1200 ஆண்டுகள் பழமையான பாகிஸ்தான் இந்துக்கோயில்: மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது!

1200 ஆண்டுகள் பழமையான பாகிஸ்தான் இந்துக்கோயில்: மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது!

பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்துக் கோயிலான வால்மீகி மந்திர் விரைவில் புதுப்பிக்கப்படும் என்று சிறுபான்மை வழிபாட்டுத் தலங்களைக் கண்காணிக்கும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

புகழ்பெற்ற அனார்கலி பஜார் லாகூர் அருகே அமைந்துள்ள வால்மீகி மந்திர் கோவிலை ஒரு கிறிஸ்தவ குடும்பத்திடமிருந்து எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரியம் (ETPB) கடந்த மாதம் மீட்டெடுத்தது. கிருஷ்ணர் கோயிலுக்கு அடுத்ததாக லாகூரில் செயல்படும் ஒரே இந்துக் கோயில் வால்மீகி மந்திர் ஆகும். இந்து மதத்திற்கு மாறியதாகக் கூறும் கிறிஸ்தவக் குடும்பம், கடந்த இருபதாண்டுகளாக வால்மீகி கோயிலை கைப்பற்றி வைத்திருந்தது.

இது தொடர்பாக பேசிய எவாக்யூ டிரஸ்ட் சொத்து வாரிய அதிகாரி அமீர் ஹாஷ்மி, கோவிலின் நிலம் வருவாய் பதிவேட்டில் ETPB க்கு மாற்றப்பட்டது, ஆனால் 2010-2011 ல் ஒரு கிறிஸ்தவ குடும்பம், சொத்தின் உரிமையாளர் என்று கூறி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும் இந்த கோயில் வால்மீகி இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானது எனவும் நீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கின் முடிவில், இந்த தவறான உரிமை கோரல்களுக்காக நீதிமன்றம் மனுதாரரை கண்டித்தது என்று கூறினார். மேலும், இனி வரும் நாட்களில் வால்மீகி கோயில் சிறப்பு திட்டத்தின்படி புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பின்னர் 100 க்கும் மேற்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவ தலைவர்கள் இன்று வால்மீகி கோயிலில் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

தற்போது பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன் தனது பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது, இதில், இந்து சமூகத்திற்கு சிறந்த வழிபாட்டு வசதிகளை வழங்கும் விதமாக கோயிலை புதுப்பிக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. ஆனால் வழக்கு காரணமாக நகரின் மையத்தில் மில்லியன் கணக்கான மதிப்புள்ள 10 மார்லா நிலத்தில் உள்ள கோயிலில் மறுசீரமைப்பு பணிகளைத் தொடங்க முடியாமல் இருந்தது. தற்போது வழக்கு முடிவுக்கு வந்துள்ளதால் விரைவில் புதுப்பிப்பு பணிகள் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவிற்கு குடிபெயர்ந்த சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் விட்டுச் சென்ற கோவில்கள் மற்றும் நிலங்களை ETPB கவனித்து வருகிறது. இது பாகிஸ்தான் முழுவதும் 200 குருத்வாராக்கள் மற்றும் 150 கோவில்களை பராமரித்து வருகிறது.

முன்னதாக 1992 -ல், இந்தியாவில் பாபர் மசூதி இடிப்பினால் கோபமடைந்த கும்பல் ஆயுதங்களை ஏந்தியபடி வால்மீகி கோயிலுக்குள் நுழைந்து கிருஷ்ணர் மற்றும் வால்மீகி சிலைகளை உடைத்து, சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தங்கத்தை கொள்ளையடித்தது. கோயில் கட்டிடம் தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள கடைகளும் தீப்பிடித்து எரிந்ததால், தீயை அணைக்க பல நாட்கள் ஆனது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in