இனவெறுப்புக் கருத்து: ராப் பாடகருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அடிடாஸ்!

இனவெறுப்புக் கருத்து: ராப் பாடகருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்த அடிடாஸ்!

கறுப்பினத்தவர்களுக்கும் யூதர்களுக்கும் எதிராகக் கருத்து தெரிவித்ததாக, ராப் பாடகர் கான்யே வெஸ்ட் மீது விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், அவருடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ரத்துசெய்யப்படுவதாக ஜெர்மனியைச் சேர்ந்த காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ராப் பாடகர் கான்யே வெஸ்ட், ஃபேஷன் டிஸைனராகவும் புகழ்பெற்றவர். நடிகையும் தொலைக்காட்சிப் பிரபலமுமான கிம் கர்டாஷியனின் முன்னாள் கணவர். சமீபத்தில் ‘யே’ எனத் தனது பெயரை மாற்றிக்கொண்ட கான்யே வெஸ்ட் சமூகவலைதளங்களில் அதிரடியான கருத்துகளைப் பதிவுசெய்ததன் மூலம் பல முறை சர்ச்சைகளில் சிக்கியவர்.

சமீபத்தில் பாரிஸ் நகரில் நடந்த ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் ‘ஒயிட் லைவ்ஸ் மேட்டர்’ (White Lives Matter) எனும் வாசகம் அடங்கிய டி-ஷர்ட் அணிந்து அவர் கலந்துகொண்டார். கறுப்பினத்தவர்களுக்கு எதிராக நிலவும் நிறவெறியைக் கண்டித்து அமெரிக்காவில் தொடங்கிய ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ இயக்கத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வெள்ளையின வெறியர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அது. கறுப்பினத்தைச் சேர்ந்தவரான கான்யே வெஸ்ட், ஏற்கெனவே அந்த இனத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர். இந்தப் பின்னணி கொண்ட அவர், ‘ஒயிட் லைவ்ஸ் மேட்டர்’ எனும் வாசகம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்திருந்ததால், கறுப்பினத்தைச் சேர்ந்த பலரும் அவருக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

அத்துடன், யூதர்கள் மீதான இனவெறியை வெளிப்படுத்தும் விதத்தில் சமூகவலைதளத்தில் அவர் எழுதியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. ஏற்கெனவே கறுப்பினத்தவர், யூதர்கள் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவித்துவந்ததும் அவர் மீதான விமர்சனங்களை அதிகரித்தது. அவரது சர்ச்சைக் கருத்துகளைக் கண்டிக்கும் வகையில் வோக் நிறுவனம் ஏற்கெனவே அவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.

இந்நிலையில், அடிடாஸ் நிறுவனமும் அவருடனான ஒப்பந்தத்தை ரத்து செய்திருக்கிறது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ‘கான்யே வெஸ்ட்டின் கருத்துகள் ஏற்கத்தகாதவை, வெறுப்பு நிறைந்தவை, ஆபத்தானவை' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மை ஆகியவற்றைக் குறித்த தங்கள் நிறுவனத்தின் விழுமியங்களை அவர் மீறிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in