அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 12 பேர் காயம்

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: 12 பேர் காயம்

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தின் தலைநகரான கொலம்பியாவில் உள்ள கொலம்பியானா சென்டர் ஷாப்பிங் மாலில், நேற்று மதியம் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என 3 பேரைப் போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். அவர்கள் ஆயுதம் ஏந்திய நிலையில் போலீஸாரிடம் பிடிபட்டிருக்கின்றனர். அவர்களில் குறைந்தபட்சம் ஒருவர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் எனப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர். மூவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதால், ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் இது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கவே வாய்ப்பு அதிகம் என்றும் போலீஸார் கூறுகின்றனர்.

இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் 6 பேர் அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாகவே இருக்கிறது.

ஏப்ரல் 12-ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தின் ப்ரூக்ளின் சுரங்க ரயில் நிலையத்தில், ஒரு நபர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். புகை மற்றும் வாயுக்களைத் தடுக்கும் முகக்கவசம் அணிந்திருந்த அந்த நபர், முதலில் கரும்புகையைக் கிளப்பும் குப்பியை வீசினார். இதையடுத்து பயணிகள் அலறியடித்து ஓடத் தொடங்கியபோது துப்பாக்கியால் 33 முறை சுட்டார். இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை நடத்தியதாக , 62 வயதான ஃப்ராங்க் ஜேம்ஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டார். கறுப்பினத்தைச் சேர்ந்த அவர், நியூயார்க் நகர நிர்வாகத்துக்கு எதிராக யூடியூபில் காணொலிகளைப் பதிவேற்றிவந்தவர் என விசாரணையில் தெரியவந்தது.

ஏப்ரல் 12-ல் தெற்கு கரோலினாவில் ஒரு பல்பொருள் அங்காடியின் உரிமையாளர், திருட்டில் ஈடுபட்ட இருவரைத் துப்பாக்கியால் சுட முயன்றபோது தவறுதலாக 9 வயது சிறுமி மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

அதேபோல், ஏப்ரல் 13-ல் ப்ரூக்ளினின் அட்லான்டிக் டெர்மினல் மால் அருகே இரு குழுக்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.

கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகரான சாக்ரமென்டோவில் ஏப்ரல் 3 இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in