
அர்ஜென்டினாவில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் திடீரென தீப்பிடித்ததால் அச்சமடைந்த பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
நேற்று மாலை அர்ஜென்டினா பியூனஸ் அயர்ஸில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. நிதானமான வேகத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்தின் பின்பக்கத்தில் இருந்து கருகல் வாடையுடன் புகை வந்திருக்கிறது. இதை உணர்ந்து கொண்ட பயணிகள் ஓட்டுனரிடம் அது குறித்து தெரிவித்துள்ளனர். அதையடுத்து சுதாரித்த அந்தப் பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக கொண்டு சென்று நிறுத்தினார்.
அத்துடன் உடனடியாக பயணிகளை பேருந்தில் இருந்து இறங்கவும் அவர் கேட்டுக் கொண்டார். கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் தீ பரவியதோடு, எரிபொருள் கசிந்து சாலையிலும் தீ பரவியது. அந்தப் பகுதியே தீ மண்டலமாக காணப்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
பேருந்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் யாருக்கும் எவ்வித காயமும்கூட ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.