பெண் விவகாரத்தில் பதவி விலகிய சிங்கப்பூர் 'டான்'!: பின்னணி முழு விவரம்

டான் சுவாங் ஜின்,செங் லி ஹுய்
டான் சுவாங் ஜின்,செங் லி ஹுய்பெண் விவகாரத்தில் பதவி விலகிய சிங்கப்பூர் 'டான்'!: பின்னணி முழு விவரம்

பெண் எம்.பியுடன் தகாத உறவால் எழுந்த சர்ச்சையால் சிங்கப்பூர் சபாநாயகர் டான் சுவாங் ஜின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதே போல பெண் எம்.பி செங் லி ஹுய்யும் தனது பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் செங் லி ஹுய்(47). இவருடன் தகாத உறவு வைத்துக்கொண்டதால் நாடாளுமன்ற சபாநாயகர் டான் சுவான் ஜின்(54) பதவி விலகியதுடன், மக்கள் செயல் கட்சியிலிருந்தும் வெளியேறியுள்ளார். இதே போல செங் லி ஹுய்யும் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ள விவகாரம் சிங்கப்பூர் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சிங்கப்பூர் சபாநாயகர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள டான் சுவாங் ஜின்னுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். எம்.பி பதவியை ராஜினாமா செய்த செங் லிக்கு இன்னும் திருணமாகவில்லை.

தனது ராஜினாமா கடிதத்தில், தனது குடும்பத்தில் கவனம் செலுத்த உள்ளதால் அரசியலில் இருந்து விலகுவதாக டான் சுவாங் ஜின் அறிவித்துள்ளார். பெண் எம்.பி செங் லி ஹுய்யும் தனது பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளார்.

இவர்களது ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், " மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பியின் ராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருப்பதை அறிந்து, அதை கடந்த பிப்ரவரி மாதமே நிறுத்தச் சொன்னேன். அதன் பிறகும் அவர்களது உறவு தொடர்ந்தது. இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி சபாநாயகரிடம் கூறியும் அவர்கள் உறவு தொடர்ந்தது. இந்தநிலையில், தான் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளேன்" என்றார்.

டான் சுவான் ஜின்,
டான் சுவான் ஜின்,பெண் விவகாரத்தில் பதவி விலகிய சிங்கப்பூர் 'டான்'!: பின்னணி முழு விவரம்

சிங்கப்பூர் சபாநாயகர் பதவியில் இருந்து பதவி விலகியுள்ள டான் சுவான் ஜின், அரசியலில் நுழைவதற்கு முன்பு சிங்கப்பூர் ஆயுதப் படையில் பிரிகேடியர் ஜெனரலாக பதவி வகித்தவர். கடந்த 1987-ம் ஆண்டில் அவர் சிங்கப்பூர் ஆயுதப் படையில் சேர்ந்தார். இதன் பின் 2011-ம் ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையிலிருந்து ஓய்வுபெற்று அரசியலில் குதித்தார்.

அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மரீன் பரேட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சி சார்பில் போட்டியிட்டார். 2013-ம் ஆண்டில் தற்காலிக மனிதவள அமைச்சராக டான் சுவான் ஜின் நியமிக்கப்பட்டார். அதற்கு மறு ஆண்டு மே மாதம் அவரின் பதவி நிரந்தரமாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 2014 ஜனவரியில் சிங்கப்பூர் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

இதன் பிறகு 2015-ம் ஆண்டில் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி சமுதாய, குடும்பநல மேம்பாட்டு அமைச்சராக டான் நியமிக்கப்பட்டார். 2015 பொதுத் தேர்தலுக்குப் பிறகும் அப்பொறுப்பை டான் வகித்தார். 2017-ம் ஆண்டில் நாடாளுமன்ற சபாநாயகராக டான் நியமிக்கப்பட்டார். அந்தப் பொறுப்பை வகித்த ஹலிமா யாக்கோப் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகினார். அதனைத் தொடர்ந்து அப்பொறுப்பை டான் ஏற்றார்.

கடந்த 2023 ஏப்.17-ம் தேதி நாடளுமன்றத்தில் பாட்டாளி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் லிம்மை தகாத வார்த்தையில் டான் சுவான் ஜின் விமர்சித்தது ஒலிவாங்கியில் கேட்டது பெரும் சர்ச்சையானது. இதனால் ஜேம்ஸிடம் டான் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் பெண் விவகாரத்தில் தனது பதவியை டான் தற்போது ராஜினாமா செய்துள்ளது சிங்கப்பூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in