குட்நியூஸ்... கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 8 முன்னாள் கடற்படை அதிகாரிகள் இந்தியா திரும்பினர்!

கத்தாரிலிருந்து இந்தியா வந்தடைந்த முன்னாள் கடற்படை வீரர்கள்
கத்தாரிலிருந்து இந்தியா வந்தடைந்த முன்னாள் கடற்படை வீரர்கள்

இத்தாலிக்கு உளவு பார்த்த வழக்கில் கத்தார் ஜெயிலில் அடைக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகள் தாயகம் வந்தடைந்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றினர். இவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் வசிஷ்ட், கமாண்டர்கள் அமித் நாக்பால், பூர்னேந்து திவாரி, சுகுநாகர் பாகலா, சஞ்சீவ் குப்தா, சைலர் ராகேஷ் ஆகிய 8 பேர் இத்தாலி நாட்டுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் அவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 26ல் அந்நாட்டு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த விவகாரம் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், 8 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி, சட்ட ரீதியாக கத்தார் நாட்டு அரசு மற்றும் நீதிமன்றத்தை அணுகியது.

இந்திய கடற்படை வீரர்கள்
இந்திய கடற்படை வீரர்கள்

அதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 8 இந்தியர்களின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று அதிகாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "அல் தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை பணியாளர்கள், கத்தாரில் இருந்து இந்தியா வந்தடைந்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண தண்டனையின் பிடியில் சிக்கியிருந்த தங்களை காப்பாற்றியதற்காக இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்தி மோடிக்கு, கத்தாரிலிருந்து மீட்கப்பட்ட முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in