அதிகரிக்கும் வேலையின்மை... 39 ஆயிரம் பணியிடத்துக்கு 25 லட்சம் பேர் போட்டி!

சீன மாணவர்கள்
சீன மாணவர்கள்

சீனாவில் வேலையின்மை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் 39,600 காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 25 லட்சம் பேர் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். 

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களுக்கு மாற்றாக  சீனா விளங்குகிறது. சீன நிறுவனங்களின் பொருட்கள் இல்லாத நாடே கிடையாது எனலாம். அந்த அளவுக்கு நாட்டு மக்களின் எண்ணிக்கையை, உற்பத்தி சக்தியாக மாற்றி வெற்றி கண்டது சீனா. ஆனால் அண்டை நாடுகளுடன் பஞ்சாயத்து, உளவு குற்றச்சாட்டுகள், சீன பொருட்கள் மீதான நம்பகத்தன்மை இல்லாதது போன்றவை சீனாவுக்கு பின்னடைவாகத்தான் இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது வேலையின்மை விவகாரமும் அங்கு பெரிதாக  உருவெடுத்திருக்கிறது. அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக சீனா இருந்தாலும், கொரோனா தொற்று பாதிப்பின் போது ஏற்பட்ட இழப்பிலிருந்து அந்நாடு இன்னும் முழுமையாக மீளவில்லை. இதற்கு சமீபத்தில் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வுகள்  உதாரணமாகியிருக்கிறது.

நாடு முழுவதும் 237 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டன. மொத்தம் 39,600 காலிப்பணியிடங்களுக்கு 25 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதாவது ஒவ்வொரு காலிப்பணியிடத்திற்கும் 77 பேர் போட்டியிடுகிறார்கள். இது அந்நாட்டில் நிலவும் வேலையின்மை பிரச்சினையை தெளிவாக காட்டுவதாக  கூறப்படுகிறது.

அரசு வேலைக்கு இவ்வளவு பேர் ஆர்வமாக முன் வந்திருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இங்குள்ள தனியார் நிறுவனங்களில் திடீரென ஆட்குறைப்பு நடக்கிறது. அதுமட்டுமல்லாது ஊதிய முரண்பாடுகள் அதிகம் இருக்கின்றன. எனவேதான் அரசு வேலையின் பக்கம் மக்கள் கவனத்தை திருப்பியுள்ளார்கள். குறைந்தபட்ச ஊதியத்தை உத்தரவாதப்படுத்தும் அரசு வேலையின் பக்கம் சீனர்கள் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கெனவே அங்கு உழைப்பு நேரம் உயர்த்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல தொழிலாளர் சட்டங்கள் அந்நாட்டில் உறுதியாக கடைபிடிக்கப்படுவதால் அந்நிய மூலதனம், அந்நிய நிறுவனங்கள் சீனாவில் தொழில் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன.

சமீபத்தில் ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் சீனாவுக்கு மாற்றாக இந்தியா, தென் அமெரிக்க நாடுகளை நோக்கி நகர்ந்தது, சீனாவுக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கையில் சில ஆயிரம் அரசு காலிப்பணியிடங்களுக்கு லட்சக்கணக்கில் இளைஞர்கள் தேர்வு எழுதுவது, வேலையின்மை குறித்த அச்சத்தை மேலும் அதிகரிக்கும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


HBD YamiGautam | சர்ச்சைகளை சாதனைகளாக்கிய பஞ்சாபி பொண்ணு!

கனமழை... புயல்... 1.5 லட்சம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிப்பு!

ராணுவவீரர் மீது கொலைவெறி தாக்குதல்; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!

ஐஐடி மாணவர் தற்கொலையில் திடீர் திருப்பம்: பேராசிரியர் பணியிடை நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 9.13 லட்சம் விண்ணப்பம்: தேர்தல் ஆணையம் தகவல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in