அமெரிக்காவில் பயங்கரம்: சாக்ரமென்டோ துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் பயங்கரம்: சாக்ரமென்டோ துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகரான சாக்ரமென்டோவில் நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் 6 பேர் ஈடுபட்டிருக்கலாம் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

கரோனா பரவல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவுகளில் பெரும்பாலும் வெறிச்சோடிக்கிடந்த சாக்ரமென்டோ நகரில், கடந்த சில நாட்களாகத்தான் இரவில் கேளிக்கை விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் மதுபான விடுதிகளிலிருந்து வெளியே வந்த மக்கள் மீது சிலர் துப்பாக்கியால் சுட்டனர். மொத்தம் 72 ரவுண்டு துப்பாக்கி குண்டுகள் சுடப்பட்டிருப்பதாகவும், கள்ளத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்திருக்கிறது. தெரியவந்திருக்கிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. எனினும், குழுச் சண்டை காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. இரு தரப்புக்கு இடையிலான தாக்குதல் இது என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். லேசாகக் காயமடைந்த பலர் தாங்களாகவே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுவருவதாகவும், மோசமாகக் காயமுற்றவர்கள் மற்றவர்களால் மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

சாக்ரமென்டோ நகரில் இந்த ஆண்டில் நடந்திருக்கும் இரண்டாவது துப்பாக்கிச்சூடு சம்பவம் இது. பிப்ரவரி மாதம் ஒரு தேவாலயத்தில் தனது 3 மகள்கள் உள்ளிட்ட 4 பேரைச் சுட்டுக்கொன்ற ஒரு நபர், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த ஆண்டு, சாக்ரமென்டோ நகரின் சான் ஜோஸ் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

Related Stories

No stories found.