800-க்கும் மேற்பட்டோருக்குக் கரோனா: சிட்னியில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் சொகுசுக் கப்பல்

800-க்கும் மேற்பட்டோருக்குக் கரோனா: சிட்னியில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் சொகுசுக் கப்பல்

சிட்னி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசுக் கப்பலில் உள்ள 800-க்கும் பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருப்பதால் ஆஸ்திரேலியாவில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில், ஒமைக்ரான் வைரஸின் எக்ஸ்பிபி எனும் திரிபின் காரணமாக, சமூகப் பரவல் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலமான நியூ செளத் வேல்ஸின் தலைநகரான சிட்னியில், கார்னிவல் ஆஸ்திரேலியா எனும் கப்பல் நிறுவனத்துக்குச் சொந்தமான மெஜஸ்டிக் பிரின்சஸ் எனும் சொகுசுக் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதில் உள்ள 800-க்கும் மேற்பட்ட பயணிகளுக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

தொற்று வேகமாகப் பரவக்கூடிய ‘டையர் 3’ எனும் நிலை, அக்கப்பலில் நிலவுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தொற்றுக்குள்ளான பயணிகள், கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவர்களால் கண்காணிக்கப்படுவதாக கார்னிவல் ஆஸ்திரேலியா நிறுவனம் தெரிவித்திருக்கிறது. வேறு யாருக்கேனும் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதைக் கண்டறிய தொற்றுப் பரிசோதனை நடத்தப்படுவதாக நியூ செளத் வேல்ஸ் நிர்வாகம் கூறியிருக்கிறது.

2020-ல் கரோனா உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இதே நியூ செளத் வேல்ஸ் துறைமுகத்தில் ஒரு சொகுசுக் கப்பலில் 914 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. அவர்களில் 24 பேர் உயிரிழந்தனர்.

ஏறத்தாழ அதேபோன்ற சூழல் மீண்டும் ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in