‘பொருளாதாரம் வலுப்பட சீர்திருத்தங்கள் அவசியம்’ - பாகிஸ்தான் அரசுக்கான விமர்சனம் நமக்கும் பொருந்துமா?

‘பொருளாதாரம் வலுப்பட சீர்திருத்தங்கள் அவசியம்’ - பாகிஸ்தான் அரசுக்கான விமர்சனம் நமக்கும் பொருந்துமா?

பாகிஸ்தானுடைய பொருளாதார நிலைமை மோசமாக இருக்கிறது. இந்த நிலையிலிருந்து மீள வேண்டும் என்றால் துணிச்சலான சீர்திருத்தங்கள் அவசியம். ஆனால் பாகிஸ்தானின் இரண்டு பெரிய தேசிய அரசியல் கட்சிகளோ, அந்நாட்டு நிர்வாகத்தை எப்போதும் ஆட்டிப்படைக்கும் ராணுவத் தலைமையோ அதற்கு இடம் தராது என்கிறார் எஸ்.அக்பர் ஜைதி. அரசியல்-பொருளாதார விமர்சகரான அவர் ‘டான்’ நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் பாகிஸ்தானுடைய பொருளாதார பலவீனங்களைப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

அக்பர் ஜைதியின் ஆழமான அலசல் கட்டுரையின் சாரம்:

‘மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பாகிஸ்தானின் பொருளாதாரம் சுருங்கியது. அதன் வளர்ச்சி வேகம் 0.5 சதவீதமாக இருந்தது. 2020-21-ல் வளர்ச்சி வீதம் 5.7 சதவீதமாக பாய்ந்தது. அரசு நிர்ணயித்த இலக்கைப் போல இரண்டு மடங்கு வளர்ச்சி இது. கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகான ‘V’ வடிவ எழுச்சி இது. பாகிஸ்தானின் ஆட்சியாளர்களோ, பொருளாதார நிபுணர்களோ எதிர்பாராத வகையில் நிதியாண்டில் (ஜூனில் முடிகிறது) பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்தையும் எட்டியது.

அரசுகள் அறிவிக்கும் பொருளாதார இலக்குகள் அதே நிதியாண்டில் நிறைவேறுவது அடிக்கடி நடப்பதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்த்ததையும் விட அதிகமாகவே பொருளாதாரம் வளர்ந்திருக்கிறது. இதைப் படித்த பிறகு பாகிஸ்தானின் பொருளாதாரம் வலுவடைந்துவிட்டது, வேகமாக வளர்கிறது என்று தவறான முடிவுக்கு வந்துவிடக் கூடாது. பாகிஸ்தானியர்களின் நபர்வாரி வருமானமும் இதுவரை இருந்திராத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இவ்வளவுக்கும் நடுவிலும் பன்னாட்டுச் செலாவணி நிதியத்திடம் (ஐஎம்எஃப்) கடன் கேட்டு, பாகிஸ்தான் காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிதியுதவி எதற்காக என்றால் - நாடு திவாலாகிவிடாமல் இருக்க, அந்நியக் கடன்களுக்கு வட்டி – அசல் தவணைகளைத் திருப்பிச் செலுத்தாமல் தவறிவிடக் கூடாது என்பதற்காக. அப்படியானால் முதலில் சொன்ன பொருளாதார சாதனைகள் என்னவாயிற்று, சில வாரங்களுக்கெல்லாம் அவை ஆவியாகிவிட்டனவா?

பாகிஸ்தானின் பொருளாதாரக் கட்டமைப்பில் அடிப்படையிலேயே பல கோளாறுகள் இருக்கின்றன. முழுமையான ராணுவ அரசோ, அரைகுறையான ராணுவ அரசோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசோ அந்தக் கோளாறுகள் என்னவென்று பார்க்கும் அக்கறையில் இருப்பதே இல்லை. அடித்தளக் கட்டமைப்பில் உள்ள கோளாறுகள் அவற்றுக்குத் தெரிந்திருந்தாலும் கடுமையான பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்த அவை எப்போதும் தயாராக இருந்ததில்லை. இதைச் செய்வதென்றால் சமூகத்தில் கடுமையான எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருக்கும். அரசின் செலவுகளைக் கணிசமாகக் கட்டுப்படுத்துவதுடன் வருவாயைப் பெருக்க வழிகாண வேண்டியிருக்கும். மானியச் செலவுகளுக்குக் கடிவாளம் போட வேண்டும், அரசுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டும், சுயநலம் மிக்க பல செல்வாக்குள்ள வணிக குழுக்களை அதிருப்திக்குள்ளாக்க வேண்டும். இந்தக் குழுக்களில் பல, பாகிஸ்தானை ஆட்சி செய்யும் அரசுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பணம், பொருள், ஆதரவு தந்து ஆதரிப்பவை. கைம்மாறாக அரசின் அரவணைப்பையும் மானிய – கடன் உதவிகளையும் பெறுபவை. நாட்டின் ஒவ்வொரு துறையுமே அரசு – ஆட்சியாளர்கள் – தொழிலதிபர்களைக் கொண்ட கூட்டுகளால் பின்னிப் பிணைந்தவை. நிலம் உள்ளிட்ட சொத்துகளாக இருந்தாலும் நிதி முதலீடாக இருந்தாலும் இந்தக் குழுக்களின் நலன்களைக் குலைத்து எந்தச் சீர்திருத்தம் செய்தாலும் அது ஆட்சியாளர்களைக் கடுமையாகவே பாதித்துவிடும்.

நாட்டின் இயற்கை வளங்களை உரிய வகையில் மறுவிநியோகம் செய்தால்தான் நாட்டுக்கு அதிகபட்ச பொருளாதாரப் பலன்கள் கிடைக்கும். இல்லாவிட்டால் மிகச் சிலர் மட்டுமே தொடர்ந்து அவற்றை ஆக்கிரமித்துக்கொண்டு பலன்களைப் பெறுவார்கள். அதே சமயம் நாட்டின் முன்னேற்றத்துக்கான பொருளாதார முன்னுரிமைகளை மாற்ற வேண்டியதும் அரசின் கடமை.

பாகிஸ்தானின் பொருளாதாரம் வளர்வதைப்போல கடந்த இரண்டு ஆண்டுகளாக மட்டும் காட்டும் அடையாளங்கள், உண்மையிலேயே வளர்ச்சியின் தன்மை, தரம், அளவு எதுவுமே இயற்கையானது அல்ல என்பதையே உணர்த்துகின்றன. சீட்டுக்கட்டுகளை அடுக்கிக் கட்டப்படும் வீடுகளைப்போல இந்த வளர்ச்சி மிகவும் அற்பமானது, எந்த நேரத்திலும் சரிந்துவிடக்கூடியது. இத்தகைய வளர்ச்சிகளில் குறுகிய காலத்துக்கு மட்டுமே சிலருக்குப் பலன்கள் கிடைக்கும். அரசின் மீது செல்வாக்கு செலுத்துபவர்கள், அவர்களுடைய கூட்டாளிகள், ஆதிக்க சக்திகள் குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பார்கள், லாபமும் எடுப்பார்கள்.

சமீபத்திய உலக நிகழ்வுகள் பாகிஸ்தானை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதித்துக்கொண்டிருக்கின்றன. நாற்பதாண்டுகளுக்குப் பிறகு வேறுவிதமான அரசியல் சமன்பாட்டை பாகிஸ்தான் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் இப்போது ஆப்கானிஸ்தான் கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் அல்ல. உலக அளவில் புவியரசியல் முக்கியத்துவங்களும் இடம்பெயர்கின்றன. சீனாவின் கவனம் இப்போது மத்திய கிழக்கு மற்றும் அதற்கும் அப்பாலுள்ள நாடுகள் பக்கம் திரும்பியிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் பாகிஸ்தானுடைய முக்கியத்துவமும் மதிப்பும் குறைந்து வருகிறது. இவை பாகிஸ்தானின் பொருளாதாரத்தில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். பாகிஸ்தானை நெருக்கடிகளிலிருந்து மீட்க முன்பைப் போல பிற நாடுகள் ஓடிவராது.

உலகம் முழுவதிலுமே பொருளாதாரம் மந்தநிலை நோக்கிச் செல்கிறது. ஐரோப்பாவில் நடக்கும் உக்ரைன் – ரஷ்யா மோதலின் விளைவு உலகம் முழுவதுமே எதிரொலிக்கிறது. பண்டங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2008-ல் நிலவியதைப்போன்ற சூழல்தான் என்றாலும் இந்த முறை சீனாவாலும் உதவிக்கு வரமுடியாது. கோவிட் பெருந்தொற்று வேறு விதமாகத் திரிந்து பரவுவதால், பொது முடக்கத்தால் அந்நாடு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உலக அளவில் பொருளாதாரம் நலிவுறும்போதெல்லாம் (பிற நாடுகளின் பண உதவியால்) பாகிஸ்தானுக்குப் பிரச்சினைகள் அதிகமாக ஏற்பட்டதில்லை. இனி அப்படியெல்லாம் எதிர்பார்க்க முடியாது.

அமெரிக்க டாலருக்கு நிகரான செலாவணி மதிப்பு குறைந்த 40 நாடுகளில் பாகிஸ்தானும் இந்த முறை இடம்பெற்றுள்ளது. துருக்கியின் செலாவணி மாற்று மதிப்பு 50 சதவீதமும் பாகிஸ்தானின் மாற்று மதிப்பு 23 சதவீதமும் குறைந்துவிட்டதை ‘தி எகானமிஸ்ட்’ பத்திரிகை பட்டியலிட்டிருக்கிறது.

பல்லாண்டுகளாக பாகிஸ்தானை ஆட்சி செய்த ராணுவ, சிவிலியன் மேட்டுக்குடிகள் அவ்வளவு எளிதாகத் தங்களுடைய நலன்களை விட்டுக்கொடுத்து சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை தரமாட்டார்கள். இரண்டு பெரிய அரசியல் முகாம்களுமே உள்ளூரில், உள்நாட்டில், வெளிநாடுகளில் தங்களுக்கு வேண்டிய குழுக்களுக்குத் தொடர்ந்து சலுகைகளைக் காட்டத்தான் முற்படும். உள்நாட்டு மக்களின் தேவைகளும் நலன்களும் அவற்றுக்கு இரண்டாம்பட்சம்தான். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு என்ன என்று அவர்களிடம் கேட்டால் - மேலும் மானியம், மேலும் இலவசம் என்றுதான் சிந்திப்பார்கள்.

கடன் தருவதற்கு முன்னால் 22 சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த 22 சீர்திருத்தங்களும் புதியவை அல்ல. ஏற்கெனவே அமல் செய்யப்பட்டு தோல்வி கண்டவை. அவற்றை மீண்டும் அமல்படுத்துவதால் பொருளாதாரம் வளர்ச்சிபெறப் போவதில்லை. ஆனால் கடன் தருவதற்கு இந்த நிபந்தனையை ஐஎம்எஃப் கண்டிப்பாக வலியுறுத்தும். இது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதில் பிரச்சினைகளை பல மடங்காக்கிவிடும்.

பாகிஸ்தானுக்குத் தேவை ஐஎம்எஃப் கடனுதவி அல்ல, அதே தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் அல்ல, அதே ஆட்சியாளர்களும் அல்ல. ஒரே பாதையில் சென்றுகொண்டிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவு மாற்றப்பட வேண்டும், புதிய பாதை காணப்பட வேண்டும். புரட்சிகரமான மாற்று வழிகளில் பயணிக்க வேண்டும். அதற்கு வேறு விதமான ஜனநாயக அரசியல் இங்கே தேவை’ என்கிறார் அக்பர் ஜைதி.

பாகிஸ்தான் திட்ட அமைச்சர் அஹ்சான் இக்பால்
பாகிஸ்தான் திட்ட அமைச்சர் அஹ்சான் இக்பால்

அரிய அந்நியச் செலாவணி தேயிலை இறக்குமதியில் அதிகம் செலவாகிறது என்பதற்காக ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் தேநீர் அருந்துங்கள் என்கிறார் பாகிஸ்தான் திட்ட அமைச்சர் அஹ்சான் இக்பால். இந்த நிலையில் ஜைதியின் கட்டுரை அந்நாட்டின் பொருளாதாரம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அண்டை நாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினை நமக்கு வராது என்று நம்பிக்கொண்டிருக்க முடியாது. பிறரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in