ட்ரக்கில் கிடந்த 46 சடலங்கள்... நீரிழப்பால் பாதிக்கப்பட்ட 16 பேர்!

அமெரிக்காவில் தொடரும் சட்டவிரோதக் குடியேற்ற அவலம்
ட்ரக்கில் கிடந்த 46 சடலங்கள்... நீரிழப்பால் பாதிக்கப்பட்ட 16 பேர்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சான் அன்டோனியோ நகரின் புறவழிச் சாலையில் நின்றிருந்த ஒரு ட்ரக்கில் 46 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேர் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். ட்ரக்கில் இருந்தவர்கள் சட்டவிரோதக் குடியேறிகள் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக நேற்று மாலை 6 மணிக்கு ஒரு அரசுப் பணியாளர் அளித்த தகவலின் பேரில் அங்கு போலீஸாரும் அதிகாரிகளும் விரைந்து சென்று உடல்களை மீட்டனர். ட்ரக்கில் இருந்தவர்கள் உதவிகோரி குரல் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 16 பேரும் கடும் வெப்பம் தாளாமல் களைப்பும் சோர்வுமாக நீரிழப்பு பாதிப்புடன் இருந்ததாகவும், அந்த ட்ரக்கில் குடிநீர் பாட்டில்கள் எதுவும் காணப்படவில்லை என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ட்ரக்கின் கதவு திறந்துகிடந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் மெக்ஸிகோவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக மூன்று பேரைக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர் அமெரிக்கக் குடியேற்ற மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள்.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. இம்முயற்சியில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். 2017-ல் இதே சேன் அன்டோனியோ நகரில் ஒரு வால்மார்ட் அங்காடிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ட்ரக்கில் 10 சட்டவிரோதக் குடியேறிகள் சடலமாக மீட்கப்பட்டனர். 2003-ல் சேன் அன்டோனியோவின் தென்கிழக்குப் பகுதியில் ஒரு ட்ரக்கில் 19 பேர் மூச்சுத் திணறி மரணமடைந்தது தெரியவந்தது.

1990-களிலிருந்து பிரம்மாண்டமான ட்ரக்குகளில் சட்டவிரோதக் குடியேறிகளை அடைத்துவைத்து அமெரிக்காவுக்குள் கொண்டு செல்வது வழக்கமாகியிருக்கிறது. டெக்சாஸ் மாநிலத்தின் சான் டியாகோ, எல் பாஸோ வழியாக இப்படிப் பலர் அமெரிக்காவுக்குள் நுழைந்திருக்கின்றனர். இதற்காக ஆயிரக்கணக்கான டாலர்களையும் சட்டவிரோதக் கடத்தல்காரர்களிடம் கட்டணமாகச் செலுத்துகின்றனர்.

2001-ல் நடந்த 9/11 தாக்குதல்களுக்குப் பின்னர் எல்லைப் பகுதிகளில் கடும் கண்காணிப்பும் கட்டுப்பாடும் அமல்படுத்தப்பட்டதால், இப்படி பிரம்மாண்ட ட்ரக்குகளில் அளவுக்கு அதிகமான நபர்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி கடும் இடநெருக்கடிக்கு இடையே ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். வெப்பமான நாட்களில் வாகனங்களுக்குள் அனல் அதிகமாக இருக்கும். புழுக்கமும் அதிகரிக்கும். இப்படியான சூழலில் வாகனங்களில் அடைத்துவைக்கப்பட்டு கொண்டுவரப்படுபவர்களில் பலர் இப்படி பரிதாபமாக உயிரிழக்கிறார்கள்.

இறந்தவர்கள் எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனும் விவரம் இதுவரை வெளியாகவில்லை. தகவல் அறிந்த மெக்சிகோ வெளியுறவுத் துறை அமைச்சர் மார்செலோ எப்ரார்டு, சம்பவம் நடந்த இடத்துக்கு மெக்சிகோ பிரதிநிதி அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in