உக்ரைன் டு டெல்லி... ஓர் ஆத்மார்த்தமான காதல் கதை!

உக்ரைன் டு டெல்லி... ஓர் ஆத்மார்த்தமான காதல் கதை!

‘இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்பது எழுத்தாளர் பிரபஞ்சனின் பிரபலமான வாசகம். ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலுக்கு நடுவில், காதல் மனதுடன் இந்தியா வந்து சேர்ந்து காதலனைக் கரம்பிடித்த உக்ரைன் பெண் அன்னா ஹோரோடெட்ஸ்காவின் கதையும் அப்படியான ஒரு வசந்த நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.

2019-ல் தன்னந்தனியாக ஒரு சுற்றுலாப் பயணியாக வந்திருந்தார் ஐ.டி ஊழியரும் அழகுக்கலை நிபுணரான அன்னா. அப்போது டெல்லியில் அனுபவ் பஸினைச் சந்தித்தார். வழக்கறிஞரான அனுபவுடனான அவரது நட்பு நாளடைவில் காதலாக மாறியது. 2020-ல் தனது தோழியுடன் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்திருந்த அன்னா, தாஜ்மஹால், ராஜஸ்தான் பாலைவனங்கள் எனச் சுற்றுலா சென்றார். அவர்களுடன் அனுபவும் உடன் சென்றார். அப்போது கரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அனுபவின் பெற்றோருடன் அவரது வீட்டிலேயே தங்கியிருந்தார் அன்னா. பின்னர் உக்ரைன் திரும்பினார். 2021 பிப்ரவரியில் துபாயில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். பின்னர் கீவுக்குச் சென்று அவரைச் சந்தித்துத் திரும்பினார் அனுபவ். கடந்த டிசம்பரில் டெல்லி வந்து சென்றார் அன்னா.

இந்தச் சூழலில், 2022 பிப்ரவரியில் ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியது. தலைநகர் கீவில் வசித்துவந்த அன்னாவை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்று துடித்தார் அனுபவ். உக்ரைனின் அண்டை நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் உதவியை நாடினார். பெரும் முயற்சிகளைத் தொடர்ந்து, கீவிலிருந்து கிளம்பி ஸ்லோவாகியா சென்று பின்னர் போலந்தைச் சென்றடைந்தார் அன்னா. அங்கு ஒரு வாரம் தங்கியவர் பின்னர் பின்லாந்து சென்று ஒருவழியாக மார்ச் 17-ல் அவர் டெல்லியை வந்து சேர்ந்தார். தன் தாய் மற்றும் வளர்ப்பு நாயுடன் கிளம்பியிருந்தாலும் போர்ச்சூழலுக்கு நடுவே அவர்களை அழைத்துவர முடியாததால், தனது பாட்டி வீட்டுக்கு அவர்களை அனுப்பிவிட்டார். திருமணப் பரிசாகப் பாட்டி தந்த சில டி-சர்ட்டுகள், காஃபி தயாரிக்கும் இயந்திரம் ஆகியவற்றை மட்டுமே தன்னுடன் டெல்லிக்கு எடுத்து வந்திருந்தார்.

ஏற்கெனவே இரு குடும்பங்களும் திருமணத்துக்குச் சம்மதித்திருந்த நிலையில், விமான நிலையத்திலேயே முறைப்படி காதலை வெளிப்படுத்தி திருமணத்துக்கு அன்னாவிடம் சம்மதம் பெற்றார் அனுபவ். ஏற்கெனவே செய்திருந்த ஏற்பாட்டின்படி மேளதாளம் முழங்க, அருகில் இருந்த நண்பர்களும் பிற பயணிகளும் அவர்களை வாழ்த்தினர்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்.10) இருவரின் திருமணம், உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் நடந்தது. திருமணப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுபவ், ‘நாம் சந்தித்த நாள் முதல் நமது பயணம் விநோதமானதாக இருந்தது. ஆனால், நம் பாதையில் குறுக்கிட்ட எல்லா தடைகளையும் பிரச்சினைகளையும் நாம் ஒன்றிணைந்து கடந்து வந்திருக்கிறோம். புதிய வாழ்க்கையைத் தொடங்குவதில் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன் கண்ணே’ என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மீண்டும் கீவுக்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகக் கூறும் அன்னா, தன்னுடைய நாயை அங்கிருந்து கொண்டுவர விரும்புவதாகக் கூறியிருக்கிறார். காதலுக்குக் குறுக்கே வர போருக்குக்கூட சக்தி இல்லை என்பதை உறுதியாகச் சொல்கிறது உக்ரைன் பெண்ணின் இந்தக் காதல் பயணம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in