சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது ஆத்திரமடைந்த 5 வயது சிறுவன், சகோதரனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சாண்டா குரூஸ் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுகுறித்த விவரங்களை அப்பகுதி ஷெரீப் வெளியிட்டுள்ளார். அதில், இரட்டையர்களான அந்த சிறுவர்கள் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அதில், ஆத்திரமடைந்த ஒரு சிறுவன், வீட்டிலிருந்த சிறிய கத்தி ஒன்றை எடுத்து வந்து, சகோதரனைக் குத்தியுள்ளான். இதில் அலறி துடித்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி, சகோதரனை, சிறுவன் கொலை செய்ததை உறுதி செய்தனர். ஆனால், வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. கலிபோர்னியா சட்டப்படி 14 வயதுக்கு உட்பட்டோர் செய்யும் குற்றங்கள் தீர விசாரிக்க வேண்டும். தவறான நோக்கத்துடன் குற்றம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அந்த குற்றம் செய்த சிறுவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடாது என கூறுகிறது. அதன் அடிப்படையில் சிறுவன் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என சாண்டா குரூஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். மேலும், சிறுவனின் எதிர்காலம் மற்றும் பெற்றோரின் நலன் கருதி அவர்களது அடையாளங்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.