர். அதற்கான முதலீடுகளும் எளிதாகக் கிடைத்தது. இதனால் உலகெங்கும் பலரும் ஏஐ சார்ந்து பல்வேறு ஆய்வுகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஏஐ
ஏஐ

அதேநேரம் உலகின் டாப் வல்லுநர்கள் இது குறித்துத் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். ஏஐ கருவிகளை ஒழுங்குபடுத்தவில்லை என்றால் அது மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும், இதனால் உலகில் மிகப் பெரிய வேலையிழப்பு ஏற்படும் அபாயமும் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதற்கிடையே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஏஐ குறித்து சில பகீர் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். ஏஐ கருவிகளை எப்படி ஒழுங்குபடுத்தலாம் என்பது குறித்து சர்வதேச தலைவர்கள் பங்கேற்ற கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ​​ரிஷி சுனக் இந்த கருத்துகளைத் தெரிவித்தார்.

ஏஐ தொடர்பாக பல்வேறு வல்லுநர்களும் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், இப்போது ரிஷி சுனக்கும் இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த ஏஐ கருவிகள் பொது மக்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்து மிக மோசமாக இருக்கலாம் என்றும் ரிஷி சுனக் கவலை தெரிவித்தார். ஏஐ கருவிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஒரே சட்ட திட்டங்களைக் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் கனடா நாடுகளிடையே ஒத்துழைப்பு தேவை என்றும் ரிஷி சுனக் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் நபர்களே ஏஐ கருவிகளால் ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைச் சுட்டிக் காட்டி வருகிறார்கள். எனவே, இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம் இந்தத் துறையில் வல்லுநர்களாக இருப்போரே இது குறித்துப் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள். எனவே, நாம் இந்த விவகாரத்தை எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

ரிஷி சுனக்
ரிஷி சுனக்

செயற்கை நுண்ணறிவால் நமக்கு மிகப் பெரிய ஆபத்துகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. அவை தொற்று நோய் அல்லது அணு ஆயுதத்தைப் போலத் தான். மனித குலத்திற்கே அது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். எனவே, நாம் முன்கூட்டியே இந்த விவகாரத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலைமை கையை மீறிச் சென்றுவிட்டால் கஷ்டம்தான்" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக உலகின் பெரும் பணக்காரரான எலான் எஸ்கும் கிட்டதட்ட இதைக் கருத்தைத் தான் கூறியிருந்தார். செயற்கை நுண்ணறிவால் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும் என்று எலான் மஸ்கும் எச்சரித்திருந்தார். இதற்கிடையே ரிஷி சுனக்கும் இப்படி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in