நியூயார்க் துப்பாக்கிச்சூடு: குற்றவாளி 62 வயது யூடியூபரா?

நியூயார்க் துப்பாக்கிச்சூடு: குற்றவாளி 62 வயது யூடியூபரா?

நியூயார்க் ப்ரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக 62 வயது நபர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

ஏப்ரல் 12-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ப்ரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில், ஒரு நபர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். புகை மற்றும் வாயுக்களைத் தடுக்கும் முகக்கவசம் அணிந்திருந்த அந்த நபர், முதலில் கரும்புகையைக் கிளப்பும் குப்பியை வீசினார். இதையடுத்து பயணிகள் அலறியடித்து ஓடத் தொடங்கியபோது துப்பாக்கியால் 33 முறை சுட்டார். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பின்னர் அங்கிருந்து அவர் தப்பிச் சென்றார். அவரைத் தேடும் பணிகளில் நியூயார்க் நகரப் போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. காயமடைந்தவர்களில் 9 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில், 62 வயதான ஃப்ராங்க் ஜேம்ஸ் எனும் நபரைப் போலீஸார் நேற்று கைதுசெய்தனர். மன்ஹாட்டன் தெருவில் சென்றுகொண்டிருந்த அவரை அடையாளம் கண்டு கைதுசெய்ததாக போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அவர் கைதுசெய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படும் காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.

இதற்கிடையே, இந்தக் குற்றச் செயலில் ஃப்ராங்க் ஜேம்ஸ் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை என அவரது தங்கை கேத்தரீன் ஜேம்ஸ் ராபின்ஸன் கூறியிருக்கிறார். தனது அண்ணனுடன் பேசுவது அரிது என்றாலும் இந்தச் சம்பவத்தில் அவர் கைதுசெய்யப்பட்டது தனக்கு ஆச்சரியமளிப்பதாக கேத்தரீன் தெரிவித்திருக்கிறார். தாக்குதல் நடத்திய நபரின் அடையாளங்களை வெளியிட்ட போலீஸார் அவரது உயரம் 5 அடி 5 அங்குலம் எனத் தெரிவித்திருந்தனர். என் அண்ணன் 6 அடிக்கும் அதிகமான உயரம் கொண்டவர் என அவர் வாதிடுகிறார்.

யூடியூபில் பல்வேறு காணொலிகளைப் பதிவேற்றியிருக்கும் ஜேம்ஸ், அவற்றில் அரசியல் நடப்புகள் குறித்து ஆவேசமான கருத்துகளை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு காணொலியில் நியூயார்க் நகர மேயரை அவர் விமர்சித்திருக்கிறார். விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக நேற்று அவரது யூடியூப் பக்கம் முடக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.