
இஸ்ரேல் நாட்டில் போர் காரணமாக சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களில் 197 பேரை மூன்றாவது விமானம் மூலம் இந்திய அரசு பத்திரமாக நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கிருக்கும் இந்தியர்களை மீட்டு வர இந்திய அரசு சார்பில் ஆப்ரேஷன் அஜய் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி ஏற்கெனவே 2 விமானங்கள் மூலம் 447 பேரை இந்திய அரசு பத்திரமாக மீட்டு நாட்டிற்கு திரும்ப அழைத்து வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக மூன்றாவது விமானம் மூலமாக 197 இந்தியர்களை இந்தியாவிற்கு பத்திரமாக மத்திய அரசு அழைத்து வந்துள்ளது.
இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அனைவரையும் மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் கடைசி இந்தியரை நாட்டிற்கு அழைத்து வரும் வரை ஆபரேஷன் அஜய் திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.