
இந்தோனோஷியாவில் 41 வயதான பெண் ஒருவர், தனது தோழியின் மகனான 16 வயது சிறுவனை மணந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
இந்தோனேஷியாவின் மேற்கு கலிமந்தனைச் சேர்ந்த மரியானா என்ற பெண்ணுக்கு, கெவின் என்ற பையனை அவருடைய சிறுவயதில் இருந்தே பழக்கம். அச்சிறுவன் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தனில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மரியானாவின் கடைக்கு தின்பண்டங்கள் வாங்க அடிக்கடி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே கெவினின் தாயான 37 வயதான லிசாவின் நல்ல தோழியாக இருந்துவந்துள்ளார் மரியானா. இருவரது வீடும், அருகாமையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் லிசாவின் மகன் கெவின் மீது மரியானாவிற்கு காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்லும் நிலையில் அந்த மைனர் பையனுக்கும், 41 வயது பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. கெவின் தன்னை விட 25 வயது மூத்த பெண்ணான மரியானாவை மணந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தாய் லிசாவும் கூறியுள்ளார். அந்த இருவரும் ஜோடியாக நிற்கும் புகைப்படம் ஒன்றை லிசா பகிர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
மரியானாவிடம் உள்ள சொத்திற்காகத் தான் அவர் தனது மகனை திருமணம் செய்து கொடுத்ததாக வெளியான தகவல்களை, வெறும் வதந்தி என்று கூறி மறுத்துள்ளார் லிசா. மேலும் இந்த திருமணத்திற்கு கெவின் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில்தான், அந்த தம்பதி திருமணமான நான்காவது நாளில் பிரித்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் காதல் கதை பொதுமக்களிடையே பேசுபொருளாக மாறி, மேற்கு கலிமந்தனில் உள்ள இந்தோனேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (KPAI) கவனத்திற்கு இந்த விஷயம் சென்றுள்ளது.
இந்தோனேசியாவில் பெற்றோரின் அனுமதியுடன் ஆண் குழந்தைகள் மற்றும் சிறுமிகள் திருமணம் செய்துகொள்ளும் வயது 19. ஆகையால், 19 வயதாகும் வரை அந்த இருவரும் தனியாக இருக்கவேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்தோனேஷியா நாட்டின் சட்டதிட்டங்கள்படி ஒரு ஆண் மற்றும் பெண், 21 வயதை அடையும்போது பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்த வழக்கில் மரியானா மீது, மைனர் பையனை திருமணம் செய்ததற்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால் பீதியான லிசா, மரியானாவை தற்போது விவாகரத்து செய்துவிடுமாறு மகனிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.