40 மணி நேரம், 23 நிகழ்ச்சிகள்: ஜப்பான் செல்லும் மோடியின் பயணத் திட்டங்கள்!

40 மணி நேரம், 23 நிகழ்ச்சிகள்: ஜப்பான் செல்லும் மோடியின் பயணத் திட்டங்கள்!

குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கும் இரண்டாவது மாநாடு மே 24-ல் டோக்கியோவில் நடைபெறவிருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். ஜப்பான் பிரதமரின் அழைப்பின்பேரில் செல்லும் இந்தப் பயணத்தின்போது 40 மணி நேரத்தில் மொத்தம் 23 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருக்கிறார்.

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பான குவாட், ட்ரம்ப் ஆட்சிக்காலத்தின்போது ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் இதுவரை மூன்று மாநாடுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இதில் இரண்டு மாநாடுகள் காணொலிச் சந்திப்பின் வழி நடத்தப்பட்டன.

குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்ற முதல் மாநாடு 2021 செப்டம்பர் 24-ல் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையில் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸன், ஜப்பானின் அப்போதைய பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், குவாட் அமைப்பின் இரண்டாவது நேரடி மாநாட்டில் மோடி கலந்துகொள்கிறார். இந்தப் பயணத்தில் ஓர் இரண்டு இரவுகள் விமானத்திலும் ஓர் இரவு டோக்கியோவிலும் அவர் கழிக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர், ஜப்பான் பிரதமர், ஆஸ்திரேலிய பிரதமர் ஆகியோருடன் மோடி தனித்தனியாகப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜப்பானைச் சேர்ந்த 36 சிஇஓ-க்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் மோடி, ஜப்பானில் வசிக்கும் இந்தியர்களையும் சந்திக்கவிருக்கிறார்.

தனது ஜப்பான் பயணத்தின்போது, இந்தோ-பசிபிக் பொருளாதாரக் கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) எனும் புதிய திட்டத்தையும் ஜோ பைடன் தொடங்கிவைக்கிறார். இதில் ஜப்பான் பிரதமரும் கலந்துகொள்ளவிருக்கும் நிலையில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த பிற நாடுகளின் தலைவர்கள் காணொலிச் சந்திப்பின் மூலம் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in