
இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இஸ்ரேல் தினமும் 4 மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. காஸாவை இரண்டாக பிரித்து, வடக்கு காஸாவை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. தரைவழி தாக்குதல் காரணமாக அங்கு வசிக்கும் பாலஸ்தீனர்கள் மிகப்பெரிய அளவில் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வடக்கு காஸாவிலேயே தங்கியுள்ளனர். ஆனால், தெற்கு காஸாவிற்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த இரண்டு தினங்களாக ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் நடைபயணமாக தெற்கு காஸாவை சென்றடைந்து வருகிறார்கள்.
வடக்கு காஸாவில் உள்ளவர்கள் இனிமேல் வீடுகளில் தங்கியிருந்தால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை எனக் கருதி மருத்துவமனைகள், ஐ.நா. அமைத்துள்ள முகாம்களுக்கு இடம் பெற முடிவு செய்துள்ளனர். அதன்படி காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான ஷிபாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால் சுமார் 10 ஆயிரம் பொதுமக்கள் அங்கு தஞ்சம் அடைந்துள்ளதால் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக, அங்கிருந்து தெற்கு காஸாவிற்கு சென்றுள்ள மூன்று பேர் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ள இடத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலேயே அமைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
இதனிடையே, இஸ்ரேல் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இஸ்ரேல் தினமும் நான்கு மணி நேர போர் நிறுத்தத்திற்கு சம்மதித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் அதை ஏற்றுக்கொண்டதாக உறுதியான தகவல் வெளியாகவில்லை. இதனால் பாலஸ்தீன மக்கள் அஞ்சியபடியே வாழ்ந்து வரும் அவலை நிலை நீடித்து வருகிறது. காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் செய்யவும், பிணைக்கைதிகளை விடுவிக்கவும் 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.