டெஸ்மண்ட் டூட்டு: தென்னாப்பிரிக்க காந்தியர்!

டெஸ்மண்ட் டூட்டு
டெஸ்மண்ட் டூட்டு

தென்னாப்பிரிக்க வரலாற்றில் மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றிலும் மறக்க முடியாத ஆளுமையாக வாழ்ந்தவரும், ‘தி ஆர்ச்’ என்றே அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவருமான டெஸ்மண்ட் டூட்டு நேற்று (டிச.26) காலமானார். நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பர் அவர். 1948 முதல் 1991 வரை தென்னாப்பிரிக்காவில் நிறவெறி ஆட்சி நடத்திவந்த வெள்ளையினச் சிறுபான்மை அரசு முடிவுக்கு வர, டெஸ்மண்ட் டூட்டுவின் தன்னலமற்ற உழைப்பு முக்கியக் காரணம்.

ஆக்ரோஷமான அவரது உரைகள் தென்னாப்பிரிக்கக் கறுப்பின மக்களுக்கு உத்வேகம் தந்தன. வெள்ளையினத்தவர்கள் மத்தியில் குற்றவுணர்வையும் ஏற்படுத்தின.

இளமைக் காலம்

1931 அக்டோபர் 7-ல் தென்னாப்பிரிக்காவின் மேற்கு ட்ரான்ஸ்வாலில் (தற்போது மேற்கு மாகாணம்) உள்ள க்ளெர்க்ஸ்ட்ராப் எனும் சிறுநகரில் பிறந்தவர் டெஸ்மண்ட் டூட்டு. அவரது தந்தை, பள்ளித் தலைமை ஆசிரியர். டூட்டுவுக்கு 12 வயதானபோது அவரது குடும்பம் ஜோகன்னர்ஸ்பெர்க்குக்குக் குடிபெயர்ந்தது. மருத்துவராவதுதான் அவரது கனவாக இருந்தது. எனினும், அதற்கு அவரது குடும்பத்தின் பொருளாதாரச் சூழல் கைகொடுக்கவில்லை.

ஒருகட்டத்தில், அவரும் தன் தந்தையைப் போல ஆசிரியராவது எனத் தீர்மானித்துக்கொண்டார். இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் தேசியக் கட்சி (National Party) ஆட்சியைப் பிடித்தது. நிறவெறி ஆட்சியும் தொடங்கியது. ஏற்கெனவே நிறவெறி தலைவிரித்தாடிய தென்னாப்பிரிக்காவில், நிறவெறியைச் சட்டபூர்வமாக்கியது வெள்ளையினத்தவர்கள் நிறைந்த தேசியக் கட்சி அரசு. 1950-ல் ‘தி க்ரூப் ஏரியாஸ் ஆக்ட்’ எனும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி கறுப்பின மக்கள் கடுமையான அடக்குமுறையைச் சந்தித்தனர். வெள்ளையினத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் வசிக்கக் கூடாது, நிலம் வைத்திருக்கக் கூடாது, தொழில் நடத்தக் கூடாது எனப் பல்வேறு ஒடுக்குமுறைகள் அமல்படுத்தப்பட்டன.

இப்படியாக, அந்நாட்டின் மக்கள்தொகையில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்த கறுப்பின மக்கள், வெள்ளையினச் சிறுபான்மையின அரசால் கொடுமைப்படுத்தப்பட்டனர். இதற்குச் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தாலும் தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசு பின்வாங்கவில்லை. கறுப்பின மக்கள் மீது அடக்குமுறை அதிகரித்தது. கறுப்பின மாணவர்களுக்குப் பல்வேறு விதங்களில் கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

சவால்களுக்கு மத்தியில் பிரிட்டோரியா பன்டு நார்மல் கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி முடித்தார். 1954-ல் தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டம் வாங்கினார். திருமணத்துக்குப் பின்னர் முன்சிவெல்லெ உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அப்போது அவரது தந்தை அங்கு தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தார். ஒருகட்டத்தில் ஆன்மிகத்தின் பக்கம் டெஸ்மண்ட் டூட்டுவின் கவனம் திரும்பியது. கல்வி நிறுவனங்களில் நிறவெறி அடிப்படையிலான பாகுபாடு நிலவியதைக் கண்டு வெதும்பியவர், 1957-ல் ஆசிரியர் பணியைவிட்டு முற்றாக விலகினார். 1958-ல் ரோஸ்டென்வில்லேயில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் இறையியல் கல்லூரியில் சேர்ந்தார். பாதிரியாராக சேவையாற்றத் தொடங்கியவர், 1962-ல் லண்டனுக்குச் சென்று இறையியல் மேற்படிப்பை மேற்கொண்டார். இறையியல் மேற்படிப்புகள், கல்லூரிப் பேராசியர் பணி எனத் தொடர்ந்து இயங்கிவந்தவர், 1975-ல் ஜோகன்னர்ஸ்பெர்கின் ஆங்கிலிகன் டீனாக நியமிக்கப்பட்டார். ஜோகன்னர்ஸ்பெர்கின் முதல் கறுப்பின ஆர்ச் பிஷப் அவர்தான்.

அந்தக் காலகட்டத்தில் நிறவெறிக்கு எதிரான கறுப்பின மக்களின் குரலாக அவர் ஒலிக்கத் தொடங்கினார். நிறவெறிக்கு எதிரான இயக்கத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டதும், பலர் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டதும் அவரைக் கொந்தளிக்கச் செய்தன. நிறவெறி அரசின் கொடுங்கோன்மையைக் கண்டு ஆவேசமடைந்த டெஸ்மண்ட் டூட்டு, நிறவெறிக்கு எதிரான போராட்டக் குழுவின் சார்பில் மேடைகளில் ஆவேசமாக முழங்கினார். “இந்த நாட்டின் அரசியல் அமைப்பாக இருக்கும் நிறவெறியானது, அறமற்றது. இந்த நாட்டின் அரசியல் அமைப்பு தீங்கு நிறைந்தது” எனும் அவரது முழக்கம் தென்னாப்பிரிக்க எல்லையைத் தாண்டி உலகம் முழுவதும் எதிரொலித்தது.

1980-களில் உலகமெங்கும் பயணித்த அவர், நிறவெறியின் கொடுமைகளைப் பற்றி வெள்ளையின நாடுகளுக்கு உணர்த்திவந்தார். நிறவெறிக்கு எதிராகப் போராடியதற்காக 1984-ல் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய நண்பர்

1950-களில் மாணவப் பருவத்திலேயே நெல்சன் மண்டேலாவும், டெஸ்மண்ட் டூட்டுவும் ஒரு விவாத நிகழ்ச்சியின்போது சந்தித்துக்கொண்டனர். பின்னர் அதிக முறை அவர்கள் சந்தித்துக்கொள்ளவில்லை என்றாலும் இருவரும் ஒரே நோக்கில் இயங்கிவந்தவர்கள். மண்டேலா சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும் அவர்கள் இருவரும் கடிதத் தொடர்பு வைத்திருந்தனர். மண்டேலா விடுதலையானதும் கேப்டவுனில் ஆர்ச் பிஷப் மாளிகையில் டெஸ்மண்ட் டூட்டுவின் விருந்தினராகத் தங்கினார். சொவீட்டோ நகரில் விலாகாஸி தெருவில் வெவ்வேறு காலகட்டங்களில் வசித்த மண்டேலாவும், டெஸ்மண்ட் டூட்டுவும் அமைதிக்கான நோபல் பரிசால் அலங்கரிக்கப்பட்டவர்கள். ஒரே தெருவில் வசித்த நண்பர்களுக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.

நெல்சன் மண்டேலாவுடன் டெஸ்மண்ட் டூட்டு
நெல்சன் மண்டேலாவுடன் டெஸ்மண்ட் டூட்டு

1994-ல் நெல்சன் மண்டேலா அதிபரானபோது, “கடந்த 300 வருடங்களாக நாம் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் இதுதான். விடுதலைக்கான நாள் இதுதான்” என ஆனந்த முழக்கமிட்டார் டெஸ்மண்ட் டூட்டு. இருவருக்கும் இடையிலான இந்த நட்பு தென்னாப்பிரிக்காவின் முன்னேற்றத்துக்கும் வழிவகுத்தது. வெறுப்பிலிருந்தும் பழிவாங்கும் உணர்ச்சியிலிருந்தும் தென்னாப்பிரிக்காவைக் காப்பாற்றியவர் என டெஸ்மண்ட் டூட்டுவை நெல்சன் மண்டேலா புகழ்ந்தார்.

காந்தியின் தாக்கம்

கறுப்பின மக்கள் மீது வெள்ளையினத்தவர் நிகழ்த்திய குற்றங்கள் குறித்து விசாரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா அமைத்த உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் தலைவராக டெஸ்மண்ட் டூட்டு நியமிக்கப்பட்டார். அந்த ஆணையத்தின் முன்பு வெள்ளையினத்தவரும் சாட்சியமளித்தனர். தங்களுக்குக் கொடுமை இழைத்த வெள்ளையினத்தவரை மன்னிக்க முன்வந்த கறுப்பின மக்களின் பெருந்தன்மையைக் கண்டு டெஸ்மண்ட் டூட்டு பெருமிதம் கொண்டார். குற்றம் இழைத்தவர்களைக்கூட மன்னிக்கலாம் எனும் மனநிலைக்கு அவர் செல்ல காந்தியின் அகிம்சை கொள்கை தந்த தாக்கம்தான் காரணம்.

காந்தி அமைதிப் பரிசு விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்தும் டெஸ்மண்ட் டூட்டு
காந்தி அமைதிப் பரிசு விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஏற்புரை நிகழ்த்தும் டெஸ்மண்ட் டூட்டுiali

2005-ல் அவருக்கு காந்தி அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. காந்தியின் போதனைகள் குறித்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திருந்த டெஸ்மண்ட் டூட்டுவுக்கு அந்த விருதை வழங்கி கவுரவித்தவர் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

நிகழ்ச்சியில் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், “காந்தி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினார். காலனி ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்பினார். எனினும், பிரிட்டன் மக்களின் நட்பை அவர் நாடினார். டெஸ்மண்ட் டூட்டுவும் அவரது சகா நெல்சன் மண்டேலாவும், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் வழியாக அதைத்தான் பின்பற்றினர். நிறவெறியை முடிவுக்குக் கொண்டுவரவே அவர்கள் இருவரும் விரும்பினர். அதேவேளையில், அனைத்து இனத்தவரும், மதத்தினரும், சமூகத்தினரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ வேண்டும் என்றும் விரும்பினர். காந்தியிஸத்துக்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டார்.

மூத்த பத்திரிகையாளர் சேகர் குப்தாவுக்கு அளித்திருந்த பேட்டியில், “ஐநாவின் திட்டங்களில் ஒன்றாக நிறவெறியை ஒழிக்கும் பொறுப்பை முதன்முதலில் வலியுறுத்திய நாடு இந்தியாதான். இந்தியா எங்களுக்கு வழங்கிய அன்பளிப்பை நாங்கள் திருப்பியளித்தோம் - அது, மகாத்மா காந்தி” எனக் குறிப்பிட்டிருந்தார் டெஸ்மண்ட் டூட்டு. நிறவெறியை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய தென்னாப்பிரிக்க மக்களுக்கு உந்துசக்தியாக காந்தி இருந்தார் எனக் குறிப்பிட்ட டெஸ்மண்ட் டூட்டு, “தென்னாப்பிரிக்க மக்கள் மட்டுமல்ல, அமெரிக்காவின் சிவில் உரிமைப் போராளிகளுக்கு உந்துசக்தியாக காந்தி இருந்தார். காந்தியைத் தனது ஆசான்களில் ஒருவராக மார்ட்டின் லூதர் கிங் குறிப்பிட்டார். நாங்கள் காந்திக்கு நிறையவே நன்றிக் கடன்பட்டிருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

சமரசமற்றவர்

மனதில் தோன்றும் விஷயங்களை மறைக்காமல் துணிச்சலுடன் பேசும் தன்மை கொண்டவராகவே இறுதிவரை இருந்தார் டெஸ்மண்ட் டூட்டு. ஒரு நாட்டின் தலைவர் என்பவர் ஒரு சேவகனாக இருக்க வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் (ஏஎன்சி) அரசு மீது தொடர்ந்து விமர்சனங்களையும் முன்வைத்துவந்தார். ஏழ்மையையும் சமூக ஏற்றத்தாழ்வையும் களைவதாக அக்கட்சித் தலைவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது குறித்து கேள்வி எழுப்பிவந்தார்.

“எப்படி நிறவெறி வெள்ளையின அரசு வீழ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தோமோ அப்படி, எங்களைப் பிரதிநித்துவப்படுத்தாத இந்த (ஏஎன்சி) அரசும் வீழ வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வோம்” என எச்சரித்தார். அவரது உலகப் பார்வை முற்போக்குச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது. பெண் குழந்தைகளின் கல்விக்காகக் குரல் கொடுத்தவர் அவர். திபெத்தின் உரிமைக்காகச் சீனாவை நோக்கிக் குரல் எழுப்பினார்.

அதேபோல், சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்தும் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திவந்தார். உரையாடல்கள் மூலமே எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என உறுதியாக நம்பியவர். தென்னாப்பிரிக்கா ஒரு ‘வானவில் தேச’மாக இருக்க வேண்டும் என விரும்பியவர் டெஸ்மண்ட் டூட்டு. அனைவரும் இணைந்து வாழ வேண்டும் எனும் நோக்கில் அந்தப் பதத்தை உருவாக்கியவரும் அவர்தான்.

எளிதில் உணர்ச்சிவசப்படுபவராக இருந்தார். உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னே சாட்சியமளித்த கறுப்பின மக்கள் சொன்ன கண்ணீர்க் கதைகளைக் கேட்டு, அந்த அறையில் இருந்த டெஸ்மண்ட் டூட்டு கதறி அழுதார். நெருங்கிய நண்பரான நெல்சன் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அவருக்கு வாய்க்கவில்லை. ஜேக்கப் ஜூமா தலைமையிலான அரசு அந்நிகழ்வுக்குத் தன்னை அழைக்கவில்லை எனக் கோபம் கொண்டார். அதேபோல் அவரது நகைச்சுவை உணர்வும் அபாரமானது. தலாய் லாமாவுடன் அவர் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலில் தெறித்த நகைச்சுவை உணர்வே அதற்கு சாட்சி. மேடைகளில் நடனக் கலைஞர்களுடன் இணைந்து மலர்ந்த முகத்துடன் நடனம் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டிருந்தார்.

தலாய் லாமாவுடன் அளவளாவும் டெஸ்மண்ட் டூட்டு
தலாய் லாமாவுடன் அளவளாவும் டெஸ்மண்ட் டூட்டு

மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் கிங், அன்னை தெரசா, தலாய் லாமா போன்ற ஆளுமைகள் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்தவர் டெஸ்மண்ட் டூட்டு. இறைப்பணியில்தான் அவரது முழுக் கவனமும் இருந்தது. அரசியலுக்கு வரும் எண்ணம் அவருக்கு இருந்ததில்லை.

ஆனால், அரசியலுக்குள் நேரடியாக நுழையாமலேயே தென்னாப்பிரிக்க மக்களின் வாழ்வில் அவர் ஏற்படுத்திய மாற்றம் உலகின் எந்த ஆன்மிகத் தலைவருக்கும் உதாரணமாகத் திகழ்வது என்பதில் சந்தேகமில்லை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in