பட்டினியில் இறக்கும் ஆப்கன் குழந்தைகள்

மேற்குலகம் கைவிட்டதால் பரிதவிக்கும் மக்கள்
பட்டினியில் இறக்கும் ஆப்கன் குழந்தைகள்

ஆப்கானிஸ்தான் குறித்த சர்வதேசப் பார்வைகள் அகன்றுவிட்ட நிலையில், கைவிடப்பட்ட ஆப்கானியக் குடும்பங்கள் மரணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. குறிப்பாக, குழந்தைகளின் நிலை மிகுந்த மோசமடைந்திருக்கிறது. ஆப்கனில் இந்த ஆண்டின் இறுதியில் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ் எச்சரித்திருக்கிறார். மேலும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயம் இருப்பதாகவும் அச்சம் எழுந்திருக்கிறது.

இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானின் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் நிதியுதவி செய்துவந்த மேற்கத்திய நாடுகள், தாலிபான்கள் ஆட்சியின்கீழ் வந்துவிட்ட ஆப்கானியர்களுக்கு உதவுவதைக் கைவிட்டுவிட்டன. தாலிபான்களை பயங்கரவாதிகள் என்று சொல்லி இந்த முடிவை எடுத்த மேற்கத்திய நாடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளில் ஆப்கனுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக, நன்கொடையாளர்களைச் சார்ந்தே ஆப்கன் மருத்துவத் துறை இருந்த நிலையில், இன்றைக்கு நிலைமை படுமோசமாகியிருக்கிறது. மறுபுறம் ஆட்சி நிர்வாகத்தைக் கைக்கொண்டிருக்கும் தாலிபான்கள், இந்த அவலங்களைக் கண்டுகொள்வதில்லை என்பது இன்னும் வேதனை.

ஆப்கன் மருத்துவமனைகளில், போதிய மருத்துவ சாதனங்கள் இல்லாமல் நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதில் பெரும் சிரமங்களை மருத்துவர்கள் எதிர்கொள்கிறார்கள். மகப்பேறு வார்டுகளில் கையுறைகூட இல்லை எனும் அளவுக்கு அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. கையுறைகளுக்குக் கர்ப்பிணிகளே செலவு செய்தாக வேண்டும் எனும் சூழல் நிலவுகிறது. மருத்துவமனைகள் மீது தாலிபான்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் எச்சம் இன்றும் நீடிக்கிறது. பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் வார்டுகள் சேதமடைந்த நிலையில் இருக்கின்றன.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பல குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல மருத்துவமனை வார்டுகளில் குழந்தைகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கின்றன.

தாலிபான்களின் வருகையால், ஆப்கன் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்திருக்கிறது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தருவது குறித்து தாலிபான் ஆட்சியாளர்கள் அலட்டிக்கொள்வதில்லை. சர்வதேச உதவிகள் மூலம் உத்தரவாதப்படுத்தப்பட்டிருந்த வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகிவிட்டன. செப்டம்பர் மாதம் ஆப்கன் தலைநகர் காபூலுக்குச் சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம், அந்நாட்டின் ஒட்டுமொத்த சுகாதாரத் துறையும் முழுமையாக முடங்கும் அபாயம் இருப்பதாக எச்சரித்தார். மருத்துவப் பணியாளர்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை என்றும் செய்திகள் வெளியான நிலையில், ஒரு மாதத்துக்கான சம்பளப் பணத்தை ஐநாவே ஏற்பாடு செய்தது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பல குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல மருத்துவமனை வார்டுகளில் குழந்தைகள் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் தட்டம்மையால் 87 குழந்தைகள் உயிரிழந்திருக்கும் நிலையில், தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால் மேலும் பல குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உலக நாடுகளின் கருணைதான் தங்களைக் காப்பாற்றும் எனக் காத்திருக்கிறார்கள் ஆப்கானியர்களும் அவர்களது பச்சிளம் குழந்தைகளும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in