அடுத்தடுத்து நிலநடுக்கம்... பீதியில் ஆப்கானிஸ்தான் மக்கள்; மலைகளில் கூடாரம் அமைத்து தஞ்சம்

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்BG

ஆப்கானிஸ்தான் நாட்டில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து, தற்காலிக கூடாரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த அக்டோபர் 7ம் தேதி 6.3 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து தாக்கியது. இதில் ஹீரத் மாகாணத்தில் மட்டுமே 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் எனவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அங்கு ஆளும் தாலிபான் அரசு அறிவித்திருந்தது. இந்த கோர சம்பவத்தின் நினைவுகள் மறைவதற்கு முன்பாகவே அந்நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 4.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காலை 6.30 மணி அளவில் உருவாகியுள்ளது.

4.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது
4.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது

கடந்த 11ம் தேதி உணரப்பட்ட 6.1 நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை. ஏற்கெனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அதிகளவில் பெண்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், பாதுகாப்பு கருதியும், அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்களில் இருந்து தப்பிப்பதற்காகவும் மலைப்பகுதிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து ஆப்கானிய மக்கள் வசித்து வருகின்றனர். மீண்டும் தொடரும் நிலநடுக்கங்களால் பெண்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in